Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லசந்தவின் படுகொலைக்கு சர்வதேச அமைப்புக்கள் கண்டனம்.

09.01.2009.

சண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்து பொதுநலவாய ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஊடகவியல்துறையில் லசந்த விக்கிரமதுங்க சிறப்பாகப் பணியாற்றி வந்தவர் என்றும் இலங்கையில் பல சவால்களுக்கு முகங்கொடுத்தே அவர் தனது சேவையை ஆற்றி வந்தார் எனவும் தனது அறிக்கையில் பொதுநலவாய ஊடகவியலாளர்கள் அமைப்புக் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையும் மனித உரிமை கண்காணிப்பகமும் இணைந்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

இலங்கை அரசாங்கம் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான துரித விசாரணைகளைச் சுதந்திரமாக மேற்கொள்ள வேண்டும். சண்டே லீடருக்கு எதிரான தாக்குதல் இது முதல் தடவையல்ல ஏற்கனவே இதன் அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

லசந்த விக்கிரமதுங்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஒரு முறை கைது செய்யப்பட்டுமிருந்தார். இலங்கையில் ஊடகவியலாளர்கள் அச்சத்துடனேயே பணிபுரிந்து வருவதையும் நாம் அவதானித்து வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளன.

எனினும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் ஒன்றியம் லசந்தவின் கொலைக்கு ஜனாதிபதியும் அரச ஊடகங்களுமே பொறுப்பு எனக் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த இரண்டு தரப்புமே லசந்தவின் கொலைக்கான சூழ்நிலைகளை உருவாக்கியதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version