Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லைக்காவும் நிழல் உலகமும் – யாமார்க்கும் குடியல்லோம் : இனியொரு

பொதுநலவாய மாநாட்டில் லைக்கா விளம்பரத்தோடு மகிந்த
பொதுநலவாய மாநாட்டில் லைக்கா விளம்பரத்தோடு மகிந்த

கருத்தைக் கருத்தால் வெல்ல முடியாத கோழைத்தனமான பண வெறியர்களால் இனியொரு (inioru.com) இணையத்தளம் லங்கா நியூஸ்வெப் (lankanewsweb.net) உட்பட வேறும் சில இணையங்கள் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டன. இனியொருவிற்கு எதிரான சைபர் தாக்குதல் இது முதல்தடவையல்ல. குறிப்பாக லைக்கா மோபைல் நிறுவனத்தின் அரசியல் தலையீடு தொடர்பான கட்டுரைகள் வெளிவரும் போதே இத் தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

ராஜபக்ச பாசிஸ்டுகளின் முகவர்கள் போன்று தமிழ் சமூகத்தில் லைக்காவின் செயற்பாடுகள் ஆரம்பித்த போதே அவர்கள் தொடர்பான குறிப்பான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு லைக்கா அனுசரணையாளர்களாகச் செயற்பட்ட பின்னரே ஊடகங்களில் கவனம் லைக்கா நிறுவனம் மீது திரும்பியது. கோப்ரட்வாச் என்ற அமைப்பு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் லைக்காவின் பணம் உட்செலுதப்பட்டதை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு முன்பதாக ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையில் அப்பாவி மக்களின் வரிப்பணத்தில் 100 மில்லியன் டொலர்களை லைக்கா சுருட்டிக்கொண்ட விடயம் 2006 ஆம் ஆண்டிலிருந்தே சன்டேரைம்ஸ் பத்திரிகையில் செய்திகளாக வெளிவந்தமை பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இலங்கையில் ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்த கையோடு கொள்ளையடிக்கப்பட்ட மிகப்பெரும் பணத்தொகை என்பதால் முக்கியத்துவம் பெற்ற அந்தச் செய்திகள் உயர்மட்ட அதிகாரவர்க்க வட்டங்களுக்குள்ளேயே முடங்கியிருந்தது. அதனை தமிழ் மக்களுக்குகுள் கொண்டுசெல்லும் பணியை இனியொரு முன்னெடுத்தது.  இனியொரு மீதான தாக்குதல்களும் மிரட்டல்களும் இதன் பின்னரே வெளியாக ஆரம்பித்தன. லசந்த விக்கிரமதுங்க போன்று தெருவில்வைத்துக் கொன்றுபோடுவது லைக்கா நிறுவனத்தின் நிழல் உலக மையமாகத் திகழும் பிரித்தானியாவில் இலகுவான நடைமுறை இல்லை என்றாலும் அனாமோதயக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

கடந்தவாரம் லைக்காவின் தலையீடு புதிய கட்டத்தை அடைந்தது. ஒரு புறத்தில் இலங்கையில் நாளாந்தம் பசியால் வாடும் உழைக்கும் மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதற்கும் மறுபுறத்தில் புலம்பெயர் நாடுகளில் தேசிய முகமூடி அணிந்துகொள்வதற்கும் லைக்கா தேசிய நாடகம் ஒன்றை தனது நிழல் உலக வலையமைப்பிலுள்ள பிரச்சார மையங்களுடன் இணைந்து திட்டமிட்டது.

குறிப்பாக மக்களின் கண்ணீரையும் அவலத்தையும் பாலியல் வக்கிரங்களோடு கலந்து காசாக்கிகொள்ளும் ஊடகங்கள்லைக்காவின் பிரச்சார ஊற்றுமூலங்களாகின. லைக்காவிம் அதன் நிழல் உலக மாபியாக் குழுவும் இணைந்து நடத்திய இந்த நாடகத்தை இனியொரு இணையம் முதலில் தமிழில் வெளிக்கொண்டுவத்ததுடன் நிழல் உலக ஊடகங்களின் செய்திகள் நீக்கப்பட்டன. தமது திட்டம் பிசுபிசுத்துப் போனதை அறிந்த லைக்காவும் அதன் நிழல் உலக மாபியாக்களும் அதிர்ச்சியடைந்தன.

