லண்டனில் இருந்து புறப்பட்ட கப்டன் அலி (“வணங் காமண்”) கப்பல் சென்னைக் கடலில் பல நாள்களாக நின்று அந்தரிக்கிறது.
தொடர்ச்சியாக 51 நாள்கள் பயணித்த அலைச்சல், உலைச்சலால் உண்டான சலிப்பில் “வணங்காமண்”ணை சென்னைக் கடலில் நங்கூரமிட்டுவிட்டு தமது சொந்த நாடுகளுக்குச் செல்வதற்கு மாலுமிகளும் அவர்களுடன் கூட வந்த பயணிகளும் உத்தேசித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் கொழும்புக்குச் சென்று அங்குஅனுமதி வழங்கப்படாமல் சென்னைத் துறைமுகத்தில் சர்வதேசக் கடல் எல்லையில் சில நாள்கள் இக் கப்பல் தரித்து நின்றது.
இந்திய இலங்கை அதிகாரிகள் இடையே கடந்த புதன்கிழமை நடைபெற்ற பேச்சு க்களில் காணப்பட்ட இணக்கத்தினைத் தொடர்ந்து இப்போது சென்னைத் துறைமுகத்திற்கு ஐந்து கடல் மைல் தொலைவில் கப்பல் தரித்துள்ளது.
இரு நாட்டு அதிகாரிகளும் உடன்பட்ட பிரகாரம், உதவிப் பொருள்களை சென்னையில் இறக்கி செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் வன்னிக்குக் கொண்டு செல்வதற்கான உத்தேச ஏற்பாடுகளில் முன்னேற்றம் எதுவும் நேற்றுவரை இல்லாததால் மாலுமிகளும் உடன் பயணம் செய்தவர்களும் பெரும் சலிப்படைந்துள்ளனர்.
இம்மாதம் 24 ஆம் திகதி இந்திய இலங்கை அதிகாரிகள் நடத்திய பேச்சுக்களின் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட அறிக்கை பிரகாரம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது விடயத்தில் எந்த வித முன்னேற்றத்தையும் காணவில்லை என்று கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்த “கருணைச்சேவை”யினர் தெரிவித்துள்ளனர்.
கப்பல் மாலுமிகள் மற்றும் பணியாளர் தொடர்ச்சியாக 51 ஆவது நாள்களாக கப்பலில் தங்கியுள்ளனர். அவர்களின் நிலைமை மோசமாகவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் கப்பலை நங்கூரமிட்டுவிட்டு கப்பலில் இருப்பவர்கள் உடனடியாக இந்தியா ஊடாக தத்தமது நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கருணைச்சேவையினர் இந்திய அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.
கப்பலில் மாலுமிகளுடன் சேர்ந்து பயணம் செய்யும் கிறிஸ்ற்யான் கற்முண்ஸன் மற்றும் உதயணன் தவராஜசிங்கம் ஆகிய இருவரும் முறையே ஐஸ்லாந்துக்கும் லண்டனுக்கும் விமானம் மூலம் செல்வதற்கு அனுமதிக்குமாறு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர்.