Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லண்டன் ஓவல் மைதானத்தில் அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது இலங்கை அரச குண்டர்படை தாக்குதல்

ovel-clashலண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதன் போது இலங்கையைப் புறக்கணிகக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை தமிழர்கள் நடத்தினர். அமைதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள் மீது சிங்கக் கொடி ஏந்திய காடையர் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. பிரித்தானிய போலிசாரின் தலையீட்டின் பின்னர் காடையர் கும்பல் கலைக்கப்பட்டது. உதைபந்தாட்டம், துடுப்பாட்டம் போன்றவற்றால் வெறியூட்டப்பட்ட குழுக்கள் மோதிக்கொள்வது வழமை. அதிலும் அதிகாரவர்க்கத்தின் அரசியல் இணைந்துவிட்டால் மோதல்கள் கோர வடிவத்தை எடுக்கின்றன.

இலங்கை அரசின் நோக்கம் தெளிவானது. சிங்கள மக்கள்மத்தியில் இனவெறியைத் தூண்டி அதனை ஆயுதமாகப் பயன்படுத்தி அடுத்த தேர்தலில் வெற்றிகொள்வது தான். சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாத வெறியைத் தூண்ட வேண்டுமாயின் தமிழ் மக்கள் மத்தியில் இனவெறிகொண்ட கூட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும், அவர்கள் சிங்கள மக்களை அழிப்போம் என்று வெறிகொள்ளும் போது சிங்கள மக்களை அதனைப் பயன்படுத்தி அணித்திரட்டிக்கொண்டு ஆட்சி நாற்காலிகளில் அமர்ந்து கொள்வார்கள்.

இவ்வாறு சிங்கள மக்களில் ஒரு பகுதியினரை வெறி கொண்டவர்களாக மாற்றுவதற்கு எவ்வாறு அரச ஆதரவுக் காடையர்கள் துணை போகின்றனரோ அவ்வாறே தமிழ்ப் பேசும் மக்களின் மத்தியிலுள்ள சில பிழைப்புவாதிகளும் துணை போகின்றனர். அவர்களுக்கு இனவாதம் பல வழிகளில் தமது பிழைப்புக்கு அவசியமாகின்றது. முழுச் சிங்கள மக்களையும் ராஜபக்ச பேரினவாத அரசிற்கு ஆதரவாக மாற்றும் வகையில் சிங்கள மக்கள் மீது வெறுக்கத்தக்க இனவாத வெறுப்பை திணிக்கின்றனர். ஓவல் மைதான சம்பவத்தின் பின்னர் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள பிழைப்புவாதக் கும்பல்கள் இணையங்களின் ஊடாகவும், குறுஞ்செய்திகள் ஊடாகவும் இனவாதத்தைத் தூண்ட ஆரம்பித்துவிட்டனர்.

தமிழ் இனவாதம் என்பது சிங்கள மக்களை ராஜபக்சவிற்கு ஆதரவாக ஓரணியில் திரட்டும்  என்பதையெல்லாம் இவர்கள் கண்டுகொள்வதில்லை. ராஜபக்ச அரசின் தமிழ் அடியாட் கும்பல்களுக்கு இவர்கள் நியாயம் சேர்த்துக்கொடுக்கிறார்கள் என்பதையும் புறக்கணித்துவிடுகிறார்கள். இடதுசாரி எழுச்சிகளைக் கூட இனவாதமாக மாற்றுவதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்றவற்றின் வளர்ச்சிக்கும் இவர்கள் துணைபோகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்வின் போன்ற சில  செய்தி இணையங்கள் பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்.

Exit mobile version