கத்தி படம் வெற்றி பெற்றதனை அடுத்து, லைக்கா படத்தயாரிப்பு குழுவினர் இந்தியா சென்று பின்னர், அதனைக் கொண்டாட மாலைதீவுகள் சென்று தங்கியுள்ளார்கள். பின்னர் மாலைதீவில் இருந்து இன்று காலை லண்டன்திரும்ப இருந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களது விமானம் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று அங்கிருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்துள்ளது.
சுபாஷ்கரனின் பாஸ்போட் படத்தை, கையில் எடுத்துக்கொண்டு விமானத்தினுள் வந்த 10 பேர் அடங்கிய குழு ஒன்று, பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்திருந்த சுபாஷ்கரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து விமான நிலையஅதிகாரிகளுக்கும் சுபாஷ்கரன் குழுவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.”
இப்படியான செய்தியைக்கொண்ட ஒரு மின்னஞ்சல் பல இணையத்தளங்களுக்கு 2014-10-29காலை 10:36ற்கு லைக்காவின் ஒரு அடிவருடியினால் ranjith1977a@gmail.com என்ற போலி மின்னஞ்சலிலிருந்து அனுப்பட்டிருந்தது. செய்தியின் நம்பகத்தன்மை குறித்து அக்கறை கொள்ளாத சில ‘cut & paste’ இணையதளங்கள் சில மணி நேரங்களுக்குள்ளேயே இதை வெளியிட்டிருந்தன. அதைவிட லைக்காவின் ஆதவன் தொலைக்காட்சியும் ஆதவன் இணையத்தளமும் இந்த செய்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதைப் பார்த்ததும் சீமானின் ‘நாம் டம்ளர்’ ஆட்கள் உட்பட சிலர் “பார்த்தியா லைக்கா உரிமையாளருக்கு நடந்ததை, அவரும் சுத்தத் தமிழன் தான்” என்பதுபோல சமூக வலைத்தளங்கள் எல்லாம் கருத்துரைக்கத் தொடங்கினார்கள். மக்களும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள் காரணம் இந்தியாவில் புள்ளிராஜாவிற்கு எயிட்ஸ் வராது என்று எப்படி மக்கள் நம்புகிறார்களோ அதுபோல இலங்கையில் அல்லிராஜாவுக்கு அரஸ்ட் வராது என்றும் மக்கள் நம்பியிருந்தார்கள்.
இத்தனைக்கும் இது ‘உறுதிப்படுத்தப்படாத செய்தி’ என்றே வெளியிடப்பட்டிருந்தது. ஏதோ லைக்கா என்பது 1957ல் விண்ணுலகுக்கு அனுப்பட்ட நாய் போல தொடர்பில் இல்லைஅதனால் நாங்களே கேட்காமல் வெளியிட்டோம் என்பது போலத்தான் இரு நாட்களாய் கதை அளக்கப்பட்டிருந்தது.
லைக்கா நிறுவனம் என்பது சின்னப் பெட்டிக்கடை கிடையாது. அது மகாராணிக்கு ஒரு மில்லியன் பவுண்ட்களை அன்பளிப்பாக வழங்கிய நிறுவனம். இலங்கையின் பொது நலவாய நாடுகளின் மாநாட்டிற்கு பிரதான அனுசரணை வழங்கிய நிறுவனம். அதைவிட இன்றைய அரசுக்கு மூன்றாவது பெரிய நிதி வழங்குனராக உள்ள நிறுவனம் (மூண்டு வருசம் கோர்ப்பறேட் வரி கட்டேல எண்டது வேறு பிரச்சனை) அப்படிப்பட்ட ஒரு சர்வதேச நிறுவனத்தின் தலையைத் தூக்கிடாங்களாம் ஆனால் எந்த சர்வதேச ஊடகமும் இன்று வரை செய்தி போடவில்லை என்றால் எப்படி? லைக்காவின் அடிவருடி அவர்களுக்கு மின்னஞ்சல் போட மறந்துவிட்டாரா ? சரி தமது ஆதவன் தொலைக்காட்சியில் வெளியிட்ட லைக்கா ஏன் சர்வதேச ஊடகங்களுக்கு செய்தி அனுப்பவில்லை. “என்னடாப்பா சர்வதேச ஊடகத்துக் அனுப்ப அவர் என்ன ‘மெடலே’ வாங்கினவர்” எண்டு நீங்க கேக்கலாம். அதுவும் சரிதான்!
