Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கிலேயே தமிழர்களை சிறுபான்மையினராக மாற்ற அரசு முயற்சி :மனோ கணேசன்

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு குடியேற்றங்களை நடத்தி தமிழ், முஸ்லிம் மக்களை சிறுபான்மையினராக மாற்றி வருவதற்கு இணையான திட்டத்தை வடக்கில் அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. வடமாகாணத்தில் குறிப்பாக வன்னி பெருநிலப்பரப்பில் தமிழர்களை சிறுபான்மையினராக மாற்றிவிடும் கைங்கரியத்தில் அரசாங்கம் முனைப்புடன் செயற்படுகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழர்களை பொறுத்தவரையில் இந்த அரசாங்கத்திற்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. ஒரு முகத்தை வைத்துக்கொண்டு கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர். அடுத்த முகத்;தை வைத்துக்கொண்டு தமிழர்களின் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக இருக்கின்ற தமிழர் தாயகம் என்ற தளத்தை தகர்க்கும் காரியங்களை கச்சிதமாக செய்கின்றனர். இந்த இரண்டாம் முகத்தை அம்பலப்படுத்தும் சாத்வீக போராட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய தமிழ் கட்சிகளும் இவ்வாரம் வவுனியா நகரில் ஆரம்பித்திருக்கின்றன. இ;ந்த சாத்வீக செயற்பாட்டிற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை உறுதியுடன் வழங்குகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தெகிவளை பகுதியில் இடம்பெற்ற ஒரு அசம்பாவித சம்பவம் காரணமாக திங்கட்கிழமை வவுனியாவில் நடைபெற்ற சாத்வீக உண்ணாவிரதத்தில் நேரடியாக கலந்துகொள்ள என்னால் முடியாமல் போய்விட்டது. உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளும்படி எமக்கு அழைப்பு விடுத்திருந்த சகோதரர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு இது பற்றி நான் அறிவித்துள்ளேன்.

தமிழ் மக்களின் நியாயமான தேசிய அபிலாசைகளை வென்றெடுக்கவும், அரசாங்கத்தின் இரண்டாவது முகத்தை அம்பலப்படுத்தவும் வடகிழக்கின் தமிழ் தலைமைகளால் நடத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும் நாம் உறுதியுடன் துணைநிற்போம். உரிமைக்கு குரல் கொடுக்கவும், உறவுக்கு கைக்கொடுக்கவும் ஜனநாயக மக்கள் முன்னணி ஒருபோதும் தயங்காது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய தமிழ் கட்சிகளும் ஒன்றுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. தமிழர்களின் நிலங்களும், வீடுகளும் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்படவேண்டும். உள்நோக்கம் கொண்ட காணிப்பதிவு நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் ஆகிய தமிழர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருவாரியாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களின் காணி நிலங்களை சிறுக, சிறுக அரித்து அபகரித்துக்கொள்வது பெரும்பான்மைவாத அரசாங்கங்கள் தொன்று தொட்டு கடைப்பிடிக்கும் கொள்கையாகும். தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டம் அல்லது மாகாணம் எஞ்சியிருந்தால்தானே தமிழர்களும், முஸ்லிம்களும் தேசிய உரிமைக் கோரிக்கைகளை முன்வைப்பார்கள். அந்நிலைமையை மாற்றிவிட்டால் உரிமைக் கோரிக்கைகளுக்கு இடமிருக்கவே முடியாது என்பதுவே இனவாதிகளின் திட்டமாகும். சுவர் இருந்தால்தானே, சித்திரம் வரைய முடியும். எனவே சுவரையே இடித்து தள்ளிவிட்டால், சித்திரத்திற்கு இடமிருக்காது என்ற கபடமான இனவாத நோக்கில் அரசாங்கம் செயற்படுகின்றது. இதையும் நாங்கள் சகித்துக்கொள்வோமேயானால் எதிர்காலத்தில் எதுவும் மிஞ்சாது என்பதை நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழக்கூடிய சூழலை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் உண்மையிலேயே விரும்புகின்றதா என்பதற்கான பதிலை இன்று நாம் தெரிந்துகொள்ள விரும்புகின்றோம்.

Exit mobile version