Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கு, கிழக்கை இணைக்க, சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே தருணம்! : பிரிப்பதற்கான தீர்ப்பை வழங்கிய முன்னாள் பிரதம நீதியரசர் சரத்

வடக்கு, கிழக்கை இணைக்க, சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே தருணம் பிரிப்பதற்கான தீர்ப்பை வழங்கிய முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கருத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக எவராவது மனதில் எண்ணம் கொண்டிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதாக இருந்தால் இப்போது அதற்கான தருணம் ஏற்பட்டுள்ளது என்ற கருத்தை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா முன்வைத்திருக்கிறார்.இன்று யுத்தமற்றதும் ஆயுதங்கள் இல்லாததுமான சூழ்நிலை இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.”லக்பிம நியூஸ்%27 பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கைப் பிரிப்பதற்கு ஏன் பணிப்புரை விடுத்திருந்தீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அது தொடர்பாகக் கூறியிருப்பதாவது இது மிகவும் உணர்வுபூர்வமான விடயமாகும். இந்த இணைப்பானது தேவையான சட்டரீதியான வலுவைக் கொண்டிராமல் நடைமுறையில் இருந்தது. பிரிப்பதற்கான அரசியல் தீர்மானத்தை ஜனாதிபதி எவரும் எடுத்திருக்கவில்லை. இதன் ஆயுள்காலம் ஜனாதிபதியால் தொடர்ந்து நீடிக்கப்பட்டது. தொடர்ச்சியாக மீறப்படுவதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மீண்டும் அடிப்படைத்தன்மை யாவற்றையும் நாம் மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருந்தது.

இலங்கைஇந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்திற்குச் சென்று அந்த உடன்படிக்கையின் அடிப்படைத் தன்மையை நாம் கண்டறிந்தோம். 13 ஆவது திருத்தமானது நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. ஆயுதக் களைவோ, சண்டை நிறுத்தமோ அச்சமயம் இருந்திருக்கவில்லை. இவை இரண்டும் அடிப்படையான முன்நிபந்தனைகளாகும். இவை இல்லாமல் ஜனாதிபதி ஜெயவர்தன வடக்கு, கிழக்கை இணைத்திருக்க முடியாது. பிழையானதை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் சரியென உருவாக்கிக் கொள்ள முடியாது. சர்வஜன வாக்கெடுப்பு காலம் திரும்பத்திரும்ப நீடிக்கப்பட்டது. இன்று சண்டை நிறுத்தப்பட்டுள்ளது. ஆயுதங்கள் இல்லை. இணைப்பதற்கு இது தருணமாகும். யாராவது மனதில் கொண்டால் சர்வஜன வாக்கெடுப்பு

