Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வத்சாவுக்கு நிகழ்ந்த கொடூரம் : முதலும் அல்ல! முடிவும் அல்ல! கிழக்கின் அவலம் : தரணிகா

திருகோணமலையிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள பாலையுற்று என்ற புறநகர்க் கிராமத்தில் வசிக்கும் ரெஜி (கட்டாரில் வேலை பார்க்கிறார்.) கிருபராணி தம்பதியரின் புதல்வி வத்சா (வயது 6), புனித மரியாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக படித்துக்கொண்டு இருந்த வேளையில் 11.03.09 அன்று கடத்தப்பட்டு, மிக கோரமாக கொலை செய்யப்பட்டு, உடல் துண்டாடப்பட்ட நிலையில் ஒரு சாக்கில் மூட்டையாக கட்டப்பட்டு வீதியோரத்தில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.  இக்கொடூர நிகழ்வு திருமலையில் மட்டுமல்ல உலகெங்கும் பரந்துள்ள தமிழ் மக்களையும் உலுக்கி உள்ளது.

சம்பவத்தின் விபரமானது:

பாலையுற்றில் வசிக்கும் வத்சா வீட்டினருடன் ரி.எம்.வி.பி உறுப்பினரான மேவின் என்ற இளைஞர் நன்றாகவே சிறிது காலம் பழகியுள்ளார். இவருக்கு இன்ரநெற், கொம்பியுட்டர் கையாளத் தெரியுமென்ற நிலையில் அவ்வீட்டினருடன் இதைக் காரணம்காட்டியே நண்பராக பழகியுள்ளார்.

வத்சா நாளாந்தம் 3 மைல் தூரத்திலுள்ள பாடசாலைக்கு “ஆட்டோ”விலேயே பெற்றோரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று மேவின் பாடசாலையிலிருந்து வத்சாவை அழைத்துச் செல்ல முனைகையில் அப்பாடசாலையின் ஆசிரியர் தடுத்த நிலையிலும் வத்சா ‘எனக்கு இந்த மாமாவைத் தெரியும், இவர் எங்கள் வீட்டு மாமா தான்’ என்று சொல்லியதில் மேவினுடன் குழந்தை செல்லவதற்கு ஆசிரியர் அனுமதித்தார். ஆனால் சிறிது நேரத்தில் தாயார் சிறுமியைக் காணவில்லையென தேடத்தொடங்கியதில் பாடசாலை மூலம் பொலிஸாரிடம் புகார் கொடுத்து தீவிரமாக தேடத்தொடங்கினர்.

இந்நிலையில் வத்சாவைக் கடத்திய நபர்கள் தொலைபேசியில் சிறுமியின் தாயாரினைத் தொடர்பு கொண்டு கப்பமாக 3 கோடி ரூபா பணம் கேட்டனர். பணம் தராவிட்டால் குழந்தையை கொல்லுவதாக மிரட்டியும் உள்ளனர். தொலைபேசி மூலம் தயார் மிரட்டப்பட்டு மிக அலைக்கழிக்கப்பட்டு உள்ளார். அதன்பின் தாயார் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என கடத்தல்காரர்களுடன் பேசி இறுதியில் 50 லட்சம் பணம் தருவதாக தாயார் ஒப்புக்கொண்டார்.

இதே நேரம் பாடசாலையிலும் அலுவல்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வத்சாவை பலவிதத்திலும் தேடத் தொடங்கினர். பாடசாலையில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறத் தொடங்கின.

வத்சாவை பாடசாலையில் இருந்து கடத்திச் சென்ற மேவின் என்ற ரி.எம்.வி.பி உறுப்பினர் தனது நண்பர்கள் அறுவரிடம் குழந்தையை கையளித்த நிலையில் எல்லோருமாக சேர்ந்து குழந்தையை ஒளித்து திரிந்தனர். இதில் ஒரு கட்டத்தில் சிறுமி அடம் பிடிக்கவே சிறுமியின் காலுறையைக் கழட்டி வாயினுள் அடைத்து கை கால்கள் கட்டப்பட்டு, பின்னர் பிளாஸ்ரர் ஒட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் வத்சா மரணம் அடையவே சிறுமியைக் கோரமாக வெட்டி சாக்குப் பையில் கட்டி “புதிய சோனத்தெரு” (பள்ளிவாசலுக்கு முன் வீதியில்)வாய்க்கால் ஒன்றினுள் குப்பையுடன் குப்பையாக போட்டுள்ளனர்.

