Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடமாகாண நிபுணர் குழு அறிக்கையில் சந்தேகம் : புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி

Chunnakam_waterசுன்னாகம் மின்னிலையத்தைச் சூழவுள்ள நான்கு பிரதேசச் செயலகப் பிரிவுகளிலுள்ள கிணறுகளில் ஏற்கனவே கழிவு எண்ணெய் கலந்ததால் மாசடைந்துள்ள நீரினை குடிக்கலாமா இல்லையா என்பதற்கு மாகாணசபை நியமித்த நிபுணர் குழு தெளிவான பதில் கூறத் தவறியுள்ளது. அதன் மூலம் நிபுணர் குழு மக்களுக்கு உண்மையை மறைக்க முற்படுகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது. எனவே மாகாண சபையும் மத்திய அரசும் மௌனம் சாதிக்காது மக்களுக்கு உரிய பதிலை வழங்க வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு மக்களில் தூய நீர் பெறும் உரிமையை உறுதிசெய்ய வேண்டும் என்பதை மக்கள் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில், கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக சுன்னாகம் மின்னுற்பத்தி நிலையத்தைச் சுற்றியுள்ள நான்கு பிரதேச செயலகங்களின் கீழுள்ள பகுதிகளில் ஐநூறு வரையான நன்னீர்க் கிணறுகள் எண்ணெய்க் கழிவால் மாசடைந்துள்ளன. இதனை மக்கள் சார்பு அமைப்புகள் வெளிக்கொணர்ந்து தூய நீர் வேண்டியும் கழிவு எண்ணெய்க் கலப்புக்குக் காரணமானவர்களைக் கண்டறியும் படியும் வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்தனர். நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையும், தூய நீருக்கான செயலணியும் கழிவு எண்ணெய் கலந்திருப்பதை சுட்டிக்காட்டி நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்றே அறிக்கை வெளியிட்டன. கழிவு எண்ணெய் நிலத்தடி நீரில் கலந்த விடயம் நீதிமன்றம் வரை சென்றது. ‘நொதேர்ன் பவர்’ எனும் மின்னுற்பத்தி செய்யும் பல்தேசியக் கம்பனி மீதே கழிவு எண்ணெய்க் கலப்புச் சந்தேகம் எழுப்பப்பட்டது. இந்நிலையிலேயே மாகாண சபை இதற்கான நிபுணர் குழுவை நியமித்திருந்தது. இந்நிபுணர் குழுவின் முதற்கட்ட அறிக்கையானது தளம்பலாகவே காணப்பட்டது. இப்போது வெளியிடப்பட்டிருக்கும் இறுதி அறிக்கையும் உண்மையை மறைப்பது போன்றே காணப்படுகிறது. இந் நிபுணர் குழு அறிக்கையானது மாசடைந்த சுன்னாகம் நிலத்தடி நீர் குறித்து பேசாது, குடா நாட்டு நிலத்தடி நீரில் மலக் கழிவுகளும் நைத்தறேட்டுக்களும் கலந்திருப்பது பற்றியே சுட்டிக்காட்டியுள்ளது.

இது ‘வட்டுக்கோட்டைக்கு வழிகேட்க துட்டுக்கு இரண்டு கொட்டப்பாக்கு’ என்ற முதுமொழி போன்றே காணப்படுகிறது. இதன் மூலம் மாகாண சபை நியமித்த நிபுணர்குழு உண்மைகளை மறைக்க முயல்வதாகத் தோன்றுகிறது. அதேவேளை மாகாண சபையும் அமைச்சர் வாரியமும் மௌனம் காத்துவருவதன் மூலம் மக்கள் மத்தியில் சந்தேகம் வலுப்பெற்று வருகிறது. இந்நீர் மாசடைந்தமை பற்றி எமது கட்சி கடந்த ஏப்பரல் 13ம் திகதி ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம் மூலம் எடுத்துரைத்திருந்தது. இது பற்றிய நடவடிக்கையை நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு எடுக்கும் எனவும் ஜனாதிபதி செயலகம் எமக்குத் தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை இப்பிரச்சினைக்கு தீர்வு எதுவும் காணப்படவில்லை. எனவே மாகாண சபையும் மத்திய அரசும் மக்களுக்கு தூய நீர் பெறுவதற்கான வழிவகைகளை செயற்படுத்த வேண்டுமென எமது கட்சி வலியுருத்துகிறது.

சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

Exit mobile version