Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடகிழக்கில் தொடரும் அவலங்கள்

வடகிழக்கில் தொடர்ச்சியான கடத்தல் கொலை கப்பம் கோரல் என்பன பெருமளவில் இடம் பெறுகின்றன. இலங்கை அரசும் அதன் துணைக் குழுக்களும் கோலோச்சும் தமிழ்ப் பகுதிகள் அரச மற்றும் துணைக் குழுக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்தநிகழ்வுகளின் நோக்கம் இராணுவ மயப்படுத்தலும் அதன் தொடர்ச்சியாகச் சிங்கள மயமாக்கலுமே என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதியில் இளைஞன் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வேனில் நேற்று இரவு வேளையில் கடத்தப்பட்டுள்ளார். ஜீவபுரம் சந்திவெளியைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா ஜெயசீலன் என்பவரே கடத்தப்பட்டுள்ளார்.

நேற்று இரவு வேளையில் வீட்டுக்கு வந்த சந்தேக நபர்கள் குறித்த நபருக்கு தொழில் பெற்று தருவதாகக் கூறி வேனில் கடத்தி சென்றுள்ளனர்.

இதே வேளை, வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் யாழ். வந்த வேளை கடத்தப்பட்ட இளம் யுவதி ஒருவரும் வல்லைவெளியில் மீட்கப்பட்ட கரவெட்டியை சேர்ந்த இளம் யுவதியும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னியில் இருந்து வந்த யுவதி இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு பின்னர் வல்லைவெளி பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டார். பற்றைக்குள் மயக்கமுற்ற நிலையில் இருந்த இவரை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இதே வேளை புலிகளுக்கு எதிரான இரண்டாம் கட்டப் போரை ஆரம்பித்துள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

Exit mobile version