பிளவு படாத நாட்டுக்குள்ளே ஒரே ஐக்கிய இலங்கை என்ற அடிப்படையில் வாழ்வதற்கு நாங்கள் தயார். அதற்காக அதிகாரங்களை பகிர்ந்து கொள்வோம் என்றுதான் மிகவும் பொறுப்புடன் சொல்லியிருக்கின்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து, வடக்கில் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரையில் பங்கெடுத்து, பங்களிப்பு வழங்கிய ஒரேயொரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில் நான், சம்பந்தனின் கருத்தை வாழ்த்தி வரவேற்கின்றேன்.
சம்பந்தனின் இந்த நல்லெண்ண பிரகடனத்தை அரசாங்கம் புரிந்துகொண்டு ஏற்றுகொள்ள வேண்டும். வடக்கில் இருந்து நீட்டப்படும் சம்பந்தனின் தேசிய ஐக்கிய கரத்தை தேச நலன் கருதி இறுக பற்றிக்கொள்ள வேண்டும். இதை அரசு தலைவருக்கு பக்கத்தில் ஆலோசனை சொல்ல இருப்பவர்கள் அவருக்கு விளக்கி சொல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தமிழ் தலைவர்களின் கருத்துகளை திரித்து பேசி சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி விட்டு அரசியல் செய்யும் ஒரு கூட்டம் இங்கு இருக்கின்றது. விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, குணதாச அமரசேகர, தினேஷ் குணவர்த்தன உள்ளிட்ட சிலர் இந்த கூட்டத்தில் உள்ளனர். இவர்கள் யார்? இவர்களுக்கு நாடாளுமன்றத்தில் எத்தனை எம்பீக்கள் இருக்கின்றார்கள்?
இந்த குட்டி கட்சிகாரர்கள் முழு நாட்டையும் பணயக்கைதியாக பிடித்து வைத்துகொண்டு தங்களது இனவாத இலக்குகளை நோக்கி நாட்டை வழி நடத்துகிறார்கள். இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இடம் தர கூடாது. அரசில் அரசு தலைவருக்கு பக்கத்தில் இருப்பவர்கள் இதற்கு இடம் தர கூடாது.
இன்று இந்த நாட்டில் தமிழர் மத்தியில் தந்தை செல்வாவின் அறவழி போர் நின்று போய் விட்டது. பிரபாகரனின் மறவழி போரும் நின்று போய் விட்டது. இனியொரு முறை மறவழி ஆயுத போராட்டம் வடக்கில், கிழக்கில் உருவாகப்போகின்றது என சிங்கள மக்களை தூண்டி விடாதீர்கள். அதற்கான சாத்தியம் இன்று இல்லை என்பது மட்டும் அல்ல, அதற்கான தேவை இன்று இல்லை என்பதுதான் முக்கியமான உண்மை. இதை நான் சிங்கள மக்களுக்கு புரியும் விதத்தில் சிங்கள மொழியில் சொல்கின்றேன்.
இன்று நம் நாட்டு சிக்கல் உலக பிரச்சினையாகிவிட்டது. நமது பிரச்சினை ஐநா சபைக்கு போய் கூடாரம் அடித்து, பாய் விரித்து படுத்து குடியேறிவிட்டது. இனிமேல் சர்வதேச சமூகத்திடம் சொல்ல வேண்டாம் என ஒப்பாரி வைப்பதில் பிரயோஜனம் கிடையாது.
இலங்கையில் தமிழர்களின் பிரச்சினை சம்பந்தமாக போர்க்காலத்திலும், போர் முடிவுக்கு பின்னரும் உலகத்துக்கு அரசு கொடுத்த வாக்குறுதிகளை உலகம் குறித்து வைத்து ஞாபகம் வைத்துள்ளது. ஆகவே இன்று நீங்கள் தந்தை செல்வாவை ஏமாற்றியது போல் உலகை ஏமாற்ற நினைக்க வேண்டாம். தமிழ் மக்களுக்கு இன்று சாட்சி கையெழுத்து போட்டிருப்பது ஐநா சபையும், உலகமும்தான். ஆகவேதான் சொல்கிறேன், இன்று எதற்கு தமிழர்களுக்கு ஆயுத போராட்டம்? அதற்கான தேவை இன்று இல்லை. எனவே சும்மா புலி பூச்சாண்டிகாட்டவேண்டாம்.
