பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர். பிரித்தானியாவில் சர்ச்சைக்குரிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நடத்தப்பட்ட மாவீரர் தினத்தில் ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. நிழல் படம் பிடிப்பதற்கும், செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி வழங்கப்பவில்லை. உணவுப் பண்டங்களும், இலச்சனைகளும், சின்னங்களும், வெளியீடுகளும் விற்பனை செய்யப்பட்டன. இனியொரு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஒருவர் புகைப்படம் எடுக்க முற்பட்ட போது ஒழுங்கமைபாளர்களால் தடுக்கப்பட்டார். அதையும் மீறி அவரது கமராவில் சிக்கிய சில வெளிவராத காட்சிகளை இங்கே பதிவு செய்கிறோம். மரணத்திற்கு அஞ்சாது மக்களுக்காகப் போராடிய போராளிகளின் தியாகம் பிழைப்பிற்காகப் பயன்படுவதையும், புரட்சிகரமாக நடத்தப்பட வேண்டிய அனைத்துப் போராளிகளின் நினைவு கூரல் வியாபாரமாக்கப்படுவதையும் தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.
ஈழத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் பேரினவாத இராணுவத்தின் ஆட்சியில் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாழ்நிலங்கள் சூறையாடப்பட்டு இராணுவக் குடியிருப்புக்களாக மாற்றப்படுகின்றன. போதைப்பொருள் வியாபாரத்தை இராணுவமே திட்டமிட்டு நடத்துகிறது. இளைஞர்களின் சமூக உணர்வு களியாட்டங்களால் சிதைக்கப்படுகின்றன்றது. தூண்டப்படும் போது உணர்ச்சிவசப்படவும், மற்றைய நாட்கள் முழுவதும் களியாட்டங்களை நடத்தவும் இளைஞர்கள் பழக்கப்படுத்தப்படுகின்றனர். இனவழிப்பு நடந்து ஐந்து வருடங்களின் பின்னரும் சரணடையச் செய்யப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரச பாசிஸ்டுக்கள் கூறத் தலைப்படவில்லை.இதற்காக பல்தேசிய நிறுவனங்கள் பணத்தை வாரியிறைக்கின்றன.
இன்னும் ஐந்து வருடங்களின் பின்னால் கிழக்கைப் போன்று வடக்கிலும் தமிழர்கள் சிறுபான்மையாகிவிடுவார்கள். தமிழர்களின் தலைமையை வலிந்து பிடித்து வைத்திருக்கும் சந்தர்ப்பவாதிகள் அப்போதும் மாவீரர் தினம் என்ற சடங்கையும் கொண்டாட்டங்களையும் நடத்திக்கொண்டிருப்பார்கள்.
இவற்றில் எதனைப் பற்றியும் மக்களுக்குக் கூறவோ, மக்களை விழிப்படையச் செய்யவோ முனையாத பிழைப்புவாதிகளின் இறுதி ஆயுதம் மாவீரர் நிகழ்வாக மாறிய அவலமே இன்றைய நிகழ்வு.