Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கு மாகணசபைத் தேர்தல் : ஓரணியில் எதிரிகள்

Ranil-sampanthar-flagதேர்தல் என்ற ஜனநாயகம் மக்களின் தெரிவைக் குறுகியதாக்கி மக்களை சிறிய எல்லைக்குள் முடக்கும் அதிகார வர்க்கத்தின் சர்வாதிகாரம். தேர்தலில் பதவிக்காக மோதிக் கொள்கின்ற கட்சிகளின் நலன்கள் அடிப்படையில் ஒன்றானதாகவே அமையும். 1977 ஆம் ஆண்டில் இலங்கையின் வட-கிழக்கில் வெற்றிபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்று ஆங்கிலத்திலும் தமிழர் விடுதலை கூட்டணி என்று தமிழிலும் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட கட்சி தமது பாராளுமன்ற வாழ்வுக் காலம் முடிவதற்கு முன்பாகவே மக்களிலிருந்து அன்னியமானார்கள். தமிழீழம் என்ற சுலோகத்தோடு மக்கள் முன் வந்த இக் கட்சி மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்பட்டுப்போனார்கள்.
இலங்கை அரச ஒடுக்குமுறையாளர்களுக்கும் இக் கட்சியின் பல உறுப்பினர்களுக்கும் இணக்கமான உறவு பேணப்பட்டுவந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்காணிப்பின் கீழ் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இலங்கை அரச பாசிசச் சட்டங்களுக்கு இணங்கி வடக்கில் பதவிக்காகப் போட்டி போடுகின்றது.
இன்று அரச படைகள் வடக்கின் பல பாகங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு பகுதியில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு கூட்டமைப்பினரை சுற்றி வளைத்துள்ளனர்.
தேர்தல் காலத்தில் இவ்வாறான தாக்குதல்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப் பலம் அதிகரிக்கும் எனத் தெரிந்துகொண்டே இத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இலங்கை பாசிச அரசின் துணைக்குழுக்களான ஈ.பி.டி.பி உட்பட யாருக்கும் வாக்களிக்க மக்களைக் கோருவதற்கு யாரும் முன்வரமாட்டார்கள்
வடக்கில் விக்னேஸ்வரனிலிருந்து மீண்டும் தொடங்கும் தேசியம் என்ற அரசியல் திருவிளையாடல் விதேசிகளின் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு இடையில் மக்களுக்கு தெரிவி இல்லை என்ற நிலையில் புதிய அரசியல் தலைமை உருவாகும் அத்தனை வழிகளும் இறுக மூடப்பட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களையும் அதற்கு எதிரானவர்களையும் அரசுகளே கையாளும் அவலநிலையும் மக்களைப் பார்வையாளர்களாக வைத்திருக்கும் கோரமும்  அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
இதன் பின்னணியில் நிலப்பறிப்பும் இனச் சுத்திகரிப்பும், இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களை துவம்சம் செய்யும் இலங்கை அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
பச்சையான வியாபார ஊடகங்களும், தன்னார்வ நிதி வழங்கலில் இயங்கும் உடகங்கள் உட்பட அனைத்து அமைப்புக்களும் இதன் பின்புலத்தில்  செயற்பட்டுவருகின்றன. இன்னுமொரு மாபெரும் மாபெரும் அழிவிற்கு அத்திவாரம்ப்படுகின்றது. இலங்கை இந்திய மற்றும் மேற்கின் ஏகபோக அரசுகள் ஒரணியில் செயற்படுகின்றன.

Exit mobile version