வத்சா கொல்லப்பட்ட பின்னரும் கொலையாளிகள் வத்சாவின் தாயாரைத் தொடர்ந்தும் மிரட்டி பணத்தைப் பெற்றுக்கொள்ள ஓடித்திரிந்துள்ளனர்.

குப்பைகளுடன் போடப்பட்ட இந்தப்பை தேடுவாரற்ற நிலையில் 3 நாட்களாக வீதியோர வாய்க்காலில் மழையிலும் தண்ணியிலும் கிடந்தது. 3வது நாள் “நகரசுத்தி தொழிலாளி” வீதியைத் துப்பரவு செய்கையில் சாக்குப் பையை கண்டு அதனை அகற்ற எடுத்த போது கையொன்று தெரியவே அத்தொழிலாளி பதற்றமடைந்து பொலிஸிற்கு தகவல் வழங்கினார்.

பொலிஸ் விசாரணைகளில் அது காணாமல் போய் தேடப்பட்ட வத்சாவின் உடல் என்பது நீதிவான் இளந்திரையன் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டது. பொலிஸாருக்கு புகார் கொடுத்த வத்சாவின் பாடசாலை “கன்னியாஸ்திரிகள்” இருவர் அதனை உறுதிப்படுத்தினர்.

பிரேத பரிசோதனையின் பின் வத்சாவின் உடல் தாங்கிய பேழை சீல்வைக்கப்பட்டது. வத்சாவின் உடல் படுகொலை செய்யப்பட்ட பின் துண்டுகளாக வெட்டப்பட்டு வாய்க்காலில் போடப்பட்டு மூன்று நாட்களாக அனாதரவாக நனைந்து கிடந்ததால் மிகச் சிதைவடைந்து சீரழிந்து அகோர நிலையில் கிடந்துள்ளது. இதனை பெற்ற தாயால் எப்படிப் பார்க்க முடியும். இந்நிலையிலேயே பேழை “சீல்” வைக்கப்பட்டு குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டு சென்ற ஞாயிற்றுக்கிழமை (15.03.09) ஊரே சோகமும் திகிலும் விடுபடாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

நீதவான் இளந்திரையன் அவர்களின் விடா முயற்சியால் மேவின் உட்பட்ட குற்றவாளிகள் 6 பேர் கைதானார்கள். இன்னும் இரு முக்கிய குற்றவாளிகள் இதுவரை தேடப்பட்டு வருகின்றனர். (வர்ஷா கொலை தொடர்பாக 5 பேர் தடுத்து வைப்பு) கடந்த ஞாயிறு குற்றவாளிகளை வைத்திய பரிசோதணைக்கு கொண்டு சென்ற நேரத்தில் ரி.எம்.வி.பி உறுப்பினர் மேவின் என்ற குற்றவாளி தப்பி ஒட முயன்றதாக சொல்லப்பட்டு பொலிஸாரால் அதே இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். மிகுதி கொலையாளிகள் விசாரணையில் உள்ளனர். மேவின் தப்ப முயன்றதாக சொல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதானது மேவினுக்குப் பின்னாலுள்ள சூத்திரதாரிகளை காப்பாற்றுவதற்காகவே நடைபெற்றதாக தெரிகின்றது.

ஏனெனில் இப்படியாக கடந்த காலங்களில் நடந்து வரும் இது போன்ற கடத்தல், கொலை மிரட்டல், கப்பம் கேட்டல், கொலைகள் என்பன ஏதோ ஒரு விதத்தில் இலங்கை புலனாய்வுக்குப் பின்னால் இயங்கும் தகவல் கொடுப்போரை (இன்போமர்) மையப்படுத்தியே ஒரு கூட்டு வேலைத் திட்டமாக பலதரப்பட்ட தகவல் மூலம் தெரிகின்றது.

இந்த சிறுமியின் கடத்தல், கப்பம் கோரல் கூட கொலைவரை வந்து கொலையாளிகள் கையும் மெய்யுமாக பிடிபட்டதாலேயே தெரியவந்துள்ளது. (திருகோணமலை சிறுமி வர்ஷா கொலையின் பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொலை) மற்றும் படி கடத்தல் மிரட்டல் நடைபெறுவதும், லட்சம் லட்சமாக கப்பப் பணம் பொது மக்களிடமிருந்து பறிக்கப்பட்டும் இவ் விடயங்கள் பாதிக்கப்பட்ட மக்களால் வெளியே வராமல் அவர்களே ஒடுங்கிப்போய் அடுத்த வீட்டிற்கு கூட தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியாமல் பீதியிலும் சொல்லோணாத் துன்பங்களுடன் நெருப்பிற்குள் வாழ்கின்றனர். யாரும் வெளியே வந்து சாட்சி சொல்லிவிட்டு உயிருடன், உறவுகளுடன், உடமைகளுடன் வாழமுடியுமா?

