
வடக்குக் கிழக்கில் கடத்தல், கொலை, கொள்ளை போன்ற சமூகவிரோதச் செயல்கள் நடைபெறுவது குறித்து இலங்கை அரசு முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்து வருகிறது. முன்னதாக விடுவிக்கப்பாட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களே இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்ட அரசு இபோது அப்படியான சம்பவங்கள் வெற்றுப் பிரச்சாரங்கள் என்கிறது. இதேவேளை பாதுகாப்புச் செயலரும் மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோதபாய ராஜபக்சவினால் ஒழுங்கு செய்யப்பட்ட உளவுக் குழு ஒன்றே இவ்வாறன நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இலங்கை அரசின் இவ்வாறான முரண்பட்ட கருத்துக்கள் குற்றச் செயல்களுடன் அரசிற்கு உள்ள தொடர்புகளை உறுதிப்படுத்துவதாக அமைகிறது.
பாதுகாப்பு அமைச்சு இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் போலிப் பிரச்சாரங்கள் என அமைச்சு அறிவித்துள்ளது. ஒரு சில தனிப்பட்ட நபர்களின் போலியான பிரச்சாரங்களே இந்த கடத்தல் தொடர்பான செய்திகள் என பாதுகாப்பு அமைச்சு குறிபிட்டுள்ளது.
போலி புகலிடக் கோரிக்கையாளர்கள், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.