Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லண்டனில் இந்திய மாணவர்களின் அவல நிலை!

பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் கல்வி கற்பதற்காக பிரித்தானியாவிற்கு வந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பகுதி நேர வேலை ஏதும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பெரும் துன்பங்கள் அனுபவித்து வருகின்றனர். இது தொடர்பாக பீ.பீ.சி வானொலிசேவை 5 ஒரு நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்து ஒலிபரப்பியது. மேலும் 2009 ஏப்பிரல் மாதம் புள்ளி வழங்கள் அடிப்படையிலான வெளி நாட்டவர் குடியேற்றத் திட்ட முறையொன்றை பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து மாணவர்களாக வரும் இந்தியக் குடியேற்ற வாசிகளின் தொகை மூன்று மடங்காக அதிகரித்திருப்பதாக பி.ரி.ஐ செய்தி அமைப்பு தெரிவிக்கிறது.

பெரும்பாலனவர்கள் தமது வாழ்க்கைச் செலவுக்காக பகுதி நேர வேலையொன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பிரித்தானியாவின் லண்டன் பகுதிகளிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் வந்ததாகவும், பிரித்தானியாவில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை பெறுதல் என்பது இலகுவானதாக இருக்கவில்லை என்று மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மேற்கு லண்டனில் சவுத்ஹோல் பகுதியில் அமைந்துள்ள சீக்கியரின் வழிபாட்டிடமான குர்வரா இல் வழங்கப்படும் இலவச உணவைப் பெற்றே வாழ்க்கையை ஓட்டும் நிலை உருவாகியிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

குர்வராவில் தஞ்சமடைந்துள்ள நிதின் வாலியா என்ற இந்திய மாணவர் பீபீசீ சேவை 5 இற்கு தெரிவித போது ” தங்குவதற்கான அறை ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொள்வதற்கு என்னிடம் போதிய பணம் இல்லை, இந்தியாவிலுள்ள எனது உறவினர்களிடம் பஸ் பிரயாணச் சீட்டை வாங்குவதற்காகவே கடனாகப் பணம் பெற்றுக்கொள்கிறேன். எனக்குப் பகுதி நேர வேலை கிடைக்காவிட்டல் நான் தங்குமிடம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாது. இதே நிலை தொடருமானால், நான் நாடுதிரும்பும் நோக்கத்திலேயே உள்ளேன்” என்கிறார்.

” இங்கு வாழ முடியாத நிலையே காணப்படுகிறது இங்கு வருவதற்குக் கடனாக வாங்கிய பணத்தை எப்படித் திருப்பிச் செலுத்தப் போகிறேனோ” என்று வருத்தப்படுகிறார் திதார் சிங் என்ற மாணவர்.

“இந்தியாவிலுள்ள முகவர் லண்டன் சென்றதும் உங்கள் செலவிற்கான பணத்தை பகுதி நேர வேலைசெய்தே பெற்றுக்கொள்ளலாம் என்றார். நீங்கள் நிச்சயமாக ஏதாவது வேலை பெற்றுக்கொள்வீர்கள் என்று நம்பிக்கை வழங்கினார் ஆனால் இங்கு நிலைமை வேறு. எங்கும் வேலை இல்லை.” என்கிறார் ரவி சிங். சீக்கியர்களின் சிறீ குரு சிங் சபா, அல்லல் படும் மாணர்வகளுக்கு ஆலோசனை வழங்கவென ஒரு இலவச தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது(020 8574 8901).
பீபீசி சேவைக்கு நேர்முகம் வழங்கிய இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் ” சில மாணவர்கள் தாம் திரும்பிச்செல்ல உதவுமாறு எம்மைக் கெஞ்சுகிறார்கள். ஆனால் அதற்கான பண வசதி தம்மிடம் இல்லை என்கிறார்.”

இவ்வமைப்பு மத வேற்றுமையின்றி உதவி வழங்கிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் நாட்டிலிருந்து வந்த மாணவர்கள் சிலரை நாம் தொடர்பு கொண்ட போது, இரண்டு அறைகள் கொண்ட சிறிய விடொன்றில் சுமார் 14 மாணவர்கள் -இலங்கையிலிருந்து வந்தவர்கள் உட்பட- வசிப்பதாகவும் இவர்களுள் மூவர்மட்டுமே பகுதி நேர வேலை பெற்றுள்ளதால் வாடகைப் பணத்தையும் குறைந்த பட்சம் ஒரு நேர உணவையும் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்ளூர் முகவர்களின் ஆசைவார்த்தைகளிற்கும், பல்கலைக் கழகங்களின் பணம் பறிக்கும் திட்டத்திற்கும் பலியாகிப் போன இந்த அப்பாவி மாணவர்கள் இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொள்ள முயற்சித்த போது எந்தப்பலனும் கிட்டவில்லை என்கின்றனர். லண்டன் மெற்றோப் பொலிதேன் பல்கலைக் கழகம் போன்ற பல நிறுவனங்களில் பணம் செலுத்தாத மாணவர்களை உள்ளே அனுமதிக்காத வகையில் மின்னியல் அட்டை முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். பல கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் இந்திய மாணவர்களின் பணத்திலேயே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

மிடில்செக்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தெரிவிகையில் தமது கற்கைப் பிரிவில் 100 மானவர்கள் வரை உள்ளதாகவும் அதில் 95 வீதமானோர் இந்திய மாணவர்களே என்றும் தெரிவிக்கிறார்.

Exit mobile version