சுதந்திரப் போராட்ட காலத்தில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றை வங்கதேச அரசு உருவாக்கியுள்ளது.
கிழக்கு பாகிஸ்தானாக இருந்து 1971ஆம் ஆண்டில் தனி நாடாக வங்கதேசம் பிரிந்து சென்றபோது நடத்தப்பட்ட சுதந்திரப் போரின்போது கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் போன்ற குற்றங்கள் பெரிய அளவில் நடந்திருந்தன.
இவற்றைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை விசாரிப்பதற்காகவென்று விசேட போர்க் குற்ற விசாரணை நீதிமன்றம் ஒன்றை வங்கதேச அரசாங்கம் அமைத்துள்ளது.
வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் இந்த வழக்குகளை விசாரிப்பார்கள் என்று தெரிகிறது.12 பேர் அடங்கிய வழக்கறிஞர் குழு இந்த வழக்குகளை நடத்தும்.
1971ஆம் ஆண்டில் 9 மாதங்களாக நடந்த இந்த விடுதலைப் போராட்டத்தில் பாகிஸ்தானிய இராணுவத்தினர் உள்ளூர் உளவாளிகள் உதவியோடு சுமார் 30 லட்சம் பேரைக் கொன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.