இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கமராவினால் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை வழங்காது கையடக்க தொலைபேசியினால் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காட்சிகளை அனுப்பியவர் யார் என்பதைக் கண்டறியாமல் இருப்பதற்காகவே, அவர் கையடக்க தொலைபேசியில் எடுத்த படக் காட்சிகளை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புத் தரப்பினர் விசாரணை நடத்தி வருவதாக மேலும் தெரியவருகிறது.
குறித்த ஊடகவியலாளர் மீது சந்தேகம் ஏற்படுவதற்கான காரணம், செனல் 4 தொலைக்காட்சியினால் ஒளிபரப்ப்பட்ட காட்சிகளைப் போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் சிலவற்றை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் உள்ள நெருங்கிய சிலரிடம் காண்பித்துள்ளார். அத்துடன் இவர் சர்வதேச ஊடக நிறுவனங்களோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கெதிரான போரின் இறுதி தினங்களில் இராணுவத்தினரின் சிலர், போர்க் களக் காட்சிகளை தமது கையடக்கத் தொலைபேசிகளில் பதிவுசெய்திருந்த போதிலும், அவர்களில் எவரும் செனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லையென பாதுகாப்புத் தரப்பினர் கருதுகின்றனர்.
எனவே, ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளரே குறித்த வீடியோக் காட்சிகளை வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.