இதன் பின்னர், தெருக்களிலும் தொலைபேசியிலும் அனாமோதைய மிரட்டல்கள் நிழல் உலகின் மின்னஞ்சல்கள் போன்றன இனியொரு உட்பட பல்வேறு ஊடகங்கள் மீது உளவியல் யுத்தம் போன்றே நடத்தப்பட்டன.

மரண பயம், மன உளைச்சல், நாளை என்ன நடக்குமோ என்ற அச்சம் போன்றவற்றை ஏற்படுத்துவதன் ஊடாக யாரோ தனக்கு எதிரானவர்களை அழிக்க முற்படுகிறார்கள் என்பது தெளிவாகியது. இலங்கையிலும் உலகம் முழுவதிலும் மக்களுக்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் ஊடகவியலாளர்களின் வலியையும் மகிழ்வையும் அனுபவிக்கக் கூடியதாக இருந்தது. இலங்கையில் மட்டும் இருந்திருந்தால் இதுவரையில் மரணச்சடங்கை நடத்தியிருப்பார்கள்

தாக்கப்பட்ட இணையங்களை ஆராய்ந்தால் அவை அனைத்துமே லைக்கா தொடர்பாக பதிவுகளை வெளியிட்ட மறுகணமே தாக்கப்பட்டுள்ளன.

லைக்காவின் நிழல் உலக வலையமைப்பில் புலம்பெயர் ஊடகங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்வாங்கப்பட்டுள்ளன. லைக்காவின் பணத்தை வாங்கிக்கொண்டு தமது இணையங்களின் தொங்கு தசைகள் போன்று விளம்பரங்களை வெளியிடும் ஊடகங்கள் லைக்கா என்ற பல்தேசிய நிறுவனத்தின் தொங்கு தசைகளே.

இலங்கையில் ஊடகவியளார்கள் கடத்தப்படுகிறார்கள் என்று ஓநாய்கள் போல கண்ணீர்வடிக்கின்ற இந்த ஊடகங்கள் இனியொருவும் ஏனைய ஊடகங்களும் தாக்கப்பட்ட போது லைக்காவின் பணத்திற்காக வீணீர்வடித்தார்களே தவிர ஊடக ஒடுக்குமுறையை ஒளித்து நின்று வேடிக்கைபார்த்தார்கள். இச்சம்பவத்தை அறியாத பல ஊடகங்களையும், அவதானித்துக் கொண்டிருந்தவர்களையும் இங்கு குறிப்பிடவில்லை.

அதே வேளை புலம்பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் கலாச்சாரச் சிதைப்பில் ஈடுபட்டு இளைஞர்களின் சமூக உணர்வைத் அழிக்கும் மஞ்சள் ஊடகம் ஒன்று லைக்காவின் நிழல் உலக முகவராகச் செயற்படுவது ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டதை பிறிதொரு விரிவான கட்டுரையில் இனியொருவில் பங்களிக்கும் அனைவருக்கும் அறியதருகிறோம்.

தாக்குதல் நடத்தப்பட்டதும் லங்காநியுஸ்வெப் ஆசிரியர் சட்டரீதியான நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். தவிர, இணையத்தளம் முடக்கப்பட்டதும் அதன் செயலியை மீட்படதற்காக பல்வேறு நிறுவனங்களை அணுகிய போதும் சிதைக்கப்பட்ட பகுதிகளை மீட்க முடியாது என்றனர். இனியொருவில் பங்களிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தானாகவே தொடர்புகொண்டு தான்னால் முடியும் என்றார். அவரது தளராத முயற்சியால் செயலி மீண்டும் இயங்கவைக்கப்பட்டது.

தாக்குதல் நடத்தப்பட்ட முதல் நாளே ஒரு பேப்பர் தனது இணையத்தில் செய்திவெளியிட்டது. தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தது. ஒரு பேப்பர் குழுவிலிருந்த பலர் தொடர்ந்து இனியொருவை தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். சிலர் இணையத்தை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

தமிழ்நெட் ஆங்கில இணையத்தின் பிரதம ஆசிரியர் கருத்துச் சுதந்திரத்தைப் பல்தேசிய நிறுவனங்களுக்கு விலைபேச முடியாது என்று தொலைபேசியில் தெரிவித்தார். அன்று நள்ளிரவுக்கு சற்றுப் பிந்திய பொழுதில் தமிழ் நெட் இனியொரு மற்றும் லங்காநியூஸ்வெப் மீதான தாக்குதல்கள் தொடர்பாக அரசியல் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

லைக்காவின் நடவடிக்கைகள் தொடர்பாக மட்டுமன்றி, ஏனைய பல்தேசிய நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், இலங்கை அரச பாசிஸ்டுக்களின் அடியாள் படைகள், ஏகாதிபத்தியங்களின் ஐந்தாம் படைகள் போன்ற அனைத்து சமூகவிரோதச் செயற்பாடுகள் தொடர்பாகவும் இனியொருவில் கடந்தகாலத்தில் அரசியல்ரீதியாக பல்வேறு பதிவுகள் வெளிவந்துள்ளன.

