03.08.2008
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு அவரது கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளியான நளினி வருத்தம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் படுகொலை வழக்கில் உண்மையான சதிகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரில் நளினியும் ஒருவராவார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலையீட்டைத் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
தற்போது வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, பி டி ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள செவ்வியில், அவரது வழக்கறிஞர் இளங்கோவன் மூலமாக மாலைமலர் செய்தித்தாளினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.
இந்தச் செவ்வியில் அவர், “ராஜீவ் காந்தி ஒரு மாபெரும் தலைவர்; அவரது மறைவு நாட்டுக்குப் பேரிழப்பாகும். அவரது படுகொலைக்கு நான் வருந்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் உண்மையான சதிகாரர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
உண்மையான சதிகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள நளினி “இல்லை உண்மையான கொலையாளிகளான சிவராசன் சுபா மற்றும் தாணு ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டார்கள்’ என்று கூறியிருக்கிறார்.
ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த குழுவில் சிவராசன் தாணு சுபா நளினி உள்ளிட்ட 5 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களில் மனித வெடிகுண்டாகச் செயல்பட்ட தாணு, படுகொலை நடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ந் தேதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். அதன் பின்னர் சிவராசனும், சுபாவும் பெங்களூரில் சயனைட் விஷம் அருந்தி இறந்தனர். படுகொலை நிகழ்த்திய குழுவில் தற்போது உயிரோடு இருப்பவர் நளினி மட்டுமே ஆகும்.
இதேவேளை சோனியாவின் மகள் பிரியங்கா வதேரா தன்னைச் சிறையில் வந்து சந்தித்தது ஒரு வரலாற்று நிகழ்ச்சி என்றும் நளினி குறிப்பிட்டுள்ளார்.