தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள், 11 ஆண்டுகளுக்கு பிறகு அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீலால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து 3 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்கள் 3 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதித்தது.
இந்நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.
தங்கள் கருணை மனுவை நிராகரிக்கும் விஷயத்தில் மத்திய அரசு நீண்ட கால அவகாசத்தை எடுத்துக்கொண்டதால் 3 பேருடைய தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் சிவ்கீர்த்தி சிங் ஆகியோரை கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் வாகன்வதி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் 3 பேருடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
“கருணை மனுவின் மீது பரிசீலனை செய்வதற்கு அதிக காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால் மட்டுமே குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை. இவர்களின் கருணை மனு மீதான பரிசீலனையை மேற்கொள்வதில் அதிக கால தாமதம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் தூக்கு தண்டனையை குறைக்கும் அளவில் விளக்க முடியாததாகவோ, காரணங்கள் அற்றோ, தவறாகவோ ஏற்பட்ட காலதாமதம் அல்ல அது.
கடந்த 2000வது ஆண்டில் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின்போது இந்த கருணை மனுவின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2005 ஆம் ஆண்டு மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும் கருணை மனு தொடர்பான கோப்புகள் மீண்டும் வெளியில் எடுக்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரை இந்த மனு ஜனாதிபதியிடம் நிலுவையில் இருந்தது.
இருந்தாலும் இந்த கால தாமதத்துக்கு ஜனாதிபதியே பொறுப்பு என்று தெரிவிக்க முடியாது. மேலும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ள தீர்ப்பில் கூறியுள்ள படி, மிகவும் அதிகமான கால தாமதத்தின் அடிப்படையில் இவர்களுடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க இந்த வழக்கில் முகாந்திரம் எதுவும் இல்லை. ஏன் என்றால், அந்த தீர்ப்பில் குறிப்பிட்டது போல இந்த வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் சிறையில் எவ்வித துயருக்கும் ஆளாகவில்லை.
எந்த வகையான சித்ரவதைக்கும் அவர்கள் ஆளாகவில்லை. மனித தன்மையற்று நடத்தப்படவில்லை. சொல்லப்போனால் அவர்கள் சிறையில் இருந்தபோது படித்து பட்டம் பெற்றிருக்கிறார்கள். சிறையில் இசை, பாடல்கள், கண்காட்சி என்று பல வகையான கேளிக்கைகளுடன் நாட்களை கழித்திருக்கின்றனர். இதனை குற்றவாளிகளே தங்களுடைய கருணை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த குற்றவாளிகள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவிலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலும் தாங்கள் புரிந்த கொடூரமான செயல் பற்றி எவ்வகையிலும் வருந்தவில்லை. எனவே, கருணை மனுவை பரிசீலிப்பதற்கு ஏற்பட்ட கால தாமதத்தை மட்டுமே காரணமாக வைத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கூடாது.” இவ்வாறு வாகன்வதி வாதிட்டார்.
மனுதாரர்களில் ஒருவரான முருகன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் யுகி சவுத்ரி, மத்திய அரசு வழக்கறிஞரின் வாதங்களை முழுமையாக மறுத்தார். அவர் கூறியதாவது:-
“தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் சிறையில் தங்கள் நாட்களை எந்த வகையிலும் நிம்மதியாக கழிக்கவில்லை. 2000வது ஆண்டு கருணை மனு தாக்கல் செய்த நாளில் இருந்து 8 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கில் இருந்து தாங்கள் விடுவிக்கப்படுவோமா, இல்லையா? என்ற அச்சத்திலேயே அவர்கள் சிறையில் வாடியிருக்கிறார்கள். ஏறத்தாழ 5 ஆண்டுகள் இவர்களுடைய வாழ்க்கை நடைப்பிணம் போல கழிந்திருக்கிறது. எனவே அரசு தரப்பு வழக்கறிஞர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.” இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களும் நேற்று முடிவடைந்தன. அதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
குற்றங்கள் நிரூபிக்கப்படாமல், போலிக் குற்றங்களின் அடிப்படையில் சட்டத்திற்குப் புறம்பாக அடைத்துவைக்கப்பட்டிருக்கும் நிரபராதிகள் விடுதலையாகக் கூடாது எனபதில் அறிக்கைப் புயல் செயலலிதாவும் மத்திய அரசும் தீவிரமாக உள்ளனர்.