Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லசந்த விக்ரமசிங்க படுகொலையில் சர்ச்சைகள் எழுந்துள்ளன!

இலங்கையின் முன்னணி ஊடகவியலாளரும் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்தாரா அல்லது தலையில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்தாரா என்பது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.

சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது வைத்தியர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், கூரிய ஆயுதமொன்றினால் லசந்தவின் தலையில் தாக்கப்பட்டதனால் அவர் உயிரிழந்திருக்கக் கூடுமென சட்ட வைத்திய அதிகாரி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் மிரிஹான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தன. பின்னர் லசந்தவின் குடும்ப சட்டத்தரணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் துரித கதியில் விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்கிஸ்ஸ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும், இதுவரை காலமும் இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என லசந்த விக்ரமசிங்கவின் கையடக்கத் தொலைபேசியை சம்பவத்திலிருந்து எடுத்திருந்த முச்சக்கர வண்டி சாரதியே கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்ட குற்றச்சாட்டு மாத்திரமே சுமத்தப்பட்டுள்ளது, எனினும், லசந்தவின் கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை எதுவித உரிய விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லையென சர்வதேச ஊடக அமைப்புக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

படுகொலைச் சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Exit mobile version