எனவே இன்று ஒரே பிளவு படாத நாட்டுக்குள்ளேயே அதிகாரத்தை பகிர்ந்து வாழ்வோம் என்று சொல்லும் தமிழ் தலைவர் இருக்கும் போதே பேசி தீர்த்து தீர்மானத்துக்கு வந்து முடிவு காணுங்கள். இல்லாவிட்டால் உலகம் நமது பிரச்சினையை முழுதும் கைகளில் எடுத்து கொள்ளும் நாள் விரைவில் வரும். அப்படி ஒரு எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ விரும்பும் சம்பந்தனுக்கும், எனக்கும் அத்தகைய ஒரு எதிர்பார்ப்பு இல்லை. ஆனால், நீங்கள் மீண்டும் தவறு செய்தால் நாங்கள் விரும்பாவிட்டாலும்கூட, முழு உலகமும் தமிழர் தரப்பாக மாறி நியாயம் தேடும் அந்த ஒரு நாள் வரும். ஆகவே எதிர்காலம் தரும் எச்சரிக்கையை இந்த அரசாங்கம் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.
ஐக்கிய தேசிய கட்சி
ஐக்கிய தேசிய கட்சி நாட்டை ஆண்ட கட்சி. ஆளப்போகும் கட்சி. அது இன்று பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. அங்கே உள்ள பலருக்கு அரசாங்கத்தை வீழ்த்தி புதிய அரசு ஒன்றை அமைப்பதை விட சொந்த சொந்த நிகழ்ச்சி நிரல் வேலைத்திட்டங்கள் உள்ளன. இப்படியானவர்கள் இந்த கட்சியில் கொழும்பிலும் இருக்கிறார்கள், நுவரெலியாவிலும் இந்த தேர்தல் காலத்தில் இருந்தார்கள். இவர்களின் சொந்த நிகழ்ச்சி நிரல் வேலைத்திட்டங்களுக்கு நாமும் சேர்ந்து பலியாக முடியாது.
ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள் புத்தியை பயன்படுத்தி வேலை செய்ய வேண்டும். என்ன செய்ய வேண்டும் என நான் சொல்ல வரவில்லை. அந்த கட்சி பலமாக இருப்பது, அவர்களுக்கு மாத்திரம் அல்ல, எங்களுக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது. இன்று இந்த கட்சி காயம் பட்டுள்ளது. விழுந்து காயம் பட்டவர்களை அடிக்க நான் விரும்பவில்லை. உண்மையில் கடந்த கால நிகழ்வுகளை காட்டி, நான்தான் ஐக்கிய தேசிய கட்சியை அதிகம் அடிக்க வேண்டும். நான் அத்தகைய பண்பாடு இல்லாதவன் இல்லை அல்லது இதை காரணம் காட்டி அரசாங்கத்துடன் கரங்கோர்க்க விரும்புகின்றவனும் இல்லை. உண்மையில் கடந்த பொது தேர்தலின் பின்னர் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களின் பிறகும்கூட, அவற்றை மறந்துவிட்டு இன்றும் ஐதேக வின் ஒரேயொரு மாநகரசபையான கொழும்பு மாநகரசபை நாங்கள்தான் நடத்த உதவுகின்றோம். எனது நண்பர் மேயர் முசாம்மிலை நான்தான் காப்பாற்றி வருகிறேன். இதுதான் மனோ கணேசனுக்கும், ஐக்கிய தேசிய கட்சிகாரர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம்.
இன்று மகிந்த அரசுக்கு எதிராக நாங்கள் பொது எதிரணி கட்சி. இந்த தமிழ், முஸ்லிம், சிங்கள விரோத மகிந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் முகமாக பலமான எதிர்கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கின்றேன். இன்றைய தினங்களில் பல்வேறு திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. அவற்றை நான் பகிரங்கமாக சொல்ல முடியாது. அவை வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சி கூட்டணி ஒன்று விரைவில் உருவாக நாம் உழைப்போம்.