இதில் இன்னுமொரு நகைச்சுவை என்னவென்றால் சுபாஷ்கரனின் பாஸ்போட் படத்தை,கையில் எடுத்துக்கொண்டு விமானத்தினுள் பத்துப் பேர் வந்திருக்கிறார்களாம். இலங்கையில கோடிக்கணக்கில வியாபாரம் செய்கிற அமைச்சர்களோடும் ராணுவத்தோடும் பழக்கமுள்ள ஒரு மில்லியனரைத் தெரியாமல் அவரைப் பிடிக்க பாஸ்போட் படத்தைக் கொண்டு வந்து நீயா நீயா எண்டு தேடியிருப்பாங்களோ ? சரி ஒரு Smart Phone அல்லது iPad கொண்டு வந்து பாத்தார்கள் என்றாவது சுத்தியிருக்கலாம் ஆனால் பாஸ்போட் படத்தை…, நம்பிற மாதிரி இல்லையேப்பா…?
ஆனால் இது குறித்து இலங்கையிலிருந்து வெளியாகிற சண்டே ரைம்ஸ் என்ன சொல்லுதென்றால்…
மாலை தீவில இருந்து திரும்பின அலிபாபாவும் ச்சீ… அல்லிராஜாவும் 31 பரிவாரங்களும் Barல் நல்லாத் தண்ணியடிச்சு குடிபோதையில உரக்கப் பேசி பண்டார நாயக்கா விமான நிலையத்தின் Business Class Lounge ஐ மீன் சந்தையாக்கினார்கள் என்கிறது. அதுவல்ல இங்கே செய்தி.முக்கியமான செய்தி என்னவெனில் குடிவெறியில் இருந்த இவர்கள் UL Flight 503 விமானத்தில் ஏறி அங்கும் சில துஸ்பிரயோகங்களினைச் செய்திருக்கிறார்கள். மற்றப் பயணிகளிலும் அக்கறை கொண்ட அந்த விமானத்தின் கப்டன் செந்தூர்குமரன் கோபம் கொண்டு இந்த வெறிக்குட்டிகளோடு நான் பயணிக்கமாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். தமது பணம் பாதாளம் வரை பாயும் என்ற நம்பிக்கையில் இவர்கள் இலங்கையிலுள்ள பெருந்தலைகளுக்கு தொலை பேசியிருக்கிறார்கள் (SriLankan Airlines hot-shots & VVIPs) அதன்படி பெரிய இடத்திலிருந்து கப்டனுக்கு விமானத்தோடு கிளம்பிச் செல்லுமாறு அறிவித்தல் வந்திருக்கிறது. ஆனால் (bunch of sozzled rowdies) குடிவெறியிலுள்ள இந்த ரௌடிகளை நான் விமானத்தில் ஏற்றி பிரயாணத்தினை சிரமத்திற்குள்ளாக்க மாட்டேன் என்று அவர் மறுத்து விட்டார்.
தமது பணம் எல்லா இடமும் பாயாது என்று அறிய வைக்கப்பட்ட பின் அல்லிராஜாவும் பரிவாரங்களும் தமது பொதிகளுடன் இறக்கப்பட்டு அடுத்த விமானத்திற்காக காக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் இந்த செயலால் UL Flight 503 விமானம் இரண்டு மணி நேரதாமதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. என்று அந்தப்பத்திரிகை கிழி கிழி என்று கிழித்திருக்கிறது. ஆக விளக்கமாகச் சொல்வதென்றால் தமிழ் மக்கள் மடையர்கள் என்ற நினைப்பில், Anti Social Behaviourனை Anti Sri Lankan Behaviour போல மாத்தி செய்தி வெளியிட்டிருக்கிறது இந்தக்கூட்டம்!
