Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லண்டனிலும் தமிழ் நாட்டிலும் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள்!

இலங்கை அரசு தனது இனச் சுத்திகரிபை அதிகரித்து வரும் நிலையில் அதன் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்கள் அற்றுப் போன வெறுமை நிலையே காணப்படுகிறது. அதே வேளை இலங்கை அரசின் அரசியல் அடியாட்களாகத் தொழிற்படும் பல தமிழர்கள் இலங்கை இந்தியா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் இலங்கை அரசின் கொடூரங்களுக்கு எதிராகப் பேசுவதே தவறானது என்ற கருத்தை ஏற்படுத்த திட்டமிட்ட வகையில் செயலாற்றி வருகின்றனர். ஒரு புறத்தில் வடகிழக்கை சிங்கள பௌத்த இராணுவ மயப்படுத்தக் கூடிய வகையிலான சூழலை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கமாக அமைய, மறு புறத்தில் இவர்களின் வியாபார நலன்களும் திருப்திசெய்யப்படுகின்றது. குறுந் தேசிய நலன்களைக் கடந்து இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் சாத்தியமான அனைத்து வகைகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த வகையில் புதிய திசைகள் என்ற பிரித்தானியப் புலம்பெயர் தமிழர்களின் அமைப்பு 21.08.2010 அன்று லண்டனில் போராட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இலங்கை அரச அடக்குமுறைகளை எதிர்த்து பிரித்தானிய முற்போக்கு அமைப்புக்களுடன் இணைந்து நடத்தப்படவிருக்கும் இந்த ஆர்ப்பாட்ட நிகழ்விற்கு பல பிரித்தானிய அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன என புதிய திசைகளைச் சேர்ந்த பாலன் தெரிவித்தார். பிரித்தானிய வெள்ளையின மக்கள் மத்தியிலும் ஏனைய போராட்ட சக்திகள் மத்தியிலும் பிரச்சாரமாக மேற்கொள்ளப்படவிருக்கும் இந்தப் ஆர்பாட்டமும் அது குறித்த நிகழ்வுகளுக்கும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து புதிய திசைகள் ஆதரவை வேண்டி நிற்பதாகதாக அவர் மேலும் தெரிவித்தார். தமிழ் நாட்டில் முத்துக்குமார் மரண ஊர்வலம் உட்பட பல ஈழ ஆதரவுப் போராட்டங்களை முன்னின்று நடத்திய மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க) மற்றும் அதன் தோழமை அமைப்புக்களும் இதே நாளில் போராட்டங்களைப் தமிழ் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை அரச அடக்குமுறைக்கு எதிரான முழக்கங்களுடன் தமிழ் நாடு முழுவதும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் நண்பர்கள் யார் என அடையாளம் காட்டுவதாக அமைகிறது.

Exit mobile version