விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலி இலச்சனை பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றுவித்து இந்த இரங்கல் நிகழ்வை ஆரம்பிப்பது வழமை. இம்முறை நடைபெற்ற நிகழ்வில் புலி இலச்சனை பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றக்கூடாது என நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான பிரித்தானியத் தமிழர் பேரவை தெரிவித்திருந்தது. இதனால் நிகழ்வில் குளறுபடிகள் ஏற்பட்டன. ஏற்பாட்டாளர்களுக்கும் அங்கு வந்திருந்த இளைஞர்கள் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நிலையை எட்டிய போது பிரித்தானியத் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் விலகிக்கொள்ள எதிர்ர்புத் தெரிவித்தவர்கள் கொடியை ஏற்றினார்கள்.
பிரித்தானியத் தமிழர் பேரவை தோன்றிய காலத்திலிருந்து இக் கொடியையே அவர்கள் பிரதான அடையாளச் சின்னமாகப் பயன்படுத்தினார்கள். 2014 ஆம் ஆண்டில் மட்டும் கொடியை ஏற்றக்கூடாது என்ற முடிவிற்கு வந்து சேர்ந்தார்கள். தாங்களின் முன்னைய செயற்பாடு தவறானால், அது ஏன் தவறு என்று சுய விமர்சனம் செய்வதும் அதனூடாக புதிய செயற்பாட்டை முன்வைப்பதும் அரசியல் அமைப்பு ஒன்றின் கடமை.
பிரித்தானியத் தமிழர் பேரவை கொடியை ஏற்றக் கூடாது என்பதற்கு ஒரேஒரு காரணம் மட்டுமே சொன்னார்கள். அவர்களது எஜமானர்களான இனக்கொலையில் பங்களித்த பிரித்தானிய அரசு கொடியை விரும்பவில்லை என்பதே அது. இந்த வகையில் பிரித்தானிய அரசிற்கு எதிராகவும் போராடத் தயாரான இளைஞர்கள் பிரித்தானியத் தமிழர் பேரவையை விட முற்போக்கான பாத்திரத்தை வகித்திருக்கிறார்கள். சரி தவறு என்பதற்கு அப்பால் அவர்களின் போராட்ட உணர்வு பேரவையின் அடிமைத் தனத்தோடு ஒப்பிடும் போது மதிக்கத்தக்கது.
இளைஞர்களின் போராட்டம் என்பது அடிமைத் தனத்திற்கு எதிரான போராட்டமாகக் கருதப்படவேண்டும்.
தவிர, புலி இலச்சனை பொறிக்கப்பட்ட இந்தக் கொடி எவ்வாறு ராஜராஜ சோழன் காலத்து அடிமைத் தனத்தின் சின்னம் என்பதையும், அதன் அரசியல் எவ்வாறு தோற்றுப் போனது என்பதையும் முன்வைத்து புதிய அடையாளத்தை உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் இணைக்கும் வகையில் பிரித்தானியத் தமிழர் பேரவை முன்மொழிந்திருக்குமானால் அது புதிய போராட்ட அரசியலின் நுளைவாசலாக அமைய வாய்ப்புக்கள் இருந்திருக்கும்.
3 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்ட இந்த நிகழ்வில் வழமை போல பிரித்தானிய அரசியல் வாதிகள் ஒருவர் பின் ஒருவராகப் பேசி தமது வாக்குத் திரட்டும் களமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
பிரித்தானியத் தமிழர் பேரவையைச் சார்ந்தவர்கள் பேசும் போது, 30 வருட ஆயுதப் போராட்டம், 30 வருட ஆயுதப் போராட்டம், இப்போது ராஜதந்திரப் போராட்டம் நடக்கிறது என்று கேலிக்கிடமாகப் பேசி தமது எஜமானர்களும் இனக்கொலையின் பங்காளிகளுமான பிரித்தானிய அரசியல் வாதிகளுக்குக் களம் அமைத்துக்கொடுத்தனர்.
கொடி இழுபறி தொடர்பாக இணையம் ஒன்றில் வெளியாகியிருந்த காணொளி: