Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ரிசானா கொலையை கண்டிப்போம்! எங்கும் எவருக்கும் வீட்டுப்பணி செய்ய மறுப்போம்!! : இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்

இலங்கையை சேர்ந்த ரிசானா நபீக்கை ஷாரியா சட்டமென்ற ரீதியில் அல் குறானுக்கும் அரேபிய நாகரீகத்திற்கும் அவதூறு செய்யும் வகையில் பகிரங்கமாக கழுத்து துண்டாடி கொலை செய்யப்பட்டதை மிருகங்கள் கூட ஏற்க முடியாத நிலையில் மனிதர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்?

அதனால் தொட்டாட்டு வேலை செய்வதற்கும் ஊத்தை கழுவுவதற்கும், காமுகர்களின் இச்சை தீர்ப்பதற்கும் இலங்கை மாதாவின் எந்த ஒரு பெண்ணும் சவுதி அரேபியா உட்பட எந்த ஒரு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மட்டுமல்ல சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கூட அனுப்பப்பட கூடாது என்று வலியுறுத்துவதுடன் என்ன தான் பசி பட்டினி என்றாலும் எந்த ஒரு காட்டு மிராண்டிகளுக்கும் கடமை புரிய செல்ல வேண்டாமென்று இலங்கை வாழ் அனைத்து சமூகங்களையும் இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றது.

இது தொடர்பாக இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ரிசானாவின் பகிரங்க சிரைச்சேதத்திற்கு பின்னும் மெளனம் காத்து அடக்குமுறையாளரிடம் மண்டியிட்டு நீதி கேட்க எவருக்கும் முடியாது. சர்வதேசம் என்பதோ இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசோ பாதிக்கப்பட்டவருக்கு அனுதாபம் தெரிவிப்பதையன்றி எதையும் செய்யப்போவதில்லை. வீட்டு வேலை சிறுவர் வேலை என்றெல்லாம் பேய்க்காட்டி உழைப்பை உறிஞ்சுவதையும் சுரண்டுவதையும் நாம் கண்டிக்கிறோம்.

வீடுகளில் தொட்டாட்டு வேலை செய்வதை உழைப்பாக ஏற்க மறுக்கிறோம். எஜமானர்களின், எஜமானிகளின் முற்றம், பட்டி தொட்டி, படுக்கையறை, குழியலறை எல்லாம் கவனிப்பதற்கு வேலைக்கமர்த்தும் அவலத்தை நாம் எதிர்க்கிறோம். அவ்விடயங்கள் அவரவர்களின் தனிப்பட்ட விடயமாகும். இதனை புரிந்து கொண்டு இலங்கை மக்களாகிய நாம் செயற்படுவோமாக!

இலங்கை அரசுக்கு வருமானம் தேடிக்கொடுப்பதாக கூறிக்கொண்டு வீட்டுப்பணிப்பெண்கள் என்ற நாமத்தை சுமந்து கொண்டு இலங்கைப் பெண்கள் சவுதிக்கு மட்டுமல்ல சுவர்க்கத்திற்கு சென்றால் கூட நாம் எதிர்ப்போம், கண்டிப்போம், நிராகரிப்போம் ஏனெனில் வீட்டுப்பணிப்பெண்கள் என்பது தொழில் உழைப்பு என்ற வரைவிலக்கணங்களுக்குள் அடங்காது, கொத்தடிமை என்ற கொடும் சொல்லுக்கும் செயலுக்கும் உட்பட்டதாலாகும்.

எனவே இலங்கை பெண்கள் மட்டுமன்றி உலகத்தில் உள்ள எந்தவொரு பெண்ணும் பணிப்பெண் என்ற நாமகரத்துடன் நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், ஆணாதிக்கம் என்பவற்றுக்கு உட்படக்கூடாது என்று நாம் வலியுறுத்தி கூறுகிறோம்.

இணை அழைப்பாளர்,
இ,தம்பையா
இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்

Exit mobile version