மொத்தத்தில் கிழக்கில் குறிப்பாகத் திருமலையில் நடையெறும் கொடூரங்களும் சட்ட விரோதச் செயல்களும் பல்வேறு கேள்விகளை தமிழ் மக்கள் மத்தியில் எழுப்புகின்றது. அதாவது: 

சிறிது காலமாவே பாலையுற்று, அன்புவழிபுரம் போன்ற நகர்புற கிராமங்களிலும், திருமலை நகரப் பகுதியிலுள்ள சோனகவாடி என்ற பகுதியிலும் ரி.எம்.வி.பி யைச் சேர்ந்தோரும், இலங்கை புலனாய்வுப் பிரிவினருடன் ஒட்டி உறவாடிக்கொண்டு தகவல் கொடுக்கும் (இன்போமர் குழுவினரும் தீவிரமாக கப்பம் கடத்தல் கொள்ளை கொலை என்பவற்றில், ஈடுபடுவதாகவும் தெரிய வருகின்றது. (சிறுமி வர்ஷாவின் படுகொலை சந்தேக நபர்கள் ஆட்கடத்தல், கப்பம் கோரல், கொலைகள் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.)

மேலும் ரி.எம்.வி.பியிலிருந்து கருணா பிரிவதற்கு முன்பே இருந்து இதுவரை இவர்கள் மிக மோசமாகவே கப்பம் கேட்டு துன்புறுத்துவதாகவும் அதுவும் கருணா – பிள்ளையான் குழு என பிரிந்த நிலையிலும், இன்று வரை இந்த இரு குழுவிலிருந்து பிரிந்து உதிரியாகி வீதியில் திரியும் இவர்கள் உறுப்பினர்கள் வரை தங்கள் தங்கள் தகுதிகளின் அடிப்படையில் தமது தேவைகளுக்காக, வெளிநாட்டிற்குச் செல்வதற்காக என மிக மோசமாக பொதுமக்களிடம் இருந்து பணத்தை பிடுங்குகின்றார்கள்.

எனவே மொத்தத்தில்:

1) கருணா குழு

2) பிள்ளையான் குழு

3) அல்லது கருணா – பிள்ளையான் மோதலால் உள்ளிலிருந்து வெளியேறிய உதிரியான உறுப்பினர்கள்

4) கருணா குழு, பிள்ளையான் குழுக்களுடனும் இலங்கை இராணுவத்துடனும் நேரடியான கட்டுப்பாட்டில் இயங்கும் தகவல் கொடுக்கும் குழுவினர் (ஊரிற்குள் இருந்து கொண்டு காட்டிக் கொடுப்போர் உட்பட)

5) எதேச்சதிகாரம் கொண்ட இலங்கை ராணுவக் குழுக்கள்

என இந்த 5 வகைக்குடுபட்டோரின் மூலமே கிழக்கில் – முக்கியமாக திருமலையில் அனைத்து அசம்பாவிதங்களும் நடைபெறுகின்றன. நடைபெறும் சம்பவங்களில் 95 வீதமானவை பலவிதத்திலும் மக்களை மிரட்டி மறைக்கப்படுகின்றன. வெளிவரும் சில சம்பவங்கள் – கொலைகள் கூட சட்டத்தின் முன், நீதியின் முன்நிறுத்தப்பட்டாலும் இறுதியில் அவை சட்டத்திற்கும் நீதிக்கும் அப்பாற்பட்டவையாகி விடுகின்றது. இவை  அனைத்திற்கும் பின்புலத்தில் இருக்கும் இலங்கை இராணுவத்தாலோ, அல்லது அதிகார வர்க்கத்தினாலோ சாட்சிகளை மிரட்டி, விடயத்தை திசை திருப்பியோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை ஓடவைத்தோ, காணாமல் பண்ணியோ, சட்டங்களை தமதாக்கியோ அல்லது இழுத்தடித்தோ, உண்மைகள் – நியாயங்கள் – அத்தனையும் நிர்மூலமாக்குகின்றன.

