Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்குக் கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு இந்தியாவிடம் மஹிந்த இணக்கம்?

வடக்கு கிழக்கை இணைப்பதற்கு அரசு இணங்கியுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கடந்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடனான சந்திப்பின் போது இதுதொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ தமது இணக்கத்தை வெளிப்படுத்தினார் என்று அறியவந்துள்ளது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அடிப்படையாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு தனியான ஓரு அலகாக மாற்றப்படுவது அவசியமாகின்றது. எனினும், 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட இந்த இரு மாகாணங்களும் 2006ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டுள்ளன.

எனினும் அவற்றை ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் மூலமும் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனும் நிரந்தரமாக இணைக்குமாறு இந்தியா, மஹிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தியுள்ளது.
வடக்கு கிழக்கை தனித்தனியாக வைத்துக் கொண்டு அரசியல் தீர்வினை முன்வைக்க முடியாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. வடக்கு கிழக்கை இணைப்பதன் மூலம் பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகளை திருப்திப்படுத்திவிட முடியும் என்பதால் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று இந்தியா கருதுகின்றது.

இதனை பிராணப் முகர்ஜி தமது சமீபத்திய இலங்கை விஜயத்தின் போதும் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெளிவுபடுத்தியுள்ளார். வடக்கு கிழக்கை இணைப்பதற்கு இணங்கினால் எதிர்வரும் தேர்தல்களில் இந்தியாவின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தமது தேர்தல் வெற்றிகளை பாதிக்கும் என்பதால் தேர்தல்கள் முடிந்த பின்னர் அவற்றை இணைப்பதாக மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு உறுதியளித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments

Exit mobile version