Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ரீ.பி.சி யின் எதிர்காலம் உங்கள் கரங்களில் : பணிப்பாளர் ராம்ராஜ்

ரி.பி.சி இடை நிறுத்தப்படக்கூடிய  அபாயம் குறித்து  அதன் பணிப்பாளர் ராமராஜ்  விடுத்துள்ள அறிக்கை

அன்பான நேயர்களுக்கு எனது வணக்கங்கள்,

வழமைக்கு மாறாக சற்று வித்தியாசமான ஒரு சூழ்நிலையில் உங்களிடம்; சில விடயங்களை பகிர்ந்துகொள்வதில் எமக்கு சற்று வருத்தந்தான்.

ஆனால் தற்போது எமது ரீபிசி எதிர்கொள்வது மிகவும் ஒரு இக்கட்டான சூழ்நிலை என்பதை நீங்கள் அறிவீர்கள் எமது தொடர்ச்சியான பொருளாதார சிரமநிலை எம்மை இன்று எமது வானொலியை மூடும் நிலைக்கு தள்ளியுள்ளது என்பதை உங்களுக்கு மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன்.

சுதந்திரமான கருத்தாடல்களுக்காக, அனைத்து தரப்பினருக்கும் ஒரு களத்தை வழங்குவதற்காக இந்த வானொலியை நாங்கள் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒன்பதரை ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனாலும், இன்று வரை இந்த வானொலியை கொண்டு நடத்துவதற்காக பொருளாதார ரீதியாகவும், ஏனைய பல வழிகளிலும் நாம் சந்தித்த சிரமங்கள் மிகவும் அதிகம் என்பதை நீங்கள் அனைவரும் அறீவீர்கள்

பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும், நாம் பல இன்னல்களை சந்தித்த போதெல்லாம் எமது நேயர்கள்தான் எமக்கு கடந்த காலங்களில் பல வழிகளிலும் உதவிகளை செய்துவந்தனர்.

எமது இருப்பை விரும்பாதவர்களும் சரி மாற்றுக்கருத்துக்கு இடமளிக்க விரும்பாதவர்களும் சரி எம்மை வன்முறைகள் மூலம் ஒடுக்க நினைத்த போதெல்லாம், எமது நேயர்கள் எமக்கு தந்த ஊக்கந்தான் எம்மை நிலை நிறுத்த உதவியது.
அந்த வகையில் எமது நேயர்களுக்கு எமது ரீபிசி என்றும் நன்றி உடையதாக இருக்கும்.

இருந்த போதிலும் அண்மைக்காலமாக நாம் மிகுந்த மோசமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கிவருகின்றோம்.
சில நிபந்தனைகளின் பேரில் எமக்கு உதவ சில அமைப்புகள் முன்வந்திருப்பதையும் ஒரு குறிப்பிட்ட அரசியல்கட்சி மொத்தமாக விலையை பேசி வாங்கிட முயற்சிப்பதையும் நான் உங்கள் முன்பாக கூறித்தான் ஆகவேண்டும்.

ஆனாலும், கருத்துச் சுதந்திரத்துக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய, அல்லது ஊறுவிளைவிக்கலாம் என்று நாம் சந்தேகப்படும் எந்த உதவிகளையும் நாம் ஏற்பதற்கு தயாராக இல்லை என்பதால், அத்தகைய உதவிகளைப்பெற்று, வானொலியை தொடரவோ அல்லது அது போன்ற சந்தர்ப்பவாதிகளின் கைகளுக்கு செல்லுவதையோ நாம் விரும்பவில்லை.

அதுமட்டுமல்லாமால் அப்படியாக வானொலி தொடர்வதை நேயர்களும் விரும்பமாட்டார்கள் என்பதை மாத்திரமல்லாமல், அது, ஊடக தர்மத்துக்கும் பொருந்தாது என்பதையும் நாம் அறிவோம்.

ஆகவே முடிந்தால், ஒரு சுதந்திர ஊடகத்தை நடத்துவது அல்லது அதனை மூடுவது என்ற முடிவுக்கும் வரவேண்டிய நிலையில் நாம் தற்போது இருக்கிறோம்.

அதனாலேயேதான், தற்போது எமது உயிரினும் மேலான இந்த வானொலியை தற்காலிகமாக மூடுவது என்ற இந்த முடிவை மிகவும் வருத்தத்துடன் உங்களுக்கு அறியத்தரும் துர்பாக்கிய நிலையில் நான் இருக்கிறேன்.

இருந்த போதிலும், அதற்கு மாற்றாக சில உதவிகளை செய்து இதனை தொடர வேண்டும் என்ற நோக்கிலான எமது நேயர்கள் சிலரது முயற்சிகளையும் நாம் அறிவோம். அந்த முயற்சிகளுக்கு நாம் தலைவணங்குகிறோம்.

ஆகவே தற்போது இந்த வானொலியை காப்பாற்றுவதா அல்லது தொடருவதா என்பது உங்களது கைகளில்தான் இருக்கிறது. எம்மைப் பொறுத்தவரை தற்போதைக்கு இதனை மூடுவதைத்தவிர எமக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை.
உங்கள் தரப்பில் இருந்து ஏதாவது உதவிகள் கிடைத்து மீண்டும் வானலையில் கலக்கக் கிடைத்தால் மீண்டும் மகிழ்ச்சியுடன் உங்களை சந்திக்கவும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

கலையக கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளின் சார்பில் இத்தனைகாலமும் ஒரு நடுநிலை ஊடகம் சிறப்பாக இயங்க நீங்கள் வழங்கிய உதவிகளுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.-

நன்றி

நிர்வாக பணிப்பாளர்

வீ.இராமராஜ்

V.Ramaraj

Thamil broadcasting corporation-London

00 44 7817063682

00 44 208 930 5313

vramaraj@hotmail.com
vramaraj@gmail.com
 
WWW.tbcuk.com
info@tbcuk.com

Exit mobile version