Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ருத்திரகுமாருடன் பசிலின் பேரம் உண்மையானதா?

ruthrakumarவடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களில் குறைந்தது பத்துவீதமானவர்கள் தேர்தலை நிராகரித்தால் நாடுகடந்த தமிழீழ அரசைச் சார்ந்த ருத்ரகுமாரிற்கு பணம் வழங்குவதாக பசில் ராஜபக்ச ருத்திரகுமாரிற்கு அனுப்பியதாகக் குறிப்பிடும் மினஞ்சல் ஒன்று சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 2005 ஆம் ஆண்டுத் தேர்தலில் நடைபெற்றது போன்று இத் தேர்தலிலும் பணம் வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளதாகவும், அது தேர்தலுக்கு முன்னதாகவும் பின்னதாகவும் என இரண்டு பகுதிகளாக வழங்கப்படும் எனவும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சலின் அரசியல் பின்புலமே எமது கவனத்திற்குரியது.

தீவிர தமிழ்த் தேசியவாதிகளாத் தம்மை வெளிக்காட்டிக் கொண்டவர்களில் பலர் தேர்தலைப் பகிஷ்கரிக்கவே கோரிவருகின்றனர்.

தமிழ்ப் பேசும் மக்கள் தேர்தலை நிராகரிக்க வேண்டும் என்ற கருத்து அடிப்படையில் சரியானதே. மறுபுறத்தில் , இலங்கையில் தமிழ்ப் பகுதிகளில் தேர்தல் புறக்கணிக்கபட்டால் ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு அது வழிசெய்யும் என்பது வெளிப்படையானது.

பசில் ருத்ரகுமாருக்கு எழுதியதாக வெளியிடப்பட்டுள்ள மின்னஞ்சல்

ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச தோல்வியடைந்து மற்றொரு பேரினவாதியான மைத்திரிபால சிரிசேன ஆட்சிக்கு வருவது ஓரளவு உறுதியாகிவிட்டது. இது ஒரு இக்கட்டான நிலைமை. பிரித்தானிய அரசின் வழி நடத்தலின் அடிப்படையிலேயே ஆட்சி மாற்றத்திற்கான காய்கள் நகர்த்தப்படுகின்றன. இவ்வாறான சூழல் ஒன்று ஏற்படும் என இனியொரு பல தடவைகள் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் சார்ந்த வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்து மக்களை அணிதிடட்டிப் போராடுவதற்கான வெளி ஒன்றை ஏற்படுத்துமாறு இனியொரு கோரிக்களை முன்வைத்த போது அதனை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களான புலம்பெயர் அமைப்புக்கள் இன்று வழி தெரியாமல் இடை நடுவில் நிறுத்தப்பட்டுள்ளன.

தேர்தலைப் பகிஷ்கரித்தால் ராஜபக்சவிற்கு ஆதரவாகவும், வாக்களிக்கச் சொன்னால் மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவாகவும் தேர்தல் முடிவுகள் மாறிச் செல்லும். இரண்டுக்கும் இடையே வேறு வழிகள் இல்லாத நிலையை உருவாக்கியதில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பங்கு பிரதானமானது.

வேலைத்திட்டம் எதையும் முன்வைக்காமல் இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்ட ஏகாதிபத்தியங்களுக்கு தமிழ்ப் பேசும் மக்களின் விரம்செறிந்த போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த இந்த அமைப்புக்களின் தலைமைகள், தம்மை புலி அடையாளத்தின் பின்ன்னாலும் பிரபாகரனின் பின்னாலும் மறைத்துக்கொண்டனர்.

மேற்கு ஏகாதிபத்தியங்களைப் பிடித்து ராஜபக்சவைத் தூக்கில் போடுவதாக புலம்பெயர்ந்த மக்களையும், புலத்திலிருந்தவர்களையும் ஏமாற்றி ஏகாதிபத்தியங்கள் சிரிசேனவிற்கும் ராஜபக்சவிற்கு இடையில் தெரிவை முன்வைக்கும் நிலைக்கு மக்களை இழுத்துவந்து அழிவின் விழிம்பில் நிறுத்தியவர்கள் எந்தக் கூச்சமுமின்றி இன்னும் அரசியல் பேசுகிறார்கள்.

பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளின் உளவுப் படைகள் போன்றே நாடுகடந்த தமிழீழம், தமிழர் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற புலம்பெயர் அமைப்புகள் செயற்பட்டன. புலிகளை வன்னியில் குந்தியிருக்குமாறும் அமெரிக்கா கப்பல் கொண்டுவந்து காப்பாற்றும் எனவும் நம்பிக்கை கொடுத்து புலிகள் அமைப்பை அழித்து ஆயிரக்கணக்கான போராளிகளைச் வதை முகாம்களுக்குள் அடைப்பதற்குத் துணை சென்ற அதே நபர்களே புலம்பெயர் நாடுகளில் இன்று தேசியப் பிரமுகர்கள்.

மைத்திரிபால சிரிசேன ஆட்சிக்கு வந்தால் தாம் அரசியல் பிழைப்பு நடத்த போதிய எதிரிகள் இல்லாத நிலை உருவாகும் என்பது மட்டுமே இவர்களின் துயர்.

ராஜபக்சவிற்கு எதிராக மைத்திரிபாலவையோ, மைத்திரிபாலவிற்கு எதிராக ராஜபக்சவையோ முன்னிறுத்த முடியாது என்பது உண்மை. இது இரண்டிற்கு இடையில் இதுவரை புலம்பெயர் அமைப்புக்கள் இதுவரை நிராகரித்துவந்த அரசியல் வேலைத்திட்டம் முன்வைக்கப்படவேண்டும். அந்த அரசியல் திட்டத்தின் அடிப்படையில் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைப் போராட்டத்திற்கான புதிய தலைமை உருவாக்கப்பட வேண்டும்.

ருத்திரகுமார் பசிலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை. மைத்திரி குழுவின் வெறும் அவதூறாகக்கூட இது இருக்கலாம். தேர்தலையும், புலி அடையாளத்தையும் மட்டுமே முன்வைத்து அரசியல் நடத்தும் பிழைப்புவாதிகளின் பஞ் டயலாக்குகள் இவ்வாறான அனுமானங்கள் தோன்றத் துணை செல்கின்றன.

ருத்திரகுமாருடன் பசிலின் பேரம் உண்மையானதா இல்லையா என்பதல்லப் பிரச்சனை. இவ்வாறான பேரங்களுக்கு வெற்றுச் சுலோகங்களாலும் அடையாளங்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ள அரசியல் வழிசெய்யும் என்பதே உண்மை.

பிரபாகரனையும் புலி அடையாளங்களையும் பயன்படுத்திப் பிழைப்பு நடத்தும் அரசியலை நிறுத்தி மக்கள் சார்ந்த வேலைத்திட்டத்தையும் கோட்பாட்டையும் முன்வைக்க வேண்டியதன் அவசியத்தை இன்றைய வாக்குப் பொறுக்கும் அரசியல் சூழல் உணர்த்துகிறது.

Exit mobile version