நடத்துவதற்கும் இணைப்பதற்கும் இது தருணமாகும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் கூறியுள்ளார்.அதேசமயம், தன்னிடம் இருக்கும் தனிப்பட்ட ஆர்வம் அரசியல் ரீதியானது மட்டுமே என்றும் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்புக்கு அவர் கடந்த வாரம் ஆலோசனைகளை வழங்கியிருந்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை மீள்வடிவமைப்பது இந்த யோசனைகளில் உள்ளடங்கியுள்ளது. தன்னால் முடிந்த அளவுக்கு ஐக்கிய தேசிய முன்னணிக்கு வெற்றி இலக்கை அடைவதற்கு உதவுவதாக அவர் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசரின் யோசனைகளின் பிரகாரம் தேர்வு செய்யப்படும் ஜனாதிபதி தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பார். ஆனால், பாராளுமன்றமே உயர் அமைப்பாக இருக்கும். ஒவ்வொரு அமைச்சு ஊடாகவும் பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கக்கூடியவராக ஒருவர் இருப்பார். பாராளுமன்றத்தினூடாக பொது மக்களுக்கு பதிலளிக்கும் ஏற்பாடு அமைந்திருக்கும்.முப்படைகளின் தளபதி என்ற பதவி தொடர்ந்தும் இருக்கும். அதேசமயம், ஜனாதிபதி தேசிய பாதுகாப்புச் சபையின் தலைவராக இருப்பார். ஜனாதிபதி எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் கொண்டிருக்கமாட்டார். நிதியமைச்சைக் கூட தன்வசம் ஜனாதிபதி கொண்டிருக்கார். ஆனால், அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அனுமதிக்கப்படுவார். ஒரு புறம் அமைச்சரவையையும் மறுபுறம் பாராளுமன்றத்தையும் ஜனாதிபதி பரிசீலிப்பவராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று சரத் என் சில்வா கூறியுள்ளார். இதன் மூலம் பதிலளிக்கும் கடப்பாடு அதிகளவில் இருக்கும் என்று அவர் விபரித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைப் பூரணமாக இல்லாமல் செய்வதிலும் பார்க்க ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவது என்பதே அதிகளவு பிரச்சினையாகும் என்று அவர் கூறியுள்ளார். சரத் பொன்சேகா வெற்றிபெற்றால் என்று வைத்துக்கொண்டால் அவர் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியாக இருப்பார். ஆதலால் அவரை வெறும் வைபவரீதியான ஜனாதிபதியாக எம்மால் அதிகாரத்தைக் குறைக்க முடியாது. சில விதமான ஏற்பாடுகள் தொடர்பாக நான் பணியாற்றி வருகிறேன். அதற்கு அதிகப்படியான திருத்தங்கள் தேவைப்படாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தின் இறுதி இரு வருடங்களில் சில சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் பலர் அவரின் தீர்ப்புகளை வரவேற்றிருந்த அதேசமயம், அவர் தனிப்பட்ட நலன்சார்ந்த வகையில் செயற்பட்டதாகவும் பக்கச்சார்பாக நடந்துகொண்டதாகவும் விமர்சிப்போர் கூறுகின்றனரே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சரத் என் சில்வா;

எது தனிப்பட்ட நலன்? பொருளாதார ரீதியான நலன் இல்லையே. இந்த நடவடிக்கைகளில் எந்த அனுகூலத்தையும் பெற்றிருக்கவில்லை.அலுவல்களில் எனக்கு உறவினர்களோ,நண்பர்களோ வேறு எவரோ இல்லை. ஆதலால் அங்கு தனிப்பட்ட நலன் இருக்க முடியாது. களத்தில் எனக்கு குடும்ப உறுப்பினர்கள் எவரும் இல்லை. ஆதலால் அங்கு தனிப்பட்ட நலன் இருக்க முடியாது. ஒரேயொரு தனிப்பட்ட நலன் இருக்குமாக இருந்தால் அது அரசியல் ரீதியானதாகவே மட்டும் இருக்க முடியும். 5 ஜனாதிபதிகளுக்குக் கீழ் நான் பணியாற்றியுள்ளேன். ஜே.ஆர்.ஜெயவர்தன,ரணசிங்க பிரேமதாஸ,டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்க,மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு கீழ் நான் பணியாற்றியுள்ளேன். எனது தீர்மானங்களின் வலுவானது ஒரேவிதத்திலேயே இருந்தது. இந்த ஜனாதிபதிகளின் ஆளுமைகளை மாற்றும் விதத்தில் அவை அமைந்திருக்கவில்லை. முறையீட்டு நீதிமன்றத்திலும் கூட நான் தீர்ப்புகளை வழங்கியுள்ளேன். அவை சர்ச்சைக்குரியவையாக இருந்தன. நிச்சயமாக வேறுபாடுகள் எழுந்தன. அப்போது சிறப்பான ஆட்சிமுறை இல்லை என்பதை நான் உணர்ந்தேன். இதுவே நிலைமை. பொருத்தமான ஆட்சிமுறை இல்லாவிடத்தும் விடயங்கள் ஒழுங்கு முறையாக இல்லாத விடத்தும் அவற்றைப் பரிசீலிக்க வேண்டியிருந்தது.

