16.01.2009.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை ஜனவரி 16 மாலை 4:30 மணிக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக கண்டனப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இக்கண்டனப் போராட்டத்தை தேசம்நெற், கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல், எக்சைல் ஜேர்னலிஸ்ட் நெற்வேர்க் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. நேற்று ஜனவரி 15 பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்காவின் படுகொலையைக் கண்டிக்கும் இந்தப் போராட்டத்தில் தேசம்நெற் கட்டுரையாளர்கள் செய்தியாளர்கள் கருத்தாளர்கள் வாசகர்கள் கலந்துகொண்டு இலங்கை அரசின் ஊடக ஒடுக்குமுறைக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும் என தேசம்நெற் கேட்டுக்கொள்கிறது.
லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலை சர்வதேச கண்டனத்தை இலங்கை அரசுக்கு எதிராகத் திருப்பி உள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் மீதான தனது வெற்றிக்குள் லசந்தவின் படுகொலையை இலங்கை அரசு மறைக்க முற்பட்டாலும் அதனையும் மீறி சர்வதேச ஊடகங்களில் லசந்தவின் படுகொலையில் இலங்கை அரசை அம்பலப்படுத்தி உள்ளது.