Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கு புலனாய்வுத் துறையின் ஆட்சியின் கீழ் – சுனில் ஹந்துன்நெத்தி

புலனாய்வுத்துறையின் ஆட்சியின் கீழ் வடக்கு மக்களை அச்சமானதொரு சூழ்நிலைக்குள் வைத்திருக்க முயற்சிக்காதீர்கள், இந்நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படா விட்டால் விரைவில் மீண்டும் ஒரு யுத்தம் வெடிக்கும் என ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விபரிக்கையலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் உரையாற்றுகையில், இன்று ஓமந்தைக்கு அப்பால் உள்ள மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்கின்றனர். சிவில் நிர்வாகத்திற்குப் பதிலாக அங்கு இராணுவச் சட்டமே அமுல்படுத்தப்படுகின்றது. கூரையில்லாக் கட்டிடங்களையே ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவும் அமைச்சர்களும் திறந்து வைக்கின்றனர். மக்களின் வீடுகள் கூட கூரைகளின்றியே காணப்படுகின்றது. இடம் பெயர்ந்த பின்னர் மீளக்குடியேறிய மக்கள் கூடாரங்களிலேயே வாழ்கின்றார்கள். யாழ்ப்பாணத்திலுள்ள மக்களில் பலர் காணமல் போயுள்ளனர். பிள்ளைகளைத் தேடும் பெற்றோர்கள், கணவனைக் காணவில்லையென கண்ணீர் விடும் மனைவி, புகைப்படங்களுடன் இராணுவ முகாம்களுக்கு அலைந்து திரியும் உறவினர்களென துயரங்களை அனுபவித்து வரும் அந்த மக்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளைச் செய்யவே நாம் யாழ்ப்பாணம் சென்றோம். அந்த மக்களின் காணமல் போன பிள்ளைகள், கணவன்மார் தொடர்பில் பேசச் சென்றோம் என சுனில் ஹந்துன்நெத்தி உரையாற்றினார்.

மேலும் அந்த மக்களின் பிள்ளைகள் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்க முடியும். தமது பிள்ளைகள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை அந்த மக்களுக்கு உண்டு. தமது பிள்ளைகளை, கணவன்மாரைத் தேடி அலையும் பரிதாப நிலை நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவேண்டும்.

எம்மைத் தமிழ் மக்களே தாக்கியதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் கூறுகிறார். சரி எம்மைத் தாக்கியவர்கள் தமிழர்கள் என்றால் ஏன் அவர்களை நீங்கள் கைது செய்யவில்லை. நான் வாக்கு மூலம் கொடுப்பதற்காக பொலிஸ் நிலையத்தில் நிற்கும் போதே இங்கே தமிழ் மக்கள்தான் தாக்கியதாக கூறிவிட்டார்கள்.

நாம் யாழ்ப்பாணத்தில் நின்ற போது எம்மை மோட்டார் சைக்கிளில் துரத்தினார்கள். நாம் எம்மைப் பாதுகாக்கவே தமிழக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. யின் வீட்டிற்குள் சென்றோம். எம.பி.யின் வீட்டுக்குள் வரமாட்டார்கள் என்று எண்ணினோம். ஆனால் வீட்டுக்கதவை உடைத்து கொண்டு வந்து எம்மைத் தாக்கியவர்கள் தெளிவான சிங்களத்தில் எம்மை விசாரித்து விட்டே தாக்கினார்கள்.

எம்மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அந்தக் கிராம மக்களே திரண்டு வந்து எம்மைக் காப்பாற்றினார்கள். அந்த மக்கள் எம்மைப் பாதுகாத்திருக்காவிட்டால் நாம் சடலங்களாகவே கொழும்பு வந்திருப்போம் எனக்கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில், வடக்கு கிழக்குப் பகுதிகளில் தற்போது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு இராணுவ ஆட்சி நடக்கிறது. கோட்டபாய ராஜபக்ஷ அங்கு அடாவடித்தனங்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பரிவினைப் பயன்படுத்துகிறார். வடக்கு – கிழக்கில் தற்போது இரண்டாவது பிரபாகரனின் ஆட்சி நடக்கிறது. கோட்டபாய அங்கு பிரபாகரனாகச் செயற்படுகிறார் என ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எனக் கருதப்படுபவர்களின் புகைப்படங்களையும் ஊடகவியலாளர்களுக்கு சுனில் ஹந்துன்நெத்தி காண்பித்தார்.