இந்தத் தீர்ப்புகள் யாவற்றையும் நீங்கள் ஆய்வு செய்து பார்த்தால் சட்டம், ஆட்சி என்பனவற்றின் நலன்கள் சார்ந்ததாகவே அவை இருக்கும் என்பதைக் கண்டு கொள்ளலாம். ஒருவருமே இதன்மூலம் அனுகூலம் பெறவில்லை. நான் கூட அனுகூலம் பெற்றிருக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நீங்கள் நல்ல நண்பராக இருந்துள்ளீர்கள். அவர் தொடர்பாக உங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது ஏன்? என்று கேட்கப்பட்டபோது;

எனக்கு அவரை 40 வருடங்களாகத் தெரியும். சொல்லித் தேவையில்லை. அவர் ஜனாதிபதியாக வந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்த யுத்த சூழ்நிலையை அவர் சிறப்பாக கையாள்வார் என்று நினைத்தேன். அதனை அவர் செய்திருந்தார். ஆனால், ஆட்சி நிர்வாகம், மனித உரிமைகள் விடயத்தில் அதிகளவை அவரிடமிருந்து நான் எதிர்பார்த்திருந்தேன். ஏனெனில் அவர் நன்கறியப்பட்ட மனித உரிமைகள் பணியாளராகும். மனித உரிமைகள், ஆட்சி நிர்வாகம் மேம்பாடடைந்த தாராளவாத யுகத்திற்கு நாங்கள் நகர்ந்து வருகிறோம் என்று நினைத்தேன்.

அதற்காக எப்போதுமே நான் ஊக்குவிப்பு அளித்து வந்தேன். அதுவே முரண்பாடான சூழ்நிலையைத் தோற்றுவித்தது. முன்னர் அவரைச் சந்தித்து நான் கவலைப்படும் விடயங்கள் தொடர்பாகப் பேசும் காலம் இருந்தது. பிரதம நீதியரசர் என்ற எல்லைக்குள் சென்று பேசுவதற்கு அப்பால் எமக்கிடையே தனிப்பட்ட தொடர்பாடல்களும் இருந்தன. ஆனால், இறுதித் தீர்ப்புத் தொடர்பாக இல்லாவிடினும் நான் அவருக்கு தெரிவிப்பது உண்டு.

வடக்கு,கிழக்கு பிரிப்புத் தொடர்பாக அவருக்கு நான் அறிவித்திருந்தேன்.சில சமயங்களில் அவர் வீட்டுக்கு வருவார். நீங்கள் அமர்ந்துள்ள ஆசனத்தில் அமர்ந்திருப்பார். ஆனால், வேறுபட்ட பிரதிபலிப்பை நான் அவரிடம் கண்டேன். விசேடமாக இந்த மனித உரிமைகள், ஆட்சி நிர்வாக விவகாரங்கள் என்னை ஆழமாகப் பாதித்திருந்தன. பெற்றோலியப் பொருட்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவுக்கு இசைந்திருந்தால் நாடு அனுகூலம் பெற்றிருக்கும் என்று அவர் கூறியுள்ளார். ஜனவரி தேர்தலில் ஜனாதிபதி ராஜபக்ஷ வெற்றி பெற்றால் அவரின் இரண்டாவது பதவிக்காலம் எப்போது ஆரம்பமாகும் என்று கேட்கப்பட்டபோது தேர்தல் இடம்பெற்ற திகதியிலிருந்து 6 வருடங்களுக்கு இந்தப் பதவிக் காலம் ஆரம்பமாக வேண்டும் என்பதே எனது கருத்தாகும். ஆனால், (சரத்து 31) பிரிவு 3 ஏ யை எடுத்துக்கொண்டால் 19 நவம்பர் 2010 இல் இது ஆரம்பமாகும் என்று சரத் என் சில்வா தெரிவித்தார்.

Exit mobile version