இந்த நிறுவனங்களில் பின்புலத்திலுள்ள மக்கள் விரோத அரசியல் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதனை தனது பணியாகக் கொண்டிருந்தது. லைக்கா மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலுள்ள மற்றொரு மல்ரிமில்லியன் பல்தேசிய நிறுவனமான லிபாரா தொடர்பாகவும் நேரடியாக எழுதியது இனியொரு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உண்மைகளிருக்க லைக்காவின் நிழல் உலக வலைப்பின்னலில் சிக்கியிருக்கும் புலம்பெயர் மஞ்சள் ஊடகம் இனியொரு லிபாராவிடம் பணம் வாங்குவதாக அனமோதய மின்னஞ்சல்களை அனுப்ப ஆரம்பித்தது. புலிகளின் ஆதரவாளர்களாவிருந்தால் கலாச்சாரத்தைச் சிதைப்பதும், லைக்கா போன்ற ராஜபக்ச குடும்பத்துடன் வியாபாரம் நடத்தும் நிறுவனங்களுடன் கூட்டுவைத்துக்கொள்வதும் தவறில்லை என்றது. ஆயிரமாயிரம் மக்களதும் போராளிகளதும் தியாகங்களை லைக்கா போடும் எலும்புத்துண்டுகளுக்கால விலைபேசி வாலட்டுவதை தேசியம் என்கிறது.

புலம்பெயர் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியலை மேலும் மேலும் அனாமோதய நிழல் உலக அரசியலாக்கும் நிலை ஆபத்தானது. வெளிப்படையான மக்கள் சார்ந்த அரசியல் இன்றைய எமது அவசரத் தேவை.

ஈழ மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கன போராட்டம் என்பது லைக்கா – லிபாரா என்ற பல்தேசிய நிறுவனங்களின் பிடிக்குள் இறுகியுள்ளது. இதுவரை அழிவுகள் புலம்பெயர் நாடுகளிலிருந்தே ஆரம்பித்தன. அதே செயல்முறை இன்றும் தொடர்கிறது. புலம்பெயர் அப்பாவி உழைக்கும் மக்களின் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தும் பல்தேசிய நிறுவனங்கள் ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தை ராஜபக்ச பாசிசத்தின் அடிமைகளாக மாற்ற முயல்கின்றன.

இனியொரு மீது ஆயிரம் தடவை தாக்குதல் நடத்தப்பட்டாலும் அது மீண்டும் முளைவிடும். மிரட்டல்களும், அவதூறுகளும், மரண அச்சுறுத்தல்களும் மேலும் எங்களைப் பலமடையச் செய்கின்றன. கருத்துக்களை சாமனிய மக்களை நோக்கிக் கொண்டுசெல்வதும், மக்களை அணிதிரட்டுவதும் போராடுவதும் மட்டுமே இன்று எமக்கு முன்னால் உள்ள ஒரே வழி என்று மீண்டும் உணர்த்திய லைக்காவிற்கும் அதன் நிழல் உலக மாபியாகளுக்கும் நன்றிகள்.

இணையம் இயக்கமற்றிருந்த காலங்களில் ஊடகச் சுதந்திரத்திற்காகக் குரல்கொடுத்த அனைத்து ஊடகங்களுக்கும், அமைப்புக்களுக்கும், தனிநபர்களுக்கும் இனியொரு தனது நன்றியைத் தெரிவிக்கிறது.

யாமார்க்கும் குடியல்லோம்…..

இனியொரு….

இணையத் தாக்குதல் மீதான கண்டனங்கள்:

http://tamilnet.com/art.html?catid=13&artid=37466

http://www.orupaper.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/

http://www.srilankamirror.com/news/17762-3-websites-hacked-after-lyca-expos

Exit mobile version