அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் அகதிகளைத் இலங்கை இனப்படுகொலை அரசை நோக்கித் திருப்பியனுப்பும் நடவடிக்கைக்கு எதிராக லண்டனில் அமைந்துள்ள அவுஸ்திரேலியத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது(07.07.2014). அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழு ஒழுங்கு செய்த இப் போராட்டத்தின் இடையில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையத்தின் (UNHCR) பிரித்தானியப் பிரதிநிதியிடமும், அவுஸ்திரேலியத் தூதரகத்தின் ஊடகப் பிரதிநிதியிடமும் அறிகைகள் கையளிக்கப்பட்டன. தொன்மையான தமிழர் வாத்தியமான பறை ஒலியுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் திரு.சத்தியசீலனின் உரையுடன் மாலை 6 மணியளவில் நிறைவுற்றது.
UNHCR இன் லண்டன் பிரதிநிதியான ரொனால்ட் ஷில்லிங் உடன் நடைபெற்ற உரையாடலில், தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்பும் அவுஸ்திரேலியாவின் சட்டவிரோத நடவடிக்கையைத் தாம் வன்மையாகக் கண்டித்திருப்பதாகத் தெரிவித்தார். வெற்றுக் கண்டனங்கள் பயனற்றவை எனவும் நடவடிக்கையையே தாம் எதிர்பார்ப்பதாகவும் அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டது. சத்தியசீலன் அவுஸ்திரேலியத் தூதரக அறிக்கையையும், ஷாயினி UNHCR அறிகையையும் கையளித்தனர்.
ரொனால்ட் ஷில்லிங் அறிக்கைக்கு ஒரு சில நாட்களில் பதில் தருவதாகத் தெரிவித்தார்.
-தமிழ் அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழு