Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லசந்த உயிர்நீத்த ஓராண்டு!

காலம் கடந்து அகோரங்களை மறைக்க எத்தனிக்கும் அரசியல் வாழ்க்கையில் உண்மைக்கும் தொழில் தர்மத்திற்கும் இடையில் போராடும் எத்தனையோ ஊடகவியலாளர்கள் எந்த வொரு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அல்லாமல் தொழில் தர்மத்திற்காக மாத்திரமே கொல்லப்படுகின்ற துறை ஊடகவியல்…..

ஏன் இத்தனை கிறுக்கல்கள் என்றால் இன்று சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான ஆசியர்,ஊடகவியலாளர்,வழக்கறிஞருமான லசந்த விக்கிரமதுங்க படு கோரமாகக் கொலை செய்யப்பட்ட நாள்.

நாட்டில் வன்முறையும் பயங்கரவாதமும் தலைதுக்கி நின்ற கொடூர காலமதில் செயற்பட்ட ஒரு துணிச்சல் மிக்க ஊடகவியலாளர்.

1958ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியன்று அகவை 50இல் கால்பதிக்க முற்பட்டவர் ஜனவரி மாதம் 08ஆம் திகதி இனந்தெரியாத ஆயுத குழுக்களால் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டார். லசந்த விக்கிரமதுங்கவின் அறியப்படாத மற்றுமொரு பெயர் சுரினிமாலா.

1982 ஆம் ஆண்டில் தி ஐலண்ட் பத்திரிகையில் இணைந்தார். அதே நேரம் அரசியலிலும் தன்னை இணைத்துக் கொண்டார். 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு வடக்குத் தொகுதியில் போட்டியிட்டார். இருந்தும் அவர் தெரிவு செய்யப்படவில்லை. பின்னர் அவுஸ்திரேலியா சென்று திரும்பிய அவர் மீண்டும் 1994 ஆம் ஆண்டில் பத்திரிகையை ஆரம்பித்தார்.

தனது தனிப்பட்ட திறமையினால் ஒரு பாத்திரிகை நிறுவனத்தை நடத்தி வந்த லசந்தவிற்கு முன்வைக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் ஏராளம். தனது வாழ்க்கையை அச்சுறுத்தல்களின் மத்தியிலே வாழ்ந்து வந்த ஆசிரியர், 1995 பெப்ரவரியில் அவரது வாகனத்துள் வைத்துத் தாக்கப்பட்டார். 1998 ஜூனில் அவரது வீட்டின் மீது கிரேனட் வீசப்பட்டது. 2005 அக்டோபரிலும் 2007 நவம்பரிலும் சண்டே லீடர் அச்சகத்திற்கு தீ வைத்து நிர்மூலம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன,

ஊடகவியலாளர் தேசிய ஒன்றியம், சுதந்திர ஊடக அமைப்பு,தமிழ்,ஊடகவியலாளர் ஒன்றியம்,முஸ்லிம் மீடியா போரம்,இலங்கை பத்திரிகை ஆசியர் பேரவை,ஊடக தொழிற்சங்க சம்மேளனம்,இலங்கை தொழில்சார் கலைஞர்களின் சங்கம் போன்ற பல்வேறு சமூக அமைப்புக்கள் செயற்பட்ட காலங்களில் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டதன் பின்னர் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பிணர்கள் மத்தியில் தலைநகர் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டக் கண்டப் பேரணி ஒன்றும் இடம் பெற்றது.

அமெரிக்கா,சீனா,பிரித்தானியா,ஐரோப்பிய யூனியன், உலக வங்கி, உலக சமாதான சபை அத்தனையும் லசந்தவின் கொலையை மிகக் கடுமையாக கண்டித்திருந்தன.

தனது வாழ்வின் அந்தரத்தில் சாசனம் (மரண வாக்கு மூலம்) ஜனவரி 11ஆம் திகதி வெளியாக வேண்டிய சண்டே லீடர் பத்திரிகைக்கு எழுதி வைத்தார். இதேவேளை ஐநாவுக்கான லசந்த விக்கிரமதுங்கவின் கல்வி மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ 2009 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர விருதை 2009 ஆம் ஆண்டு மே 3ஆம் நாளன்று உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் கட்டார் நாட்டில் வழங்கியது.

ஜனநாயகத்தின் முக்கிய நான்கு தூண்களில் ஒன்றாக செயற்படுகின்றவர்கள் ஊடகவியலாளர்கள் இருந்தும் அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்களா? அல்லது ஜனநாயகத்தின் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்களா என்றால் வேதனையே. இதற்கு சிறந்த சான்றுகளாக உலக நாடுகளில் 2009 ஆம் ஆண்டு 76 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 33 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள். 573 பேர் கைது செய்யப்பட்டதுடன் 1456 பேர் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்கள்.

