லைக்கா மோபைல் நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையேயான ‘அரசியல்’ தொடர்புகள் குறித்து இனியொரு இணையத்தில் பல்வேறு ஆக்கங்கள் பதியப்பட்டன. இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளில் பிரதான நிதி வழங்குனர்களாகவும், இந்த ஆண்டு இலங்கைத் தூதரகத்தின் அனுசரணையோடு ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திரதின விழாவில் லைக்கா பிரதான பங்குதாரர்களாகவும் செயற்பட்ட செய்திகள் ஏற்கனவே வெளியாகின.
இவை தவிர புலம் பெயர் நாடுகளில், சரி தவறு என்ற
விவாதங்களுக்கு அப்பால், ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் உணர்வு அடுத்த தமிழ்ச் சந்ததியினரிடம் காணப்படுகின்றது. களியாட்டங்களும் பல்தேசிய நுகர்வுக் கலாச்சாரத்திற்கும் மத்தியில் ஏதாவது ஒரு குறித்த நோக்கத்திற்காக அதிகார வர்க்கத்திற்கு எதிராகப் போராட விளைந்த இளைய தலைமுறை சரியான அரசியலை நோக்கி அழைத்துவரக் கூடிய நிலையிலேயே காணப்படுகிறது.
இவர்களின் மத்தியிலுள்ள போராட்ட உணர்வைச் சிதைத்து அவர்களின் களியாட்ட நிகழ்வுகளுக்கு லைக்கா பணம் வழங்கி வந்தது. பிரித்தானியாவில் பல பல்கலைக்கழகங்களில் தமிழ் சொசைட்டி என்ற உறுப்பின் கீழ் தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்திருந்தனர்.
இவற்றின் குத்தாட்ட நிகழ்வுகளுக்குப் வருடாந்தம் ஐந்தாயிரம் பவுண்ஸ் பணத்தை லைக்கா வழங்கி
அவர்கள் மத்தியில் குறைந்தபட்சமேனும் துளிர்விட்ட சமூக உணர்வைச் சிதைத்துச் சீர்குலைத்தது. இவை பொதுவாகப் பல்தேசிய நிறுவனங்களுக்கே உரித்தான அரசியல் செயற்பாடுகள்! எமது எல்லைக்குள்ளேயே இச் செயற்பாடுகள் முளைவிடும் போது அவற்றைக் கடந்து எந்த அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாது.
இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி ஒன்று இலங்கை அரசின் விமாச் சேவையான ஏயர்லங்கா, மற்றும் லைக்கா ஆகியவற்றின் ஆதரவோடு நடைபெற்றுள்ளது. பல்வேறு அரசியல் ‘தலை’கள் இப்போட்டியில் லைக்காவின் பின்னால் ஒளிந்துகொள்கின்றனர்.
லைக்கா மோபல், ஐங்கரன் நிறுவனம் ஆகியவற்றின் தயாரிப்பில் உருவாகும் ‘கத்தி’ திரைப்படம் குறித்த கடைசிச் செய்திகளின் இரத்தம் காயும்முன்னமே இந்த விளையாட்டுப் போட்டியின் பின்னால் இலங்கை அரசின் இனக்கொலை அரசியல் தெரிகிறது.
சேடமிழுக்கும் புலம்பெயர் அரசியல் தலைமைகளின் தேசிய வியாபார அரசியல் பல்தேசிய நிறுவனங்களின் வியாபாரப் போட்டியாக மாறி வருகிறது. லைக்காவின் இலங்கை அரச தொடர்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் பல்வேறு ஊடகங்களும் அமைப்புக்களும் லிபாரா என்ற லைக்காவின் போட்டி நிறுவனத்தின் விளம்பரத் தளமாக மாறுவருகின்றன.