பிரித்தானியத் தமிழர் பேரவை இந்த மிரட்டல்களுக்கு எதிரான குறைந்தபட்ச நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளாமலிருப்பதன் பின்னணி பல சந்தேகங்களைக் கொண்டது.
நீலன் படையணி எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் குழு ஒன்று பிரித்தானியாவில் மிரட்டல் அணி போன்று செயற்படுவதாகவும், பல்வேறு உள் மோதல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் லண்டனிலிருந்து கருத்துத் தெரிவிக்கவல்ல ஒருவர் கூறினார்.
தவிர, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உள் முரண்பாடுகள் காரணமாக புதிய பொறுப்பதிகாரி ஒருவரை நியமிக்கப் போவதாக அந்த நிறுவனத்தைச் சார்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். கடந்த காலம் தொடர்பான விமர்சனங்களின்றி, மக்களின் பணம் குறித்த தகவல்கள் இருட்டடிப்புச் செய்யப்பட பின்னர் பொறுப்பதிகாரியை மாற்றுவது என்பது வாக்குக் கட்சிகள் ஆளை மாற்றித் தேர்தலில் பங்குபற்றுவது போன்றதாகும்.
இங்கு புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியில் காணப்படுவது நிர்வாகம் தொடர்பான பிரச்சனை அல்ல. அரசியல் தொடர்பானது. எந்த வேலைத்திட்டமுமின்றி அடையாளங்களை மட்டுமே வைத்துக்கொண்டு உணர்ச்சி அரசியல் நடத்தும் புலம்பெயர் அமைப்புக்கள் அரசியல் எதிரியைப் பலப்படுத்தும் கருவிகளாகச் செயற்படுகின்றன.
மரணச் சடங்கு நடத்தும் நிறுவனங்கள்(funeral service) போன்று மாறிவிட்ட இந்த அமைப்புக்கள் ஆளை மாற்றுவதால் புனிதமடைந்து விடமாட்டா. விமர்சன – சுய விமரசன அடிப்படையில் அரசியலை மாற்றினால் அது எதிர்காலத்தில் நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கும்.
மக்களின் அவலங்கள் இவர்களைப் பாதிப்பதில்லை. விடுதலை இவர்களின் நோக்கமல்ல. மரணச் சடங்குகளில் சுருட்டும் பணமே இவர்களின் குறி!