இலாபவெறியை நோக்கமாகக் கொண்டியங்கும் லைக்கா நிறுவனத்தின் ராஜபக்ச குடும்பத்துடனான உறவு இனியொரு உட்படப் பல ஊடகங்களால் விலாவாரியாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இதனல் கத்தி திரைப்படத்தைப் புறக்கணிப்பது என்பது நியாயமான கோரிக்கைதான். இவ்வாறான பல்தேசிய நிறுவனங்களில் இலாப வெறி என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதும், அவை குறித்த விழிப்புணர்வை ஏற்படித்துவதும் ஊடகங்களின் கடைமை என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கமுடியாது.
ஆனல் அதற்கான நோக்கம் சமூகம் சார்ந்ததாக அமைந்திருக்கவேண்டுமே தவிர பணம் சுருட்டும் குறுகிய நோக்கங்களுக்கு உட்படதாக அமையக்கூடாது. லைக்காவைத் திட்டும் சங்கதி இணையத்தின் செய்தியின் கீழே அதன் போட்டி நிறுவனமான லெபாராவின் விளம்பரம் தொங்கிக்கொண்ட்ருக்கிறது. தவிர, சங்கதியின் ‘சகோதர’ அச்சு ஊடகமான ஈழமுரசில் லெபாராவின் ஒரு பக்க விளம்பரம் துருத்திக்கொண்டு தெரிகிறது.
20 யூரோக்களுக்கு லெபாரா தொலைபேசி நிமிடங்களை வாங்கினால் 1 யூரோவை அகதிகளுக்குக் கொடுக்கிறோம் என்று மக்களின் அவலத்தில் உணர்ச்சி வியாபாரம் நடத்தும் அருவருப்பு லெபாராவின் வியாபாரத்தில் காணலாம்.
லைக்காவை அகற்றுவதற்கு லெபாராவிடம் விளபரம் தேடும் மூன்றாம் தர வியாபார உக்திக்கு தேசியம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
தேசியத்திற்கு எதிரான அன்னிய மூலதனத்தின் முகவர்களே இப் பல்தேசிய நிறுவனங்கள். இந்த இரண்டு நிறுவனங்கள் போன்ற நூற்றுக்கணக்கான பல்தேசிய நிறுவனங்களுக்கும் அதன் தரகர்களுக்கும் தமது இலாப வெறியே பிரதானமானது.
இவர்களைப் பொறுத்தவரைக்கும் ஏனைய பல்தேசிய வியாபாரிகளும் அவற்றின் தரகர்களுமே நண்பர்கள். மக்கள் வெறுமனே வியாபாரப் பண்டங்கள் தான். இலங்கையில் அபிவிருத்தி என்ற போர்வையிலும் பாதுகாப்பு என்ற தலைப்பிலும் புலி அழிப்பு என்றும் மக்களின் நிலங்களைப் பறித்தெடுக்கும் பெரு நிறுவனங்களில் பிரதானமானது செல்வநாதன் குடும்பத்தினரால் நடத்தப்படும் கார்சன் நிறுவனம். கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ்ப் பல்தேசிய வியாபாரிகளும் தரகர்களும் இனப்படுகொலையைப் பற்றித் துயர்கொண்டதில்லை.
இனப்படுகொலையும் இன உணர்வும் அவர்களுக்குப் பணம் திரட்ட உதவுமானால் அவர்கள் இனவாதிகள் ஆகிக்கொள்வார்கள். ஆனல் எப்போதும் பல்தேசிய நிறுவனங்களையும் ஏகாதிபத்தியங்களையும் எதிர்க்கும் மக்கள் சார்ந்த அரசியலுக்கு எதிரானவர்கள்.
தமிழ் இனவாதிகளைப் பொறுத்தவரை தமிழர்கள் என்று கூறிக்கொண்டு தமிழ்ப் பல்தேசிய வியாபாரிகளோடு பிழைப்பு நடத்த வசதியை ஏற்படுத்திக்கொள்வார்கள். இதுவே சங்கதியும் ஈழ முரசும் லெபாராவின் விளம்பரப் பணத்திற்காக லைக்காவைத் திட்டும் இரகசியம்.
தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் உலகம் முழுவதும் ஒன்றிணைந்து மக்களை ஏமாற்றும் வியாபாரிகளிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.