Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“லங்கா” ஆசிரியர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை அறிந்திருக்கவில்லை என்கிறார் மகிந்த ராஜபக்ச!!!

    பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த எவ்வித குற்றச்சாட்டுக்களோ, பிணையோ, நிபந்தனைகளோ விதிக்கப்படாமல் இன்று விடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 29ம் திகதி கைதுசெய்யப்பட்ட சிறிமல்வத்தபாதுகாப்புச் செயலாளரின் மூன்று மாத தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

கங்கொடவில நீதிமன்ற நீதவானின் முன்னிலையில் இவர் நேற்று   (16) இரகசியக் காவல்துறையினரால் ஆஜர்படுத்தப்பட்டார். பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக் காவல் உத்தரவின்பேரில் சிறிமல்வத்த சிறைவைக்கப்பட்டதால் அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டதாகவும் எனவே அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறுகோரி உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அலரிமாளிகையில் 15ம் திகதி  மாலை இடம்பெற்ற அரசாங்க ஊடகங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட அரசசார்பற்ற நிறுவனமொன்றின் தலைவர் சிறிமல்வத்த தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கலந்துகொண்ட ராவய ஆசிரியர் விக்டர் ஐவன் எந்தக் காரணத்திற்காக லங்கா  பத்திரிகையின் ஆசிரியர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் எனக் கேட்டுள்ளார். லங்கா பத்திரிகையின் ஆசிரியர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை தான் அறிந்திருக்கவில்லையென ஜனாதிபதி நேரடியாக பதிலளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version