இலங்கையில் வெளியான இந்த செய்தியினை இங்குள்ள எவரும் பெரிதாய்க் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் ஒரு சிலர்இந்தக் கைதினை வதந்தியென்று சமூகவலைத்தளங்களில் எழுதிக்கொண்டிருந்தார்கள். அதைவிட சில காலங்களாக பல்தேசியக் கம்பனிகளினது, முக்கியமாக லைக்காவினது லீலைகளை அம்பலப்படுத்தி அவர்களைக் கழுவிக் காயப்போட்டபடி இருந்தது இனியொரு டொட் காம் என்ற இணையத்தளம்.
இனியொரு விதி செய்வோம் என்று கிளம்பியவரை உமக்கு மேலால சதி செய்வோம் என்று அந்த இணையத்தளத்தினை இரண்டாவது முறையாக சில தினங்கட்கு முதல் `Hacked’ செய்து அகற்றி இருக்கிறது ஒரு கூட்டம். அதற்கு முதல்நாள் ஒருவர் இனியொருவில் லைக்கா பற்றிய பதிவுகளை நீக்குமாறு கேட்டு பின் திடீரென செந்தமிழில் பிளிறி விட்டு தொடர்பினைத் துண்டித்திருக்கிறார் (ஆங்கிலத்தில கதைக்காம செந்தமிழில கதைக்கிறது எங்களுக்குப் பெருமைதானே). பின் மறுநாள் ஒருவர் தன்னை சர்வதேச சட்ட வல்லுனர் என்று அறிமுகப்படுத்தி லைக்கா குறித்த பதிவுகளை நீக்கவேண்டும் அல்லது வழக்குப் போடப்போவதாகச் சொல்லியிருக்கிறார். இனியொருக்காரர் போடுங்கள் என்று சொல்லி சில மணி நேரத்தில் பனங்கொட்டையை மாடு சூப்பிய கணக்கில் முழுவதுமாக துடைத்தெறியப்பட்டிருக்கிறது இனியொரு இணையத்தளம்.
அதன் பின் லைக்காவிற்கு எதிராக எழுதியலங்காநியூஸ்வெப் (lankanewsweb.net) மற்றும் ஜே.விபி நியூஸ் (jvpnews.com) போன்ற இணையத்தளங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதுபோல லைக்கா நிறுவனம் பற்றி எழுதிய வேளைகளில் எல்லாம் ஒருபேப்பர் பிரதிகளும் Vanல் வந்த சிலரால் கொத்துக் கொத்தாக எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறன. இம்முறை அந்த வாகனங்களின் இலக்கத்தினை தருபவர்களுக்கு சன்மானம் வழங்கத் திட்டமிட்டு வருகிறோம் என்று ஒருபேப்பர்காரர் கூறுகிறார்கள்.
மற்றப்படி இதை தற்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருந்தீர்கள் என்றால் நீங்கள் அதிஸ்டக்காரர். நாட்டில என்ன நடக்கிறது என்கிற விடயத்தினை உங்களுக்கு வாசிக்கக் கிடைத்திருக்கிறது.
இவ்வளவு நேரமும் எழுதிய விசயத்தை சுருக்கி திருப்பி எழுதினால் இப்படி வரும் தமிழ் மக்கள் மடையர்கள் என்ற நினைப்பில Anti Social Behaviourரினை Anti Sri Lankan Behaviour போல மாத்தி செய்தி வெளியிட்டிருக்கிறது இந்தக்கூட்டம்!
முல்லை இரங்கன்
புகைப்படம் – jaffnajet.com
http://www.orupaper.com/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/