சென்னையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை சென்னை கொடுங்கையூர் சின்னாண்டிமடம், சிட்கோ சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலையின் தலை உடைக்கப்பட்டு கீழ் பகுதியும் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டது.
இதனை அறிந்த காங்கிரஸ் தமிழ்நாடு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ரஜீவ் காந்தியில் சிலையை உடைத்தவர்களை மாலைக்குள் கைது செய்வதாகக் கூறிய உறுதி மொழியை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
சந்தேகத்தின் பெயரில் இரு பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுப்பிர சுவாமியின் அலுவலகம் இனம் தெரியாதோர் தாக்குதல்
ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் அலுவலகம் இனம் தெரியாதோரினால் தாக்கப்பட்டதோடு, சூறையாடப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மதுரை பிபி குளம் பகுதியில் உள்ள ஜனதாக் கட்சி அலுவலகத்தினுள் புகுந்த குழு ஒன்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், சில பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
ம.தி.மு.க தலைவர் வைகோ மற்றும் அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோரின் கைது நடவடிக்கையை வரவேற்று சுப்பிரசுவாமி அறிக்கை விடுத்த சம்பவத்தை அடுத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலின் போது ஜனதாக் கட்சியின் மாவட்டத் தலைவர் புருஷோத்தமனையும் அக்குழு கடுமையாகத் தாக்கியுள்ளது.