Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் பணியாற்றிய மருத்துவர்களை விடுவிக்க அம்னஸ்டி அவசர கோரிக்கை.

 வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியின் மீது சிறிலங்க இராணுவம் நடத்திய தாக்குதலில் படுகாயமுற்ற அப்பாவித் தமிழ் மக்களுக்கு மருத்துவம் பார்த்த மூன்று தமிழர் மருத்துவர்களை உடனடியாக விடுவிக்குமாறு சிறிலங்க அரசிற்கு சர்வதேச மன்னிப்புப் பேரவை அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
 இவர்களில் முல்லைத் தீவு மண்டல சுகாதார சேவை இயக்குனரான மருத்துவர் டி. வரதராஜா சிறிலங்க இராணுவத் தாக்குதலில் படுகாயமுற்ற நிலையில், அவரை ஓமந்தையில் இருந்து பெயர் குறிப்பிடாத ஒரு இடத்திற்கு சிறிலங்க விமானப் படை கொண்டு சென்றுள்ளது. இதுவரை அவரைப் பற்றிய எந்தத் தகவலும் அவரது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

கிளிநொச்சி மாவட்ட மண்டல சுகாதார இயக்குனரான மருத்துவர் சத்தியமூர்த்தியும், மற்றொரு மருத்துவரான சண்முகராஜாவும் ஓமந்தையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களைப் பற்றியும் இதுவரை எந்தத் தகவலும் அவரது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

இவர்கள் இருவரையும் கொழும்புவிற்குக் கொண்டு சென்று அங்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவு (Terrorist Investigation Division – TID) விசாரித்து வருவதாக தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக கூறியுள்ள சர்வதேச மன்னிப்புப் பேரவை (Amnesty International), இவர்கள் மூவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு சிறிலங்க அதிபருக்கும், பிரதமருக்கும், காவல் துறை தலைமை இயக்குனருக்கும், பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபய ராஜபக்சவிற்கும் அவசர கோரிக்கை விடுத்து அவசர நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளது.

வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியின் மீது சிறிலங்க இராணுவம் நடத்திய தாக்குதலிற்கும், மனித உரிமை மீறல் உள்ளிட்ட மற்ற போர் விதிமுறை மீறல்களுக்கும் இவர்களே சாட்சிகளாவர். அதுமட்டுமின்றி, அங்கு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட பல விவரங்களை பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களுக்கு அளித்தவர்களும் இவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருந்த மக்களின் நிலை குறித்து ஊடகங்களுக்குத் தகவல்களை அளித்ததற்காக பழிவாங்கும் நோக்குடன் இவர்களை அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனரோ என்ற அச்சம் உள்ளதென கூறியுள்ள அம்னஸ்டி, சாதாரண மக்களின் நிலை குறித்தும், மருத்துவ வசியின்றி காயமுற்றவர்கள் இறக்க நேர்ந்தது குறித்தும், போராளிகளற்ற மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளின் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் அவர்கள் அளித்த அறிக்கைகள் குறிப்பிடத்தக்கதாகும் என்று கூறியுள்ளது.

சிறிலங்க இராணுவம் நிகழ்த்திய போர் குற்றங்களுக்கு இவர்களே முக்கிய சாட்சிகள் என்பதால் அவர்களை உயிருடன் மீட்பது உலகத்திற்கு உண்மையை கொண்டு வர அவசியமானதாகும் என்று மக்கள் சமூக உரிமைப் பேரவை (People Union for Civil Liberties – PUCL) கூறியுள்ளது.

அவர்களை எந்த வித தகவலும் இன்றி கைது செய்துள்ள பாதுகாப்புப் படையினர் அவர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்திடல் வேண்டும் என்றும்;

தங்களை கைது செய்துள்ளதை எதிர்த்து அவர்கள் தங்களுடைய வழக்கறிஞர்களை அணுகி சட்ட ரீதியான நிவாரணம் பெறவும், அவர்களை நிபந்தனையின்றி அவரது உறவினர்கள் சந்திக்கவும்;

உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை அவர்கள் பெறவும்;

அவர்கள் மீது எந்தக் குற்றச் சாற்றும் இல்லாத நிலையில் அவர்களை விடுவிக்குமாறும், அப்படி யாதேனும் இருக்கம் நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துமாறும் அம்னஸ்டி கேட்டுக் கொண்டுள்ளது.

சிறிலங்க அரசிற்கு விடுத்துள்ள இந்த வேண்டுகோளை உடனடி நடவடிக்கை (URGENT ACTION) என்று தலைப்பிட்டு தனது வாஷிங்டன் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பியுள்ளது.

சிறிலங்க இராணுவத்தின் கடும் தாக்குதலிற்கு இடையேயும் தங்கள் உயிரை பணயம் வைத்து படுகாயமுற்ற அப்பாவித் தமிழர்களுக்கு மருத்துவம் பார்த்த சிறிலங்க அரசு மருத்துவர்களான டி. சத்தியமூர்த்தி, டி. வரதராஜா, வி. சண்முகராஜா ஆகியோர், போரின் இறுதி கட்டத்தில் தாக்குதல் தீவிரமானதையடுத்து மே 15ஆம் தேதியன்று அங்கிருந்து வெளியேறிய மக்களுடன் வெளியேறினார்கள். ஓமந்தை சோதனை சாவடியில் அவர்களை சிறிலங்கப் படையினர் கைது செய்தனர்.

Exit mobile version