தமிழ் மக்கள் மீது பேரினவாத இலங்கை அரசு நடத்திய இறுதித்தாக்குதலின் போது ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சர்வதேச அளவிலும் ஆசியாவிலும் மனித உரிமை ஆர்வலர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளையோ குரல்களையோ வல்லாதிக்க நாடுகள் கண்டு கொள்ள வில்லை என்பதோடு இலங்கையை சர்வதேச நெருக்குவாரங்களில் இருந்து இந்தியாவும் சீனாவுமே பாதுக்காத்து வந்தது. இனக்கொலை தொடர்பாக ஐநாவின் மயான அமைதி குறித்து உலகெங்கிலும் பல குற்றச்சாட்டுகள் எழ நீண்ட மௌனத்தின் பின்னர் இப்போது போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க ஐநா மூவர் குழுவை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தக்
குழுவில் மொத்தம் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் – முன்னாள் இந்தோனேசிய அரசு வழக்கறிஞர் மர்சுகி தருஸ்மேன், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர். கடந்த வாரம் ஐ.நா. அரசியல் விவகாரப் பிரிவு இணைச் செயலாளர் லின் பாஸ்கோ இலங்கைக்குச் சென்றார். அப்போது அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார். பின்னர் போர்நடந்த பகுதிகளையும் பார்வையிட்டு விட்டுத் திரும்பினர். இந்தநிலையில் போர்க்குற்ற விசாரணைக் குழுவை ஐ.நா. அமைத்துள்ளது. ஆனால் சர்வதேச அளவில் இலங்கை தொடர்பாக ஐநா மீது எழுந்துள்ள அதிருப்திகளைக் களையும் நோக்கில் ஒரு கண் துடைப்புக்காகவும் இக்குழு அமைக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆக இதை சாத்தியமாக்கும் வகையில் புலத்து மக்கள் மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுத்து ஐநா போன்ற நிறுவனங்களுக்கு மேலதிக நெருக்கடிகளை உருவாக்கவும் செய்யலாம். இந்நிலையில் ஐநாவின் மூவர் குழு பற்றி கருத்துத் தெரிவித்துள்ள ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புகவெல்ல “ இது தேவையில்லாதது, ஏற்றுக் கொள்ளமுடியாதது. இலங்கை போன்ற சுதந்திரமான, இறையாண்மை மிக்க நாடு இதை ஏற்றுக் கொள்ளாது என்றார்.