Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லண்டனில் இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் : ஈழப் போராட்டத்தின் புதிய திசை

 

முற்போக்கு நேபாள சமூகம் (Progressive Nepalese Society) என்ற அமைப்பு தெற்காசியாவில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், நேபாளத்தில் இந்தியத் தலையீட்டிற்கு எதிராகவும், பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசபடைகளின் தாக்குதலுக்கு எதிராகவும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இன்று  பன்னிரண்டு மணிக்கு லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியது. இந்தியத் தூதரகம் வரை ஊர்வலமாகச் சென்று இந்திய அரசைக் கண்டிகும் மகஜர் கையளிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய புதிய திசைகள் அமைப்பின் உறுப்பினர், இலங்கையில் ஐம்பதாயிரம் மக்கள் சில நாட்களுள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்திய சீன அரசுகள் செயற்பட்டதாகவும், இந்திய அரசின் பின்னணியில் இன்றும் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்வதாகவும், இதற்காக சர்வதேச சமூகத்துடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகள் தவிர இந்தியாவின் உள்ளேயே சொந்த மண்ணில் ஆயிரக்கணக்கான ஏழைகள் அகதிகளாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் அழிக்கப்படுவதையும் கண்டித்தார்.

குர்தீஸ் போராட்ட அமைப்பைச் சார்ந்தவர்களும், பல பிரித்தானிய அமைப்புக்களும் கலந்துகொண்ட ஆர்ப்பாட்ட நிகழ்வானது ஈழப் பிரச்சனையைச் சர்வதேச போராடும் மக்கள்பகுதியோடு இணைக்கும் நிகழ்வின் முதற்கட்டமாக இது அமையலாம் எனப் பரவலாகக் கருத்து நிலவியது.

Exit mobile version