Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் பின்னணியில்

lycaஐரோப்பிய நாடுகளில் பல்தேசிய வியாபார நிறுவனங்களில் சொர்க்கபுரிகளில் பிரித்தானியாவும் ஒன்று. சில்லைரை வரிகளுக்காக சாமனிய மக்களின் வீட்டுக்கதவுகளைத் தட்டும் பிரித்தானிய அரசு பல்தேசியப் பெரு வியபார நிறுவனங்கள் வரிப்பணத்தை செலுத்தாமலிருப்பதற்கு பல்வேறு வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. வெளி நாட்டு வேலையாட்களிடமிருந்து வரிப் பணம் என்ற தலையங்கத்தில் பகல்கொள்ளை நடத்தப்படும் போது, மக்களின் வரிப்பணத்தை வெளிநாட்டவர்கள் உறிஞ்சிக் கொழுக்கிறார்கள் என்று நிறவாதிகள் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

வரிப்பணத்தை சுருட்டிக்கொள்வதற்காக வியாபார முதலைகளுக்கு பிரித்தானிய அரசு ஏற்படுத்திக்கொடுத்த வழிமுறைகளில் ஒன்று தான் கோப்ரட் சமூகப் பொறுப்பு (Corporate social responsibility (CSR) )என்பதாகும். கோப்ரட் நிறுவனங்கள் சில சமூகத் திட்டங்களை மேற்கொண்டால் ஒரு குறித்த பகுதி வரிவிலக்கு வழங்கப்படும் என்பதே இதன் உட்பொருள். ஒரு குறித்த தொகைக்கு மேல் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் சீ,எஸ்,ஆர் சேவையை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக கோப்ரட் வியாபார நிறுவனங்கள் பிரித்தானியா தவிர்ந்த நாடுகளில் சேவை செய்யத் தலைப்படும். சேவை என்ற பெயரில் செலவிடப்படும் பணத்தின் அளவு பல மடங்காக அதிகரித்துக் காட்டப்பட்டு வரிப்பணம் செலுத்துவதிலிருந்து இந்த இலாப வெறியர்கள் விதிவிலக்குப் பெற்றுக்கொள்வார்கள்.

வறிய நாடுகளில் இவர்கள் சேவை செய்யும் போது அந்த நாடுகளிலுள்ள அரசுகளுடனும் சர்வாதிகாரிகளுடனும் வியாபார ஒப்பந்தங்களையும், திருட்டுப்பணப் பதுக்கல்களிலும் ஈடுபடுவார்கள். பொதுவாக மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான இந்த அமைப்புக்கள் போராட்டங்களும், அரச எதிர்ப்புக்களும் தோன்றாமல் பார்த்துக்கொள்வதன் ஊடாக உள் நாட்டு அரசுகளுக்குச் சேவை செய்யும்.
இவ்வாறான உதவிகள் ஊடாக ஒட்டச்சுரண்டப்பட்டு அழித்துச் சிதைக்கப்பட்ட வளம் மிக்க நாடுகளில் பிரதானமானது பங்களாதேஷ். அறக்கட்டளைகளும், தொண்டு நிறுவனங்களுமே இந்த நாட்டை நடத்திவருகின்றன.

அரசியலில் தலையிடமாட்டோம் என்றும், நடுநிலமையாளர்கள் என்றும் கூறும் இந்த அறக்கட்டளைகள் சர்வாதிகார அரசியலுக்குத் துணை செல்கின்றன. மக்களைப் போராடவிடாமல் தடுத்து தாம் போடும் பிச்சையில் தங்கி நிற்கும் மனோபாவத்தை ஏற்படுத்தும் இந்த அமைப்புக்கள் அரசுகளின் சமூகவிரோதச் செயல்களைக் கண்டுகொள்வதில்லை. ஆக, அவர்கள் அரசியலில் தலையிடுகிறார்கள்.

தாம் இலங்கை உட்பட பல நாடுகளில் சேவை செய்து வருவதாக மார்தட்டிக்கொள்ளும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் பின்னால் உள்ள நோக்கம் சேவையல்ல இலாப வெறி! சி,எஸ்,ஆர் இன் அடிப்படையில் ஞானம் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகின்றது.

லைக்கா மட்டுமல்ல பிரித்தானியாவின் மிகப்பெரும் வங்கியான பார்கிலேஸ் வங்கி சி.எஸ்.ஆர் ஐ நடத்தி வருகிறது. வங்கியின் உதவித் தலைவர் நைஜெல் ரட் இன் தலைமையில் இயங்கும் அறக்கடளை பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது.

சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் ஷெல் நிறுவனம் சுற்றுச் சூழல் உயர்கல்விக்கான அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறது. லிபாரா நிறுவனம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறது. லைக்கா நிறுவனம் மட்டுமல்ல உலகின் எந்த நிறுவனமும் நடத்தும் தொண்டு நிறுவனங்கள் ஊடாக அவர்கள் மக்களுக்கு வழங்குவதை விட அதிகமாக மக்களைச் சுரண்டுகிறார்கள். அமசோன் காட்டுகளை நாசப்படுத்துவதற்கு எதிராக மக்கள் போராடிய போது அவர்களை சாந்தப்படுத்தி போராட்டத்தைச் சிதைத்து வளங்களை ஒட்டச் சுரண்டுவதற்கு அமெரிக்க எண்ணை நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களை நடத்தின.

Exit mobile version