Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லசந்த கொலை மகிந்த ராஜபக்சவின் நேரடி உத்தரவின் பேரிலேயே நடைபெற்றது : சோனாலி

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலையில் கட்டிவிட்டு அவரை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதுடன், தானும் தப்பித்துக் கொள்ளும் முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அரசாங்கமும் முன்னெடுத்து வருகின்றனர்.
அதற்கான சாட்சியங்களை உருவாக்கும் பணிகள் தற்போதைக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக லசந்தவின் கொலையில் சரத் பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பதாக பிரித்தானியத் தூதரக அதிகாரிகள் தன்னிடம் கருத்துத் தெரிவித்ததாக அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை, கீத் நொயர், நாமல் பெரேரா, உபாலி தென்னக்கோன் ஆகிய ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் என்பவற்றில் சரத் பொன்சேகாவுக்குத் தொடர்பிருப்பதாக அண்மையில் சண்டே லீடர் ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸ் பத்தியொன்றை எழுதியிருந்தார்.
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய இராணுவச் சிப்பாய்கள் சரத் பொன்சேகாவின் நெருங்கிய ஆதரவைப் பெற்ற சிப்பாய்கள் என்று தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும் அதனை வன்மையாக மறுத்துள்ள லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி சொனாலி விக்கிரமதுங்க, தனது கணவன் லசந்தவின் படுகொலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அது தவிர சரத் பொன்சேகாவுக்கு அதில் தொடர்பிருப்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ், தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் ஊதுகுழலாக மாறியுள்ளதுடன் அவரது சேவையைக் கௌரவிக்குமுகமாக அவருக்கு அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தவிர, சண்டே லீடர் நிறுவனத்தை கோதாபாய ராஜபக்ச பெருந்தொகைப் பணம் கொடுத்து வாங்கியிருப்பதாகவும் அதன் பங்குதாரர்களில் ஒருவராக தற்போதைய ஆசிரியர் இணைத்துக்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியகியுள்ளன.
இதே வேளை, மஹிந்த ராஜபக்ஷவின் நேரடிப் பணிப்புரையிலேயே லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதாக லசந்தவின் மனைவி சொனாலி விக்கிரமதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.

Exit mobile version