2008 ஆம் ஆண்டில் 60 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். இருப்பினும் இந்த தொகை 2009 ஆம் ஆண்டில் 26 வீத அதிகரித்து. சர்வதேச ஊடக அமைப்புகளின் கடுமையான சட்டரீதியான நடவடிக்கைகளின் தேவையை உணர்த்தியுள்ளது.

ஒரு காலத்தில் யுத்தம், தேர்தல், மற்றும் அரசியல் காரணங்களுக்காகவே படுகொலை செய்யப்பட்டு வந்த ஊடகவியலாளர்கள் இன்று தனியாக நின்று செயற்படுகின்ற ஆயுதக்குழுக்கள் மற்றும் அவற்றுக்கு ஆதரவு வழங்கும் அரசியல்வாதிகளின் அரசியல் லாபங்கள் சுய விருப்பு வெறுப்பு போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அவர்களது சொந்த நாட்டிலேயே கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவங்கள் பல இடம்பெற்று வருகின்றமை இன்றும் தொடர்கின்றன.

உடல் ரீதியாகத் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டு 929 ஆக இருந்தது. எனினும் இவ்வாண்டு சற்றும் களையாது முன்னேறி 1456 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 364 முறைப்பாடுகள் ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ளன. அதிலும் முன்னனியில் இருப்பது இலங்கை,இதற்கு அடுத்த படியாக பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் தமது இடத்தை ஒன்றன் பின் ஒன்றாக பிடித்துள்ளன.

தேர்தல் வன்முறை காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் 30 ஊடகவியலார்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமே கடந்த ஆண்டு அநேகரது விமர்சனத்துக்கு உள்ளானது. அதேவேளை, தமது சுயகருத்துக்களை இணையத்தில் வெளியிட்ட நூற்றுக்கும் அதிகமான வலைப்பதிவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

எகிப்து நாட்டின் வலைப்பதிவர் கரீம் அமீர் தனது சொந்த கருத்தினை வெளியிட்டமைக்காக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அத்துடன் வலைத்தளத்தினூடாக பிரசித்தி பெற்ற சர்கனர் என்ற நகைச்சுவை நடிகர் இன்னும் 34 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவற்றுக்கெல்லாம் மேலாக இலங்கையை சேர்ந்த வளர்ந்து வரும் தமிழ் வலைப்பதிவாளரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டமையும் முக்கிய சாண்று பகருகிறது.

உலகம் முழுவதும் 167 ஊடகவியலாளர்கள் இதுவரை சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் சராசரியாக ஊடகவியலாளர் ஒருவரேனும் ஏதோ ஒரு காரணத்துக்காகத் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஈராக்கில் மாத்திரம் 60 ஊடகவியலாளர்கள் உடலளவில் தாக்கப்பட்டுள்ளார்கள்.

ஊடகங்களின் பங்களிப்பு இல்லை எனின், உலக நகர்வும் வெள்ளைத்தாளாகவே இருக்கும். ஊடகவியலாளர்கள் சமுதாயம் சார்ந்தவர்கள். ஊடகவியலார்கள் குறுகிய நோக்கங்களை சிந்தைகளை மையமாக வைத்து துன்புறுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

2009ஆம் ஆண்டு இரண்டு ஊடகவியலாளர்கள் செய்யப்பட்டுள்ளார்கள். புணீரபலமானவர் ‘சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையே, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவமாகும்.

அதே போன்று, மற்றுமொரு ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் யுத்த காலத்தில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டுக்காகத் தற்போது 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

பெரும்பாலான நாடுகளில் ஊடக சுதந்திரம் இருப்பதாக வெறும் பேச்சளவில் மாத்திரமே கூறப்பட்டு வருகிறது. எனினும் உண்மைச் செய்திகளை வெளிக்கொணர்வதில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் மாற்றுத் தரப்புகளிடமிருந்து வரும் சவால்களுக்கும் தீர்வு காணப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆதாரங்களாக முன்வைக்கப்பட்ட புள்ளிவிபரங்களும், வரலாற்றுச் சான்றுகளும் காலம் கடந்தாலும் நினைவிலிருக்கும் வாழ்க்கைச் சுவடுகளும் உலக நாடுகளில் ஜனநாயகத்துக்குக் கிடைத்த தோல்வியாகவே எண்ணத் தோன்றுகிறது.

எனவே இனி வரும் காலங்களிலாவது இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை உட்பட உலக நாடுகள் முற்படுமா? இதுவே இன்றைய காலத்தின் தேவையாகும்.
( Virakesari )

Exit mobile version