09.01.2009.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபன பணிப்பாளர் சபை தனது அதிர்ச்சியையும் கவலையையும் தெரிவித்துள்ளது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
“”காலஞ்சென்ற லசந்த விக்கிரமதுங்க தற்போதைய அரசாங்கத்துடனும் அதற்கு முன்னைய அரசாங்கத்துடனும் முரண்பாடான போக்குகளையே கொண்டிருந்தார் என்பது தெரிந்ததே.
எம்.ரி.வி, எம்.பி.சி. நிறுவனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆயுத தாக்குதல் நடைபெற்று இரண்டு நாட்களுக்குப் பின்னரே இந்தக் கொலை இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இடம்பெற்ற அத்தகைய சம்பவங்கள் மீது நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படாத ஒரு நிலைமை அரசாங்க முகவர் மற்றும் அதனைச் சார்ந்தோர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற ஒரு பொது எண்ணப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே தீவிரமான விசாரணை மேற்கொள்வதன் மூலம் அத்தகைய சந்தேகத்தை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மற்றும் அவர் சார்ந்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. நேசன் பத்திரிகையின் கீத் நொயர் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தைச் சேர்ந்த நாமல் பெரேரா உட்பட ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் மீது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக எந்தவொரு சந்தேகநபரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
சம்பந்தப்பட்ட அனைவரதும் நலன்கருதி தெளிவான விசாரணையை மேற்கொள்வதுடன் சந்தேகநபர்களை துரிதமாக கைது செய்வதும் அவசியமாகும். இச்சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டுவர அனைத்து வளங்களையும் பிரயோகிக்க வேண்டுமென்று அரசாங்கத்தை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கேட்டுக்கொள்கிறது.””