இதே வேளை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கையெழுத்துச் சேகரிப்புப் பணியில் ஈடுப்பட்ட தென்னிலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் அவருடன் இருந்தவர்கள் தாக்கப்பட்டமை குறித்து பல கட்சிகள் தமது கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றன. இவ்விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தினக்குரல் ஆசிரியர், ‘காணமல் போனவர்களின் உறவினர்கள் குறிப்பாக பெண்மணிகள், ஜனநாயக தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜே.வி.பி. யின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான சுனில் ஹந்துன்நெத்தியைச் சூழ்ந்து நின்று கதறியழுது புலம்பியதையும் முதல் நாள் இனந்தெரியாத கும்பலொன்றின் தாக்குதலில் தனக்கு எற்பட்ட காயத்துக்குப் கட்டுப்போட்டுக் கொண்ட பண்டேஜூடன் அவர் கண்கலங்கிய நிலையில் நின்றதனையும் ஒரு படத்தில் காணக்கூடியதாக இருந்து. 5 வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தாங்களே என்று அன்று பெருமைப்பட்டதுடன் மாத்திரம் நின்று விடாமல், போரை முழுமூச்சாக முன்னெடுப்பதற்கு அவரது அரசாங்கத்துக்கு உற்சாகத்தை கொடுத்த அரசியல் பிரசாரங்களைச் செய்ததில் முன்னணியில் விளங்கியதாகவும் உரிமை கோரிக்கொண்ட ஜே.வி.பி. யின் தலைவர்கள் இன்று அதே போரினால் அவலங்களுக்கு உள்ளாகிய தமிழ் மக்கள் மத்தியில் நின்று தாங்களும் கண்கலங்க வேண்டியிருக்கும் என்று நிச்சயமாக ஒருபோதுமே நினைத்திருக்கமாட்டார்கள்” எனக்கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இத்துடன் தினக்குரல் ஆசிரியர், ஜே.வி.பி. யின் இத்தகைய போராட்டங்களை தாம் கொச்சைப்படுத்த முயற்சிப்பதாக அர்த்தப்படுத்தாது, ‘ஆனால் ஜே.வி.பி. யினர் ஆரோக்கியமான அரசியல் சிந்தனைகளுடன் தூரதிருஷ்டியான அரசியல் அணுகுமுறைகளைக் கடைப்பிடித்திருந்தால் நாட்டில் ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கும் இன்றைய சூழ்நிலை தோன்றுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்காது என்பதே எமது அபிப்பராயமாகும்” எனவும் தெரிவித்திருக்கிறார்.

தினக்குரல் ஆசிரியர் காத்திரமானதொரு விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். ஆனால் அதற்கப்பாலும் பல கேள்விகள் உள்ளன.

தினக்குரல் ஆசிரியரின் கருத்துக்கு ஜே.வி.பி.யினர் தங்கள் பக்க நியாயங்களை முன்வைப்பார்களா? என்பதுவும், வன்னி யுத்தம் தொடர்பான அவர்களது கருத்துக்கள் என்ன? என்பதுவும் தமிழர்களின் இன உரிமைக்கான போராட்டம் தொடர்பாக இன்று ஜே.வி.பி. யின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதுவும் அவர்கள் பதிலளிக்க வேண்டிய முக்கிய வினாக்கள்.

‘தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்ற வேறுபாடுகளைக் களைந்து விட்டு நாம் இலங்கையர் என்ற பொது அடையாளத்தோடு அடக்குமுறைக்கெதிராக அணிதிரள்வோம்” என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க யாழ்.போரட்டத்தில் பேசியிருக்கிறார். அது உண்மையில் மக்களின் விடுதலைக்கான போராட்டத்திற்கான அழைப்பு எனில், தமிழ் மக்கள் நாம் இலங்கையர்கள் என்ற பொது அடையளத்தினைப் பெறுதற்கு தடையாக இருந்து வருகிற இன ஒடுக்குமுறை பற்றியும் அவர்கள் சிந்தித்தாக வேண்டும். அவ்வகையில் தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவது பற்றி அவர்கள் பேசியாக வேண்டும்.

Exit mobile version