Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னியில் 3000 குடும்பங்கள் இடப்பெயர்வு :: பாரிய நெருக்கடி

வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மேலும் 3000 குடும்பங்கள் இடம்பெயரும் அபாயம் தோன்றியுள்ளது. மோதல்கள் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் மத்திய பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் பொது இடங்களிலும் திறந்த வெளிகளிலும் தங்கியுள்ளனர் என்று ஐ.நா. முகவர் நிறுவனங்களின் நிலையியற் குழு தெரிவித்துள்ளது.இடம்பெயர்ந்த மக்களுக்கு ஐயாயிரம் தற்காலிக கூடாரங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட செயலகம் கோரியுள்ளது என்றும் இந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து ஐ.நா. முகவர் நிறுவனங்களின் நிலையியற்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜூன் மாதத்திற்குப் பின்னர் 18 ஆயிரத்து 970 குடும்பங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்து 119 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து கிளிநொச்சியில் உள்ள இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒருலட்சத்து 34 ஆயிரத்து 868 ஆகக் காணப்படுகின்றது. பொது இடங்களிலும் திறந்த வெளிகளிலும் தங்கியுள்ள மக்களுக்கான 5 ஆயிரம் தற்காலிக வீடுகள் தேவைப்படுகின்றது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் நிலைமை, தொடரும் இராணுவ நடவடிக்கைகள், ஆட்டிலறித் தாக்குதல்கள் காரணமாகப் பதற்றமானதாகவும், நிச்சயமற்றதாகவும் காணப்படுகின்றது. வன்னிக்குள் நிலக்கண்ணிவெடித் தாக்குதல்களும் விமானத் தாக்குதல்களும் இடம்பெறுகின்றன. மல்லாவி அரச மருத்துவமனை தற்போது கிளிநொச்சி பழைய பொது மருத்துவமனைக் கட்டிடத்தில் இயங்குகின்றது. அக்கராயன் மற்றும் வன்னேரி மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட அதன் 200 ஊழியர்களைத் தங்க வைப்பதற்கான தங்குமிடங்கள் தேவையெனச் சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், இந்த மருத்துவமனைகளுக்கான 150 படுக்கைகளும் அவசியமாகவுள்ளன. இந்த மருத்துவமனைகள் இடமாற்றப்பட்டதால் படுக்கைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பூநகரிப் பகுதியில் இடம்பெறும் ஷெல் தாக்குதல் மற்றும் அருகில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக முட்கொம்பன், அரசபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வெளியேறத் தொடங்கியுள்ளனர். மேலும் மூவாயிரம் குடும்பங்கள் இடம்பெயரலாம் எனக் கிளிநொச்சிப் பிரதேச செயலகம் தெரிவிக்கின்றது. இவர்களில் ஏற்கனவே வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்களும் உள்ளனர்.

ஜூன் மாதத்திற்குப் பின்னர் 18 ஆயிரத்து 970 குடும்பங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்து 119 பேர் இடம்பெயர்ந்து கிளிநொச்சிக்குள் வந்துள்ளனர். கிளிநொச்சியில் தற்போது உள்ள இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒருலட்சத்து 34 ஆயிரத்து 68 பேர் எனச் செயலகம் தெரிவிக்கின்றது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள 22 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சிக்கு மேலகதி மருத்துவப் பொருட்களை வழங்க வேண்டும் எனப் பிரதேச சுகாதார அதிகாரிகள் கேட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கான மாதாந்த எரிபொருள் விநியோகம் குறைக்கப்பட்டமை கவலைக்குரிய விடயமாகக் காணப்படுகின்றது. ஆகஸ்ட் 21ஆம் திகதி இடம்பெற்ற இடம்பெயர்ந்தோர் நிலைமை தொடர்பான கூட்டத்தில், பொது இடங்களிலும், திறந்த வெளிகளிலும் தங்கியுள்ள மக்களிற்கு 5,000 தற்காலிகத் தங்குமிடங்கள் தேவையென அரச அதிபர் தெரிவித்தார்.

இவற்றில் 1,700 தற்காலிக இருப்பிடங்களை ஏற்படுத்திக் கொடுக்க மனிதாபிமான அமைப்புகள் இணங்கியுள்ளன. இவற்றிற்கான இடங்களைத் தெரிவு செய்யும் பணி இடம்பெறுகின்றது. கண்டாவளையில் 187 ஏக்கர் இடம் இனங்காணப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்குப் பின்னர் பூநகரி, கரச்சி உதவி அரச அதிபர் பிரிவுகளிலிருந்து 33 பாடசாலைகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த வாரம், சத்திரசிகிச்சைக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட மருந்துப் பொருட்கள் அடங்கிய லொறியொன்று வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆயிரத்து 250 லீற்றர் எரிபொருள், 2 ஆயிரத்து 850 லீற்றர் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தொடர்ச்சியாக குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து பேணப்பட வேண்டிய மருந்துப் பொருட்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

 

Exit mobile version