ஈழத் தமிழர்களைப் போன்றே புலம்பெயர்ந்த பல்வேறு போராடும் தேசிய இனங்களைக் காணலாம். குர்தீஷ் தேசிய இனங்கள் புலம்பெர்ந்த போது, அவர்களின் பெரும்பகுதி புதிய கலாச்சார முகத்தை ஏனைய இஸ்லாமியர்களுக்கே அறிமுகப்படுத்தியது. கலை கலாச்சார நிகழ்வுகள் அவர்களின் அவலங்களையும் உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் பிரதிபலித்தது.
புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் தமது அடையாளத்திற்காக நடத்திக்கொள்ளும் அரசியல் களியாட்ட விழக்களில் பணம் திரட்டிக்கொள்ள மக்கள் அரசியல் மயப்படுத்தபடாமல் பிற்போக்கான தமது பழக்கவழக்கங்களை மேலும் ஆழமாகப் பற்றிக்கொண்டனர்.
ஐம்பதாவது பிறந்தநாள் கொண்டாட்டம், சாமத்தியச் சடங்கு, கோவில்கள், தென்னிந்திய சினிமாக் களியாட்டங்கள் போன்றனவே புலம்பெயர் கலாச்சாரமாகிவிட்டது. இக்கலாச்சாரத்தைத் தாங்கிப்பிடிக்க தொழில் நுட்படத்தைப் பயன்படுத்திக்கொண்ட வியாபாரிகள் அதனை மேலும் இருளுக்குள் தள்ளினர்.
தேசியத்தை மூலதனமாக்கிய சிலர் அது காலவதியாகும் நிலையில் கோவில்களில் முதலிடுகின்றனர்.
முன்பெல்லாம் கோவில்களுக்கு பக்தர்கள் காத தூரங்களை நடந்து செல்வது கொழுப்பைக் குறைத்துக்கொள்ளவாது உதவும். அவர்களைக் கூட வீடுகளுக்குள்ளேயே முடக்கி எலக்ரோனிக் கடவுள்களை உருவாக்கிவிட்டார்கள். தொலைக்காட்சியின் ஊடாக ரியல் கற்பூரத்திற்குப் பதிலாக டோச் லைட் அடித்துக் காட்டுவதற்கு இவர்கள் புரட்சிகரமாகச் சிந்திப்பார்கள் என்று தோன்றுகிறது.
ஒம்காரா என்ற கோவில் பிசினஸ் சட்டலைட் ஊடாக வீடுகளில் வந்து குந்திவிடும் என்று அதன் உரிமையாளர்களில் ஒருவரான சிறீதரன் என்ற ராஜாஜி கூறுகிறார். முன்னை நாள் தமிழ்த் தேசிய செய்தித் தயாரிப்பாளரான ராஜாஜி, ரிரிஎன் மற்றும் ஜீரிவி ஆகிய தொலைக்காட்சிகளில் பணியாற்றிய ‘தேசியப் பெருமை’ கொண்டவர்.
குறைந்த பட்ஜட்டில் இந்துத்துவம் வீடுகளில் மணம் வீசும் என்கிறார் ராஜாஜி. மாதம் 15 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸ் சிக்கன செலவில் காவிகளின் காலாச்சாரம் அகதிகளாகப் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் அறிமுகமாகிறதாம். பக்தர்கள் பலர் நன்கொடை தருவதாக்ச் சொல்லியிருக்கிறார்களாம்.
இதைவிட நாகபூசணி அம்பாள் கூட எலக்ரோனிக் அம்பாளாக வலம் வருகிறார். லண்டன் புறநகர் பகுதியான என்பீல்டிலிருந்து எயாரில் அம்பாள் அருள் பாலிக்க வருகிறார்.
தொலைகாட்சியில் பூசை வேறு நடக்கிறது. அதுவும் ஐ.பி தொலைக்காட்சி. விஜய் ரிவி இன் சுப்பர் சிங்கரை முடித்த கையோடு பட்டனைத் தட்டினால் அம்பாள் வரவேற்பறையில் வீற்றிருப்பார். லண்டன் என்பீல்ட் பகுதியில் நடைபெறும் நாகபூசணி அம்பாள் கோவில் நிகழ்வுகள் சிக்னல்களாகக் காற்றுடன் கலந்து தொலைக்காட்சியில் தெரிய பனிக்காலத்தில் வீட்டைச் சுற்றி பிரதட்டை செய்யலாம்.
மக்களிடமிருக்கும் சிறிய முற்போக்கான சிந்தனையையும் சிதறடித்து அவர்களைப் பக்திப் பேய் பிடிக்கவைக்கும் இந்தச் சமூகவிரோத வியாபாரிகள் சமூகத்தின் விச வித்துக்கள். கல்லில் காட்சி தந்த அம்பாளை எலக்ரோனிக் அம்பாளாக மாற்றிய இவர்களின் இவர்களின் பின்னணி ஆய்வுக்குரியது.