Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லைக்கா, சந்திரசேன, இலங்கை அரசு:அருவருக்கும் பணச்சுரண்டல்

kapila_mobitelகபிலா சந்திரசேன என்ற பெயர் இலங்கையின் ராஜபக்ச குடும்ப வியாபாரத்தில் பிரபலமானது. சந்திரசேன 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறீலங்கன் ஏயல் லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரியாக(CEO) நியமிக்கப்பட்டார். அதே வேளை மகிந்த ராஜபக்ச மக்களின் பணத்தில் உருவாக்கிய மிகின் ஏயர் இனதும் நிர்வாக அதிகாரியானார்.

ராஜபக்சவின் சொந்தத் தொகுதியான ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள விமான இறங்குதளத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மிகின் லங்கா பல மர்மங்களைக் கொண்டது. கடந்து வரவு செலவுத்திட்டத்தின் போது மிகின் லங்கா 3.2 பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளதாக அறிவித்தது.
மிகின் லங்கா மட்டுமன்றி இலங்கையில் மல்ரி மில்லியன் டொலர் அரச நிறுவனங்களின் இழப்புக்களின் பின்புலத்தில் சந்திரசேனவின் பங்கு காணப்படும். இந்த இழப்புக்களின் மறுபகத்தில் பிரித்தானியாவில் தலைமையகத்தைக் கொண்ட லைக்கா நிறுவனத்தின் பங்களிப்பையும் காணலாம்.

மிகின் லங்கா தனது இழப்புக்களை அறிவிக்கும் அதே வேளை 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் லைக்கா பிளை என்ற நிறுவனம் Level 6, East Tower, World Trade Center,Colombo Level 6, East Tower, World Trade Center,Colombo 1 (Number of Company: PV 96006 ) என்ற முகவரியில் கொழும்பில் ஆரம்பிக்கப்படுகின்றது.

மிகின் லங்காவைத் தவிர ஹம்பாந்தோட்டை விமான இறங்குதளத்தில் இனம் தெரியாத வேற்று நாட்டு விமானங்கள் தரையிறங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரசேன, லைக்கா, இலங்கை அரச கூட்டிணைவில் வேறு உயர்மட்ட தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்த தகவல்கள் எதிர்காலத்தில் வெளிவந்தாலும் வியப்படைவதற்கில்லை.

எது எவ்வாறாயினும் சந்திரசேன ஏயர் லங்காவின் பிரதம நிர்வாக அதிகாரியாகவிருந்த காலப்பகுதியில் லைக்கா பிளை நிறுவனம் சிறிலங்கன் ஏயர்லைன்சின் பிரித்தானியாவிற்கான பிரதான முகவர் நிறுவனமாக மாற்றமடைகின்றது.

இலங்கை அரசாங்கம் பிரதான பங்குகளைக் கொண்டிருக்கும் சிறீலங்கா ரெலிகொம் இன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக சந்திரசேன பதவிவகித்த காலப்பகுதியிலேயே மகிந்தராஜபக்சவின் மைத்துனர், லைக்க மொலைல் ஆகியன இணைந்த போலியான ஒப்பந்தங்களை சிறீலங்கா ரெலிகொம் உருவாக்கிக்கொண்டது. இப்போது இந்த ஒப்பந்தத்தின் ஊடாக வழங்கப்பட்ட சேவையினால் மக்களின் வரிப்பணத்திலிருந்து பல மில்லியன்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறீலங்கா ரெலிகொம் அறிவித்துள்ளது.
இந்த இழப்பில் சில மில்லியன்கள் லைக்காவும் ராஜபக்ச குடும்பமும் சந்திரசேனவும் பெற்றுக்கொண்டதாக லங்கா வெப் நியூஸ் என்ற இணையம் தெரிவிக்கிறது. தவிர, இலங்கையில் கைத் தொலைபேசிச் சேவையிலுள்ள மற்றொரு பல்தேசிய நிறுவனமான ஹச் ரெலிகொம் இலங்கை அரச தொலைபேசிச் சேவையான மொபி ரெல்லிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஹச் ரெலிகொம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு தனது பங்குகளை மொபிரெல்லிற்கு விற்பனை செய்தாலும் மொபிரெல் அதனை 132 மில்லியன் டொலர்களுக்கு வாங்க உத்தேசித்துள்ளது. கேட்ட தொகையிலும் அதிக தொகையை விலையாகக் கொடுக்கும் இந்த வியாபாரம் மக்களின் வரிப்பணத்தில் நடைபெறுகிறது.மிகுதி 32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹச் ரெலிகொம்மிற்கு வழங்கப்படாது, சில தனிநபர்களின் சட்டைப்பைக்குள் முடங்கிவிடும்.

32 மில்லையன் ஊழல் பணம் மக்களின் பணம். இதனை ராஜபக்ச குடும்பத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவதாக சந்திரசேன தெரிவித்துள்ளதாக லங்கானியூஸ்வெப் தகவல் சொல்கிறது.

தவிர மொபிரெல்லுடன் லைக்கா நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட உள்ளதாகவும், இப்போது மொபிரெல்லின் தலைவாரகச் செயலாற்றும் சந்திரசேனவிற்கு லைக்காவில் முக்கிய பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாகவும் இதே இணையம் தெரிவிக்கிறது.

ஆவணத் தரவுகளின் அடிப்படையில் 2006 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசுடன் வியாபாரத் தொடர்புகளை லைக்கா குழுமம் பேணி வருகிறது.

பல்தேசிய வியாபார நிறுவனங்களின் அருவருக்கத்தக்க பணவெறிக்கு எல்லைகள் இல்லை. தேசங்களைக் கடந்து தமது வெறியாட்டத்தை நடத்தும் இந்த நிறுவனங்கள் தமிழ்- சிங்கள வேறுபாடுகளற்று மக்களைச் சுரண்டுகின்றன. தமது சுரண்டலுக்கு இனவெறி தேவைப்பட்டால் அதனைத் தூண்டிப் பயன்படுத்திக்கொள்ளும் இந்த வியாபாரிகளின் விருப்பு வெறுப்பு எல்லாமே மூலதனச் சுரண்டல் மட்டுமே. லைக்கா என்பது ஒரு உதாரணம் மட்டுமே. மக்களின் போராட்டம் என்பது பல்தேசிய நிறுவனங்களையும் அவற்றால் ஒழுங்கு படுத்தப்படும் அரசுகளையும், ஏகாதிபத்தியங்களையும் சார்ந்து நடப்பதல்ல. அவற்றிற்கு எதிராக நடைபெற வேண்டியது

புலம்பெயர் நாடுகளில் லைக்காவிற்கு எதிரான தரவுகளை அதன் போட்டி நிறுவனங்களை வளர்ப்பதற்காகவும், அவை வீசியெறியும் எலும்புத்துண்டுகளைச் சுவைப்பதற்காகவும் ‘தேசிய வியாபாரிகள்’ பயன்படுத்திக்கொள்கின்றனர். இங்கு நிலைமை முற்றிலும் வேறானது. பல்தேசிய நிறுவனங்கள், ஏகபோக அரசுகள் என்றால் என்ன ? அவற்றின் பொதுவான போக்கு என்ன?? என்ற அரசியல் நிலைபாட்டிலிருந்தே தேசிய விடுதலைப் போராட்டம் என்பதன் அரசியல் கோட்பாடு கூட கட்டியெழுப்பப்பட இயலும்.

-அருவன்

ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்
லைக்கா, லெபாரா, சங்கதி, ஈழமுரசு
Exit mobile version