Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கில் தமிழ் மக்கள் அழிய இந்தியாவே காரணமென்பதால் இந்திய வம்சாவளியினரென கூற நாம் வெட்கப்படுகிறோம்: ரி.வி.சென்னன் தெரிவிப்பு.

வடபகுதியில் நடந்து முடிந்துள்ள யுத்தத்திற்கென இலங்கை அரசுக்கு பெருமளவிலான உதவிகளை வழங்கியது இந்திய அரசாங்கமே என்பது தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது. வடபகுதியில் பெருமளவிலான அப்பாவித் தமிழ் மக்கள் அழிவதற்கும் பாதிப்புறுவதற்கும் இந்தியாவே காரணமாயிருப்பதால் நாம் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் என்று சொல்வதற்கே வெட்கப்பட வேண்டியுள்ளது.

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் வேலையையே இந்தியா செய்து வருகின்றது. இலங்கைத் தமிழ் மக்களின் விடயத்தில் இந்திய அரசின் செயற்பாடானது மிகவும் வேதனைப்பட வேண்டியதாகவே இருக்கிறது.

இவ்வாறு இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பசறைப் பணிமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்னணித் தோட்ட மட்டத் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றிய அதன் தலைவர் ரி.வி.சென்னன் தெரிவித்தார்.

முன்னணியின் மாவட்டத்தலைவர் எஸ்.கோபால் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ரி.வி.சென்னன் தொடர்ந்தும் பேசுகையில், “நாட்டில் இடம்பெற்ற இனக்கலவரங்களினால் பாதிக்கப்பட்டு, வட பகுதிக்கு சென்றவர்களும், தாயகத்திற்கு சென்றவர்களும் அகதி முகாம்களில் பெரும் துயரின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்திய வம்சாவளித் தமிழ் மக்களும் பெருமளவில் அகதி முகாம்களில் இருந்து வருகின்றனர். குடி பெயர்ந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கு அகதி வாழ்க்கையே நிரந்தரமாகி விட்டது.

இந்திய அரசு, நாட்டின் வடபகுயில் 20 ஆயிரம் தமிழர்களின் அழிவுக்கு காரணமாக இருந்துவிட்டு, 20 பஸ்களை மட்டும் மலையகத் தமிழர்களுக்கு வழங்கியிருப்பது இந்திய அரசின் துரோகச் செயலுக்கு மிகப் பொருத்தமான உதாரணமாகும். எமது தாய்நாடு இந்தியா என்பதைவிட பாகிஸ்தானையோ வேறு எந்தவொரு நாட்டையோ நாம் குறிப்பிட்டிருந்தால், அந்த நாடுகளாவது எமக்காக உணர்வு பூர்வமாக குரல் கொடுத்திருக்கும்.

“தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில், கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் கால தாமதத்தை ஏற்படுத்தாது உடனடியாக கூட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தைப் பொறுத்தவரையில், தற்போதைய வாழ்க்கைச் செலவினை ஈடு செய்யும் வகையில் நியாயமான சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைத்தாக வேண்டுமென்ற நிலையிலேயே நாம் இருந்து வருகிறோம். குறைந்த பட்சம் தோட்டத் தொழிலாளியொருவருக்கு அடிப்படைச்சம்பளமாக முன்னூறு ரூபாவையாவது வழங்க வேண்டும். வழங்கப்படும் ஏனைய கொடுப்பனவுகள் முன்னூறு ரூபாவுக்கு மேலதிகமாகவே வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் தொழிலாளியொருவரின் தினச் சம்பளம் மொத்தமாக நானூறு ரூபாவிற்கு அதிகமாக இருக்கும்.

ஆகையினால், கூட்டு ஒப்பந்தம் சார் தோட்டத் தொழிற்சங்கங்கள், தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் உடனடியாக பகிரங்கப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் வேண்டும். இது விடயத்தில் தொடர்ந்தும் கால தாமதம் செய்வதினால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர் நோக்கவேண்டியுள்ளது என்றார்.

Exit mobile version