கிழக்கு மாகாணத்தில் பல அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் தமிழர்களின் காணிகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது, முதலமைச்சரிடம் கேட்டால் கையை விரிக்கிறார் என த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்திருக்கிறார்.
இதே வேளை பிறைந்துறைச்சேனை அஸ்கர் வித்தியாலயத்திற்குச் சொந்தமானதும் அவர்களால் நீண்ட காலம் பயன்படுத்தப்பட்டு வருவதுமான மைதானக் காணியை, மட்டக்களப்பு புத்தஜெயந்தி விகாராதிபதி தனது விகாரைக்குச் சொந்தமானதென சொந்தம் கொண்டாட முனைகிறார். இதற்காக அவர் உண்ணாவிரதமொன்றையும் மேற்கொண்டிருந்தார் என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஜவாஹிர்சாலி தெரிவித்திருக்கிறார். இப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும், காணி விவகாரத்தில் பொலிஸார் தலையீடு இருக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதே சமயம் வடக்கு. கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்களின் காணி உரிமைகளை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என ஜாதிகய ஹெலஉறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்திருக்கிறார். வடகிழக்கிலிருந்து அச்சுறுத்தல் காரணமாக ஒரு இலட்சத்து அறுபத்தைந்தாயிரம் சிங்கள மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இன்று 150 சிங்களக் குடும்பங்கள் யாழ்.புகையிரத நிலையத்திலும் துரையப்பா மைதானத்திலும் அநாதரவான நிலையில் உள்ளனர். யுத்தம் முடிவடைந்த பின் நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் சென்று வாழ அனைத்து மக்களுக்கும் சுதந்திரமும் உரிமையும் உண்டு. வன்னிப் பகுதியில் சிங்கள மக்கள் சென்று குடியேறுவதை யாரும் இனவாதமாகப் பார்க்கக்கூடாது. சிங்கள மக்களின் காணிகளில் புலிகளின் மாவீரர் குடும்பங்கள் குடியேறியுள்ளனர். எனவே அவர்களுக்கு மாற்று வழியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு சிங்களவர்களின் காணி உரிமைகளை அரசாங்கம் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஜாதிகய ஹெஉறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் பேசுகையில், சிங்கள மக்கள் வடக்கில் தமது சொந்த இடங்களில் சென்று குடியேறுகின்றனர். இதனை யாரும் தடுத்து விட முடியாது எனக்கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் யாழ்.புகையிரத நிலையத்திலும் துரையப்பா மைதானத்திலும் வந்து தங்கியிருந்து, யாழில் குடியேறுவதற்கு முயற்சித்து வருகிற சிங்களக் குடும்பங்களிற்கு அங்கு காணிகள் எதுவும் இருந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே அபிவிருத்தித் திட்டங்களின் பெயரில் பல்லாயிரக்கணக்கான காணிகளை அரசாங்கம் சுவீகரித்து வருகின்றமை தொடர்பாகவும் பாரிய அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தேவைக்கும் அதிகமாக சுவீகரிக்கப்படும் காணிகள் சிங்களக் குடியேற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.