நடப்பு மாதத்தின் இதுவரையான நாள்களில் மட்டும் 32 பேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு இலக்காகிய 6 பேர் நேற்று மட்டும் சேர்க்கப்பட்டனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாரிகாலம் என்பதனால் டெங்குத் தொற்றுத் தீவிரமாகியுள்ளது. கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பரவல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் சில இடங்களில் மாத்திரமே டெங்குக் காய்ச்சலின் தாக்கம் உணரப்பட்டது. தற்போது குடாநாட்டின் சகல பகுதிகளிலும் டெங்குத் தாக்கம் உணரப்பட்டுள்ளது. கொடிகாமம், கொழும்புத்துறை, பாஷையூர், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து ஒவ்வொருவரும், ஆனைக்கோட்டையில் இருந்து 2 பேருமாக 6 பேர் நேற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த வருடம் ஜனவரியிலிருந்து நேற்றுவரை 423 பேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். டெங்குத் தாக்கம் பல இடங்களுக்கும் தற்போது பரவிவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனக்கேட்கப்பட்டுள்ளது.