உதாரணமாக:

1) மூதூரில் நடந்த ‘அக்சன் பாம்’ 17 பேர் படுகொலை

2) திருமலை கடற்கரைமுன் நடந்த 5 பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை

3) திருமலை கோணேஸ்வரர் ஐயர் படுகொலை

4) கல்முனைப் பகுதியில் வீட்டினுள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இரு சகோதரிகள்

5) வெல்லாவெளியில் 28.02.09ல் நடந்த 14வயது சிறுமி புனிதவதியின் பாலியல் பலாத்காரம்

6) இதனைத் தொடர்ந்து 02.03.09ல் மகாதேவி சிவகுமார் என்ற பெண்ணின் பாலியல் பலாத்காரமும் படுகொலையும்

7) ஒரு வாரத்தில் வெல்லாவெளியில் இன்னொரு பெண் சுட்டுக்கொலை என முடிவில்லாமல் தொடரும் படுகொலைகள் பாலியல் வன்முறைகள்

பிந்திய செய்தி:

1) உவர்மலை (ஓசில்) என்னுமிடத்திலிருந்த ரி.எம்.வி.பி அலுவலகம் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

2) திருமலை நகரிலுள்ள ‘பெரியகடை’ என்னும் பகுதியிலுள்ள பிள்ளையான் அல்லது கருணா குழுவினரின் அலுவலகம் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் முக்கிய தடயங்களும், ஒரு முக்கிய சந்தேக நபரான இவர்களின் இயக்க உறுப்பினரான ஒருவரும் கைதாகியுள்ளதை அறிய முடிகின்றது. கடந்த கால இப்படியான பல குற்றவியல் சம்பவங்களின் அடிப்படையில் இக் கைது நடந்துள்ளது தெரிகின்றது.

2006 நடுப்பகுதிக்குப் பின்னர் திருமலை மாவட்டத்தில் இலங்கையரச இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை ராணுவக் குழுக்களான கருணா – பிள்ளையான் குழுக்கள் உட்பட்ட ரி.எம்.வி.பி கட்சியனரும், இலங்கை ராணுவத்திற்கு தகவல் கொடுப்பதை தொழிலாகக் கொண்ட குறிப்பிடத்தக்க சில முஸ்லீம் நபர்களும் தங்கள் சொகுசு வாழ்கைக்காகவும், ஆடம்பர தேவைக்காகவும் திருமலை மக்களை பல வழிகளிலும் துன்புறுத்தியுள்ளனர். கொலை செய்துள்ளனர். நாட்டை விட்டே ஓட வைத்துள்ளனர். என்ன? எப்போது நடக்கும் என தெரியாமல் மக்கள் பீதியின் மைத்தியிலேயே வாய் திறவா மௌனிகளாக வாழ்ந்துள்ளனர்.

தற்போது வவுனியாவிலிருந்து திருமலைக்கு மாற்றலாகி வந்திருக்கும் நீதிவான் இளந்திரையன் அவர்களின் உற்சாகத்தாலும் – விடாமுயற்சியாலும் அவரின் நேர்மைத்திறனாலும் இப்படியான குற்றச்செயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகின்றது. அதேபோல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் முகமென் பார்க்காமல் மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டு சமூகத்திலிருந்து விலத்திவைக்கப்படல் வேண்டும். இபபடி பாரபச்சமற்ற நிலையில் சட்டம் ஒழுங்கு காப்பற்றப்படுமானால் நாடு ஏதோ சிறிது தப்பிக்கொள்ள வழியுண்டு. 

மேலும் கருணா பிள்ளையான் மோதல்களால் சிந்துஜன் உட்பட 5 உறுப்பினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு புதைகுழியில் கண்டெடுக்ப்பட்டது. அதை நியாயம் கேட்கப் போன சிந்துஜனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் பொதுமக்கள் உட்பட பார்த்து நிற்கையில் கழுத்து வெட்டிக்கொலை. பிரான்ஸில் இருந்து வந்த மகிலூரைச் சேர்ந்த வேலுச்சாமி நடேசன் என்ற கிலீபன் அல்லது ஜீவன் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். இவற்றுக்கு முன் தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் 17 பேர் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு அதின் பின்னர் கொல்லப்பட்டனர். இப்படியே குழுவாதங்களாலும் பதவி ஆசைகளாலும் இயக்க மோதல்கள் வன்முறைகள் முடிவின்றித் தொடர்கின்றது.

Related News:

திருகோணமலை சிறுமி வர்ஷா படுகொலை சந்தேக நபரின் சடலத்தைப் பொறுப்பேற்க தாயார் மறுப்பு

மாணவி வர்ஷாவின் கொடூரக் கொலைக்கு கிழக்கு தமிழ் ஆசிரியர் சங்கம் கண்டனம்

கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் பூதவுடலுக்கு பெருமளவானோர் அஞ்சலி -இதுவரை மூவர் கைது

http://thesamnet.co.uk/?p=8854

Exit mobile version