Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம்:தமிழ் அகதிகள் அனாதைகள் அல்ல!

protest_inioru_in_london

போர்க்குற்றமிழைத்தவர்கள் ஆட்சி செய்யும் நாடு இலங்கையென ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையின் போர்க்குற்றவாளிகளிடமிருந்தும் அவர்களின் இராணுவம் மற்றும் போலிஸ் படைகளிடமிருந்தும் உயிரைப் பாதுகாப்பதற்காகத் தமிழர்கள் அன்னிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்றவாளிகள் எனக் கூறும் இலங்கைக்கு அதன் துணை அமைப்பான அகதிகள் முகவர் நிறுவனம்(UNHCR) அகதிகளைத் திருப்பி அனுப்புவதை அங்கீகரிக்கின்றது.

மலேசிய நாட்டிலிருந்து அகதிகள் திருப்பி அனுப்பப்படும் போது அவர்கள் UNHCR  இன் அகதி உரிமை பெற்றிருந்தனர். உலகம் முழுவதும் இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தை(UNHCR) நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்திலுள்ளானர்.

லியோ சீமான்பிள்ளை என்ற தமிழ் அகதி திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் தீமூட்டித் தற்கொலை செய்துகொண்டார்.

ஆக, இலங்கைப் பேரினவாத அரசு தண்டிக்கப்பட்டு அதன் இராணுவம் கலைக்கப்படும் வரை தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அது சட்டத்திற்கும் நியாயத்திற்கும் முரணானது என்றும் கோரிக்கைகளை முன்வைத்து லண்டன் UNHCR முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் UNHCR இற்கு எதிரான பிரச்சார இயக்கத்தின் ஆரம்பப்புள்ளியாகும். திரளாக மக்கள் கலந்து கொண்ட இன்றைய (06.062014) போராட்டத்தின் முன்னர் UNHCR இன் அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

போராட்டம் தொடரும் எனவும் 28 ஆம் திகதி ஜூன் 2014 அன்று பொதுக்கூட்டம் ஒன்று அறிவிக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

தமிழர் வாத்தியமான பறை ஒலித்து நடத்தப்பட்ட போராட்டம் பலரின் கவனத்தை ஈர்த்தது.

அகதிகளுக்கான ஐ.நா சபையின் ஆணையைப் பாதுகாப்பதை இயக்கமாகத் தொடரும் நோக்கியில் போராட்டக் குழுவினர் இணையம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்:

http://protect1951.co.uk/

Exit mobile version