Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்குக் கிழக்கு இணைப்பு : ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி பதினைந்து அம்சங்கள் அடங்கிய கோரிக்கைப் பட்டியல் ஒன்றை ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரினதும் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

01.தமிழர் விடுதலைக் கூட்டணி சோல்பரி அரசியல் சாசனத்தின் சிறுபான்மை இனத்துக்கு ஒரேயொரு பாதுகாப்பாக இருந்த 29ஆவது அம்சத்துக்கு ஏற்பட்ட கதியை நன்கு அறிந்தமையால் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் ஏற்பட்டால் அத் தீர்வு எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் மீள் பரிசீலிக்க நேர்ந்தால், இதுவரை காலமும் பல உயிரிழப்புக்களுக்கும், சொத்தழிவுகளுக்கும் மத்தியில் எடுக்கப்பட்ட முயற்சிகள் அத்தனையும் பாழாகிவிடும். கடந்த ஐந்தாண்டு காலமாக சமஷ்டி அமைப்பின் கீழ் ஒரு தீர்வை அடையப் பெரு முயற்சி எடுத்து அதற்கு ஒரேயொரு மாற்றாக இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வொன்றை ஏற்கத் தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருந்தது. ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் சிறுபான்மை மக்களுக்குத் தீர்வொன்றை ஒருபோதும் அடைய முடியாதென முழுமையாக நம்புகிறது.
02.வடக்கு, கிழக்கு இணைப்பால் இந் நாட்டிற்கோ அன்றி அப் பகுதியில் வாழும் எந்த இனத்துக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி முற்று முழுதாக நம்புகிறது. அதற்குப் பதிலாக பல்லின மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும், சமாதானத்தையும் வளர்க்க உதவுவதாக அது அமையும். நாடாளுமன்றத்தில் பிரதம அமைச்சர் கொடுத்த வாக்குறுதிக்கமைய இரு மாகாணங்களின் இணைப்பு பற்றிய விடயத்தை அப் பகுதியில் வாழும் மக்களிடமே கையளிப்பது பொருத்தமானதென தமிழர் விடுதலைக் கூட்டணி நம்புகிறது.
03.இடம்பெயர்ந்த மக்களை அவரவர் இடங்களில் குடியேற்ற இத்தகைய தாமதம் மிக நியாயமற்ற செயலெனத் தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுகிறது. சிங்களவரோ, முஸ்லிம்களோ, தமிழரோ, இந்திய வம்சாவளியினரோ அன்றி வேறு எந்த இனத்தவராகிலும் அவர்கள் இடம் பெயர்வதற்கு முன் குடியிருந்த இடங்களிலேயே குடியமர்த்தப்பட வேண்டும். கிளிநொச்சி அரச அதிபரும், சில கிராம சேவையாளரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையாலேயே இப் பிரதேச மீள் குடியேற்றத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளமை வருந்தத்தக்கது.
04.இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏற்பட்ட உயிரழிவுக்கும், சொத்து சேதத்திற்கும் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள், மலையகத்தவர்கள் என்ற பேதமின்றி முழு அளவிலான நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
05.யுத்தம் ஆரம்பித்த பின்னர் வன்னிப் பகுதியில் இறந்தும், காணாமலும் போயுள்ள குடிமக்களின் பெயர், முகவரி, போன்ற புள்ளி விவரங்களைத் திரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
06.பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவிச் சிறுவர்களை முறையற்ற வழியில் விடுதலைப் புலிகள் என முத்திரை குத்தி புனர்வாழ்வு இல்லங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அவரவர் பெற்றோரிடம் உடன் கையளிக்க வேண்டும். அவர்களில் சிலர் புலிகள் இயக்கத்தில் தாமாக இணைந்திருக்கலாம். ஆனால் ஏனைய அனைவரும் பலாத்காரமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்களாவர். இப்போது இச் சிறுவர்களுக்கு அவசியமாகத் தேவைப்படுவது பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் ஆகும். இந்த அப்பாவிப் பிள்ளைகளைப் பெற்றோரிடம் கையளிப்பின் அவர்களுக்கு எத்தகைய கல்வியை ஊட்டவேண்டுமென பெற்றோரே தீர்மானிப்பார்கள். அநேகமான பிள்ளைகள் யுத்தம் காரணமாக மட்டுமன்றி பலாத்காரமாக இணைத்துக் கொள்ளப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பலவருடக் கல்வியை இழந்துள்ளனர். அத்தகையோர் தமது கல்வியைத் தொடர அரசு ஆவன செய்யவேண்டும். இந்திய அரசிடம் வேண்டுகோள் விடப்படின் சில நூறு புலமைப் பரிசில்களைத் தமிழ்நாடு அரசிடம் பெற்றுக்கொள்ளலாம். முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலரின் இலங்கை விஜயத்தின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் இக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 07.”வடக்கின் வசந்தம்’ வெறும் கேலிக்கூத்தாக மாறிவிட்டது. அங்கே அமைதியான கடும் புயல் தொடர்ச்சியாக மக்களின் அமைதியைக் குழப்பி வருகிறது. இம் மக்கள் பல வருடங்கள் பயப் பீதியுடன் நடமாடும் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் ஆகியவற்றை இழந்து வாழ்கின்றனர். அங்கேயுள்ள ஆயுதக்குழுவின் செயற்பாடுகள் அமைதியான வாழ்வைச் சீர்கெட வைக்கிறது. அத்தகைய ஆயுதக் குழுவிடமிருந்து ஆயுதங்கள் உடனடியாகக் களையப்பட வேண்டும்.
08.வடக்கு,கிழக்கில் ஆள்கடத்தல்கள், கொலைகள் ஆகியவற்றை விசாரிப்பதற்கு மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடு வடக்கிற்கு விஸ்தரிக்கப்பட வேண்டும்.
09.தற்போது யுத்தம் முடிவடைந்து, விடுதலைப் புலிகள் மீளத் தலைநிமிர்த்தி செயற்பட முடியாத நிலையில், உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு அங்குள்ள வீடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆயுதக் குழுக்களால் பலாத்காரமாகப் பயன்படுத்தப்படும் தனியார் வீடுகள் மற்றும் வேறு கட்டடங்கள் உடனடியாக உரியவர்களிடமோ அன்றி அவர்களது வாரிசுகளிடமோ ஒப்படைக்கப்பட வேண்டும்.
10.அரச பிடியிலிருந்தும், இடம்பெயர் முகாம்களில் இருந்தும் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் தப்பிச்செல்ல, மிக அற்ப குற்றங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட வேண்டும். இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காரணங்கள், குற்றச்செயலாகக் கணிக்கப்பட முடியாதென்பது விசேட அம்சமாகும். அத்துடன் பயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும்.
11.சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அப்பாவி மக்களிடமிருந்து குறிப்பிடத்தகுந்தளவு தங்கம், பிறிதொரு காலத்தில் திருப்பிக் கொடுக்கப்படும் என்ற உறுதியோடு பெறப்பட்டது. ஒரு சிலருக்குத் தங்கம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. பலருக்குக் கொடுக்கப்படவில்லை. இது தவிர மக்கள் தமது தங்க நகைகளைப் புலிகளிடம் ஈடு வைத்திருந்தனர். அத்துடன் தமது பணத்தைப் புலிகளால் நடத்தப்பட்ட ஈழ வங்கிக் கிளைகளில் வைப்புச் செய்தனர். வன்னியில் மீட்டெடுக்கப்பட்ட தங்கமும், பணமும் வடக்கு, கிழக்கு மக்களுக்குச் சொந்தமானவை. ஆகவே அங்கு மீட்கப்பட்ட நகைகளும் பணமும் உரிமை கோருவோருக்கு போதிய கால அவகாசம் வழங்கிப் பாதுகாப்பாக வைத்திருக்கப்பட வேண்டும்.
12.உயர்கல்வி பெறும் வாய்ப்பு பெற்றும் யுத்தம் காரணமாகவும், பலாத்காரமாகப் பிடிக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் அதனைத் தொடர முடியாது பலர் இருப்பதால் வன்னிப் பகுதிக்கென பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி அங்கு குறைந்த பட்சம் விவசாயம், கலைப்பிரிவு போன்ற துறைகளை இயங்கவைக்க வேண்டும்.
13.வன்னி வர்த்தகர்களில் அநேகர் அனைத்து சொத்துக்களையும் இழந்துள்ளனர் என்பதால், இடம் பெயர்வதற்கு முன்பு அவர்கள் பெற்றிருந்த அங்கீகார உரிமைகளான ஏக விநியோக உரிமை, உத்தரவுபெற்ற வர்த்தக உரிமை,பெற்றோல் நிலையம் நடத்தும் உரிமை போன்றவற்றுக்கான உரிமைகள் வழங்கும்போது பாதிக்கப்பட்ட இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
14.இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் போது இரு விசேட பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். முதலாவதாக, 1992ஆம் ஆண்டு வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நலன்களைப் பேணவும், இரண்டாவது மிகவும் துர்ப்பாக்கியவான்களாகிய விசேடமாக 1958 இற்கும் 1983 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் குடியேறிய மக்களின் நலன் பேணவும் ஆகும்.
15. மீறுவோருக்குக் கடும் தண்டனை வழங்கப்படக்கூடியதான வலுவுள்ள ஓர் அடிப்படை உரிமை சாசனம் சட்டமாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version