
சவூதி அர்ரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்ற ரிசானா நாபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.இந்தத் தகவலை வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.’
நான்கு மாத சிசுவொன்றை கொலை செய்த குற்றத்திற்காக ரிசானாவிற்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் ரிசானாவிற்கு 2007ம் ஆண்டு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.கடந்த 2005ம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்ற ரிசானா இரண்டு வாரங்களில் சிசுவொன்றை கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
கடவுச் சீட்டில் வயதை மாற்றி ரிசானா சவூதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசானாவிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் திருகோணமலையில் உள்ள அவரது உறவினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசானாவிற்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவூதி அரேபிய உள்துறை அமைச்சர் இளவரசர் நயீப் பின் அப்துல் அசீஸ் இன்று உத்தரவிட்டார்.இதன் அடிப்படையில் ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
எவ்வாறு அந்தக் குழந்தை மரணமடைந்தது என்பன்ன போன்ற அடிப்படைக் காரணங்கள் கூட விசாரணை செய்யப்படாமல் ரிசானாவைக் கொலை செய்துள்ளது சௌதியரேபிய சர்வாதிகார அரசு. இந்தக் கொலைக்குத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், வேலை வழங்கும் முகவர்கள் கும்பலும், வறுமையை மக்கள் மீது சுமத்திவிட்டு சிங்கள பௌத்த பூமியாக இலங்கையை மாற்றுவதாகக் கூறும் இலங்கை அரச பாசிஸ்டுகளுமே ஆவர்.
தவிர, இலங்கை முஸ்லீம்களை தலைமைதாங்குவதாகக் கூறும் கொழும்பு சார் பல்தேசிய வியாபாரிகள் கூட்டம், வறுமையில் வாடும் ஏழை முஸ்லீம்களைக் கண்டுகொள்வதிலை. அரேபிய நாடுகளுக்கு மதச் சுற்றுலா சென்று மகிழும் இவர்கள் ரிசானாவைக் கண்டுகொண்டதில்லை. சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒடுக்குவதையே தனது சிந்தனையாகக் கொண்டுள்ள மகிந்த கும்பல் அரசு என்ற அடிப்படையில் ரிசானாவின் விடுதலைக்கு குறிப்பிடத்தக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.